நாகை: தென் தமிழக உள் மாவட்டங்கள் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஒரு சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் நேற்றும் மழை பெய்தது. நாகையில் நேற்றிரவு 9 மணி தொடங்கி இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. வேளாங்கண்ணி, திருமருகல், கீழ்வேளூரில் நேற்றிரவு 9 மணி முதல் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் பரவலாக நேற்றிரவு மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி பகுதியில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை சாரல் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. மழையால் புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல், கீரனூர் பகுதிகளில் கோடை சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 100 ஏக்கர் நெற்பயிரில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் சாய்ந்துள்ளது. இதனால் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் துறையூர், தா.பேட்டை, மண்ணச்சநல்லூர், துவரங்குறிச்சி, மணப்பாறை பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது.
இதேபோல் திருச்சி மாநகரில் இரவு 7 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று 4வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2,000 பைபர் படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம்
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. மேலும், 21ம் தேதி வரை (நாளை) கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ.வரை பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் கட்டுமர மீனவர்கள் மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துள்ள நிலையில் இன்று (திங்கட்க்கிழமை) காலை முதல் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடற்கரை பகுதியில் காற்றும் வீசுகிறது. இதனால் குளச்சல் பகுதி வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.