புதுடெல்லி: ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ெதலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த புர்கான் ஹுசைன் (40) என்பவர், விமானம் புறப்படும் போது விமானத்தின் அவசர கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமான பாதுகாப்பு அதிகாரிகளிடம் புர்கான் ஹுசைன் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்கள் விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட புர்கான் ஹுசைன் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விமானம் புறப்படும் நேரத்தில் அவசரகால கதவுக்கு அருகில் அமர்ந்திருந்த புர்கான் ஹுசைன் என்பவர், திடீரென அவசர கதவை திறக்க முயன்றார். உடனடியாக அவசரகால கதவின் உறை சரி செய்யப்பட்டது. பின்னர் அந்த பயணியை மற்றொரு இருக்கைக்கு விமான ஊழியர்கள் மாற்றி அமரவைத்தனர். தற்போது புர்கான் ஹுசைனிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.