சேலம்: சேலத்தில் 65 வயதில் 2வது திருமணத்திற்கு வரன் தேடிய தந்தையை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (65). வனவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி சண்முகவள்ளி. இவர்களுக்கு தமிழழகன் (23), கிரிவெங்கடேஷ் (17) என்ற இரு மகன்கள் உள்ளனர். தமிழழகன் பி.காம் படித்து விட்டு, கொண்டலாம்பட்டியில் வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். 2வது மகன் கிரிவெங்கடேஷ் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். சண்முகவள்ளிக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து செல்வகுமார் இரு மகன்களுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில் செல்வகுமார் 2வது திருமணம் செய்வதற்காக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதையறிந்த மூத்த மகன் தமிழழகன், தந்தையிடம் இதுபற்றி வாக்குவாதம் செய்துள்ளார். நேற்று காலையிலும் தந்தைக்கும் மகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் செல்வகுமார் முதலில் மகன் தமிழழகனை இரும்பு பைப்புகளை கழற்றும் ரிங்சால் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தமிழழகன், பைப் ரிங்சை கொண்டு தாக்கியதில், செல்வகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், கத்தியால் தந்தையின் கழுத்தையும் அறுத்துள்ளார். ரத்த வௌ்ளத்தில் கிடந்த செல்வகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தமிழழகனை கைது செய்தனர். தமிழழகனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னை இருந்துள்ளது. தந்தை செல்வகுமாரிடம் பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.