புழல்: புழல் ஒற்றவாடை தெருவில் உள்ள சுப்பிரமணி கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும், என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புழல் ஒற்றவாடை தெருவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வள்ளி தெய்வ சேனா சுப்பிரமணி திருக்கோயில் உள்ளது. இந்நிலையில், கோயில் குளம் முறையாக பராமரிக்கப்படாததால், ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளது. கடந்த மழைகாலத்தில் விழுந்த குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் பாசி படர்ந்து அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் குளத்தில் இறங்கி நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்து போன சுற்றுச்சுவரை அகற்றி புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.