குளச்சல்: குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். கட்டுமரம், வள்ளங்கள் குறைவான தூரம் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து மின் தடையும் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் குளச்சல் பகுதி கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த கட்டுமரங்கள் பாதுகாப்பாக மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 20 விசைப்படகுகள் வழக்கம்போல் இன்று காலை கரை திரும்பின. இவற்றுள் அயரை, கொழிச்சாளை போன்ற மீன்கள் கிடைத்தன. இந்த மீனவர்களை விசைப்படகினர் ஏலக்கூடத்தில் இறக்கி வைத்து விற்பனை செய்தனர். கட்டுமரங்கள், வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.