திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே இன்று காலை சுமார் 80 அடி கடல் உள்வாங்கியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் கார்த்திகை மாதத்தில் அமாவாசை இன்று (நவ. 30) காலை 10.46 மணிக்கு தொடங்கியது. நாளை (டிச. 1) நண்பகல் 12 மணி வரை உள்ளது.
இதையொட்டி கடந்த சில தினங்களாக கோயில் அருகே கடல் அரிப்பு அதிகமாகவும், அய்யா கோயில் பகுதியில் சுமார் 80 முதல் 100 அடி வரை அவ்வப்போது உள்வாங்கி காணப்பட்டது. நேற்று மாலையும் கடல் சுமார் 70 அடியும், இன்று காலை சுமார் 80 அடியும் உள்வாங்கியது. இருந்தபோதிலும் வழக்கமாக வரும் பக்தர்கள் மற்றும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி உள்வாங்கிய கடலில் வெளியே தெரிந்த பாசிபடர்ந்த பாறைகள் மீது நின்று ஆச்சரியத்துடன் பார்த்தும், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அமாவாசை மற்றும் புயல் எச்சரிக்கையால் கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.