சென்னை: பேரவை கூட்டத்துக்கு பின் தலைமைச்செயலக வளாகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி: பேரவை விவாதத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்துகளை கூறிவிட்டு, இறுதியாக வெளிநடப்பு செய்வதற்கு வேண்டுமென்றே ஒரு காரணத்தை தேடி கண்டுபிடித்து, அதிமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு விட்டதாக சாக்கு கூறி வெளிநடப்பு செய்தனர். 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை கூட்டி, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் என்று உருவாக்குகின்றனர். இந்த சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது.
ஆளுநர் ஒப்புதலை தரவில்லை. 2020-21 வரை அந்த ஓராண்டு காலமும் ஆளுநருடைய பரிசீலனையில் வைத்திருந்தார். அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி மற்றும் அமைச்சரவையும் எந்த ஒரு முன்னெடுப்புகளும் எடுக்கவில்லை. 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2023 ஏப்.21ம் தேதி ஒரு சட்ட முன்வடிவை கொண்டு வந்து, ஆளுநர் துணைவேந்தர் நியமிப்பதற்கு பதிலாக தமிழ்நாடு அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் என்கின்ற அந்த திருத்தத்தை கொண்டு வந்தோம். ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களில், தற்போதைய அரசு அனுப்பிய மசோதா, 2023 ஏப்.21ம் தேதி அந்த சட்ட முன்வடிவையும், அதேபோல 2020ம் ஆண்டு ஜெயலலிதா பெயர் சூட்டி அனுப்பப்பட்ட அந்த மசோதாவையும் ஆளுநர் இப்போதுதான் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் பெயர் சூட்டியதை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு அந்த சட்ட முன்வடிவும், கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பியிருக்கக்கூடிய துணைவேந்தர்களை அரசே நியமனம் மேற்கொள்ளும் என்ற அந்த மசோதாவும் திருப்பி அனுப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யாமல் மறுபடியும் சரிப்படுத்தி, உடனடியாக மீண்டும் அனுப்பியுள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட வேண்டும் என ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவுக்கு உயிர் கொடுத்து மீண்டும் அதை ஏற்று அரசு வைக்கும் போது, அதனை வரவேற்கும் தார்மீக கடமை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய கட்சியினருக்கு உண்டு. இருப்பினும், என்ன மசோதா என்று கூட தெரியாமல் வெளிநடப்பு செய்ய காரணம் வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு சாக்கை கண்டுபிடித்து சென்றுள்ளனர்.
இது முழுக்க முழுக்க அரசியல். இதில், அதிமுகவிற்கும் – பாஜவிற்கும் உள்ள ரகசிய தொடர்பு வெளியே வந்துள்ளன. ஜெயலலிதாவின் பெயர் கூட வைக்காமல் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கேட்க திராணி இல்லாமல், மீண்டும் அந்த மசோதாவை அனுப்புகிறபோது, அதை வரவேற்க கூட தற்போது ஜெயலலிதாவின் பெயராலேயே கட்சியை நடத்திக்கொண்டு புகழ்பாடுபவர்கள் ஜெயலலிதாவின் பெயரை பல்கலைக்கழகத்துக்கு வைக்கக்கூடிய மசோதாவை கூட வரவேற்பதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ மனம் வராமல், பாஜவுடன் இருக்கக்கூடிய நட்புதான் முக்கியம், ஏதாவது ஒரு வார்த்தை கூறி விட்டால் டெல்லியில் கோபித்துக்கொள்வார்களோ என பயத்தின் காரணமாக வெளிநடப்பு செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். என்ன மசோதா என்று கூட தெரியாமல், வெளிநடப்பு செய்ய காரணம் வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு சாக்கை கண்டுபிடித்து சென்றுள்ளனர். இது முழுக்க முழுக்க அரசியல்.