திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோட்டில் போலீசார் பின்தொடர்ந்து சென்றதால் கார் கவிழ்ந்து பிளஸ் 2 மாணவன் பலியானார். இது தொடர்பாக எஸ்ஐ உள்பட 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா பகுதியை சேர்ந்தவர் பர்ஹாஸ் (17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 25ம் தேதி பள்ளியில் ஓணம் விழா நடந்தது. அப்போது பர்ஹாஸ் பள்ளிக்கு தனது காரை கொண்டு வந்திருந்தார். பள்ளிக்கு அருகே காரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது கும்பளா சப்-இன்ஸ்பெக்டர் ரஜித் தலைமையிலான போலீசார் ஒரு ஜீப்பில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜீப்பை நிறுத்திவிட்டு காரில் இருந்தவர்களிடம் விசாரிக்க போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் பர்ஹாஸ் காரை வேகமாக இயக்கி சென்றார். அவரை பின் தொடர்ந்து போலீசாரும் சென்றன. இதனால் வேகமாக சென்ற கார் சுமார் 5 கிமீ தொலைவில் ஒரு இடத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த பர்ஹாசை மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பர்ஹாஸ் இறந்தார். போலீசார் பின் தொடர்ந்து சென்றதால் தான் கார் கவிழ்ந்தது என்று பர்ஹாசின் பெற்றோர் புகார் கூறினர். இது குறித்து கேரள முதல்வருக்கும், மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்தனர். ஆனால் தாங்கள் காரை பின் தொடரவில்லை என்றும், அதிவேகமாக சென்றது தான் விபத்திற்கு காரணம் என்றும் போலீசார் கூறினர். இந்தநிலையில் கும்பளா சப்-இன்ஸ்பெக்டர் ரஜித் மற்றும் தீபு, ரஞ்சித் ஆகிய போலீசார் நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காகவே 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.