கும்பகோணம்: கும்பகோணம் அருகே ஓரின சேர்க்கையின்போது போதை மருந்து கொடுத்ததில் மயங்கி விழுந்த வாலிபரை தலை துண்டித்து கொன்று புதைத்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரிடம் தொடர்பில் இருந்ததும், அதனால் வேறு யாரையாவது இதுபோல் கொன்று புதைத்தாரா என அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்த பாண்டியன் மகன் அசோக்ராஜ் (27). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். திருமணமாகாத இவர் கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக தனது பாட்டி பத்மினி வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் பண்டிகை முடிந்து கடந்த 13ம் தேதி அவசர வேலையாக சிதம்பரத்துக்கு செல்வதாக கூறிவிட்டு அசோக்ராஜ் சென்றார்.
அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கடந்த 15ம் தேதி சோழபுரம் போலீசில் பத்மினி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடினர். மேலும் அசோக்ராஜின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அசோக்ராஜ் சென்று வந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அவர் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சியில் உள்ள கீழ தெருவிற்கு சென்றது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் அசோக்ராஜூக்கு நெருக்கமான கட்டிட மேஸ்திரியும், சித்த வைத்தியருமான கேசவமூர்த்தியிடம் (50) போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கேசவமூர்த்தி கடந்த 5 வருடங்களாக சித்த வைத்தியம் செய்து வந்துள்ளார். இவரிடம், உடல்நிலை சரியில்லாத அசோக்ராஜ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் கேசவமூர்த்தி ஓரின சேர்க்கையில் (ஹோமோ செக்ஸ்) இருந்த ஆர்வத்தில் தன்னிடம் வைத்தியம் பார்க்க வரும் இளைஞர்களிடம் தகாத உறவுகள் கொண்டுள்ளார். கடந்த 13ம் தேதி அசோக்ராஜிடம், இதேபோல் ஓரின சேர்க்கையில் ஈடுபட கேசவமூர்த்தி முயன்றுள்ளார். அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், அவருக்கு ஆண்மை வீரியத்திற்காக ஒருவித போதை மருந்தை கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோக்ராஜ் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்து அசோக்ராஜின் உடலை மறைப்பதற்காக அவரது தலையை துண்டித்து சடலத்தை தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளார். மேலும் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க அசோக்ராஜ் எழுதியது போல் கடிதமும் எழுதி அவரது வீட்டுக்கு தபாலில் அனுப்பி உள்ளார். அதில் தனக்கு ஆண்மை குறைவு இருக்கிறது.
இதனால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் சோழபுரத்தை சேர்ந்த கேசவமூர்த்தி என்ற வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். நான் இறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம் என எழுதி அனுப்பியதையும் கேசவமூர்த்தி விசாரணையில் ஒப்பு கொண்டார். இதையடுத்து நேற்று மாலை கேசவமூர்த்தி கூறிய இடத்தில் கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஷ்வரன் முன்னிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகி இருந்ததால் அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து நேற்று மாலை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கொலையாளி கேசவமூர்த்திக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
இருவருமே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதையடுத்து கேசவமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சோழபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, மேலும் பலரிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டாரா, வேறு யாரையும் இதுபோல் கொலை செய்து புதைத்துள்ளாரா, சைக்கோ சித்த வைத்தியரா என்ற கோணத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலையும் விசாரணை நீடித்தது. இதையடுத்து அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.