மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் தொடர் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. சல்மான்கானின் நெருங்கிய நண்பரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் கடந்த மாதம் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சல்மான் கானுக்கு பல மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் தான் லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி எனவும், மானை கொன்றதற்காக சல்மான் கான் எங்களது கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் ரூ5 கோடி தர வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால் சல்மான் கான் கொல்லப்படுவார்.
எங்களது கும்பல் செயலில் உள்ளது என கூறினார். இதுகுறித்து ஒர்லி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மிரட்டல் விடுத்த கர்நாடக மாநிலம் ஹாவேலி பகுதியை சேர்ந்த பாஹிகராம் ஜலராம் பிஷ்னோய்(35) என்பவரை கைது செய்துள்ளனர். அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் விசாரணைக்காக மும்பை அழைத்து வந்துள்ளனர்.