சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பிரிவு ஆகியவற்றுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. மொத்தம் 3 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பொது பிரிவில் முதற்சுற்று கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்ய கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதில் 22 ஆயிரத்து 761 பேர் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 18 ஆயிரத்து 738 பேர் தங்களுக்கான விருப்பமான கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து இருக்கின்றனர். அவர்களில் 17 ஆயிரத்து 818 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கும் ஆன்லைனில் கடந்த 28ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்றில் அழைக்கப்பட்ட 1, 074 பேரில், 947 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்திருந்தனர். இவர்களில் 937 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனை மாணவ-மாணவிகள் உறுதி செய்ய நாளை(செவ்வாய்க்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடங்களை ஏற்று, உறுதி செய்ய நாளை மறுதினம் (புதன்கிழமை) கடைசிநாள் ஆகும். பின்னர் உறுதி செய்த இடங்களில் 6ம் தேதிக்குள் சேரவேண்டும். சேர்ந்தவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை 9ம் தேதி வழங்கப்படும்.