புதுடெல்லி: காபி கொட்டைகள் வரத்து குறைவால் காபி விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிட்டாலும் பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. உலக அளவில் பிரேசில், வியட்நாமில் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவின் சிக்கமகளூருவில் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து தரமான காபி கொட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளனர். ரோபஸ்டா மற்றும் பீபரி ரக காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.580 ஆக இருந்தது. தற்போது அது ரூ.650 வரை விற்கப்படுகிறது. ரொபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா ரக விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. அடுத்த காலாண்டில் மேலும் 10 சதவீதம் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அரேபிகாவிற்கும் ரொபஸ்டாவிற்கும் இடையேயான விலை வேறுபாடு குறைந்துள்ளதால், அரேபிகா ரக காபிக்கு முக்கியத்துவம் அதிகரித்து உள்ளது.