ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்வீட் கடை உரிமையாளர் கொலை வழக்கில், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க 2வது மனைவியே கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 2வது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சுப்புராஜா மடத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (43). ஸ்வீட் கடை உரிமையாளரான இவர் டிரஸ்ட் ஒன்றும் நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஸ்வீட் கடையில் வேலை செய்த காளீஸ்வரி (23) என்ற பெண்ணுடன், சிவக்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதில் காளீஸ்வரி கர்ப்பமான நிலையில், அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இதனிடையே சிவக்குமார் தனது ஸ்வீட் கடையை நடத்த முடியாமல், 6 மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டார். சென்னையில் உள்ள பிரபல ஸ்வீட் கடையில் மேனேஜராக பணியாற்றி வந்தார். மனைவி காளீஸ்வரி, மகனுடன் ராஜபாளையம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு சிவக்குமார் சென்னையில் இருந்து ராஜபாளையம் வந்தார். காலையில் மனைவி, மகனுடன் தீபாவளி கொண்டாடிவிட்டு, மாலையில் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர், இஎஸ்ஐ காலனியில் உள்ள தனது தந்தையின் சமாதியில் வழிபடுவதற்காக குடும்பத்துடன் சென்றார். அப்போது, அங்கு 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை சிவக்குமார் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள், மனைவி, மகன் கண்முன்பே சிவக்குமாரை வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சிவக்குமாரின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 2வது மனைவி காளீஸ்வரி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் சிவக்குமாரின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக கள்ளக்காதலனை ஏவி காளீஸ்வரியே கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. போலீசார் கூறுகையில், ‘‘கொலையான சிவக்குமாருக்கு சொந்தமான வீடு சுப்புராஜா மடத்தெருவில் உள்ளது. இந்த வீட்டில் ஆவாரம்பட்டியை சேர்ந்த ஐயப்பன் (27) என்ற யோகா மாஸ்டர் வாடகைக்கு வசித்து வந்தார். சிவக்குமார் சென்னை சென்ற பிறகு ஐயப்பனுக்கும், காளீஸ்வரிக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார் மனைவியை கண்டித்துள்ளார். அதற்கு காளீஸ்வரி, இனிமேல் தவறு செய்யமாட்டேன் என கதறி அழுதுள்ளார். ஆனால் சிவக்குமார் சென்னையில் இருந்ததால் உறவு ெதாடர்ந்தது. இருவரும் சேர்ந்து சிவக்குமாரை தீர்த்துக்கட்டிவிட்டு, பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்து ஆடம்பரமாக வாழலாம் என முடிவு செய்தனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு சென்னையில் இருந்து வந்த சிவக்குமார், தனது தந்தையின் சமாதிக்கு சென்று வழிபட வேண்டுமென கூறியுள்ளார். இதுகுறித்து காளீஸ்வரி, யோகா மாஸ்டர் ஐயப்பனுக்கு தகவல் தெரிவித்தார். மாலையில் மனைவி, மகனுடன் தந்தையின் சமாதியை வழிபட சிவக்குமார் வந்தார். அப்போது அங்கிருந்த ஐயப்பன், அவரது நண்பர்கள் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (27), ஆப்பனூரை சேர்ந்த மருதுபாண்டி (22) ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை மிரட்டினர். அவர்களுடன் காளீஸ்வரியும் சேர்ந்து கொண்டு, பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை எல்லாம் தனது பெயருக்கு மாற்றித் தரும்படி மிரட்டினார். இதற்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சிவக்குமாரை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். சிவக்குமார் இறந்தபிறகு காளீஸ்வரிதான் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சிவக்குமாரின் உடல் மருத்துவமனையில் இருந்தபோது கதறி அழுவதுபோல் காளீஸ்வரி நடித்துக் கொண்டிருந்தார். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினோம். இதில் உண்மை வெளியானது. இதையடுத்து கொலையாளிகள் காளீஸ்வரி, யோகா மாஸ்டர் ஐயப்பன், விக்னேஷ், மருதுபாண்டி ஆகியோரை கைது செய்துள்ளோம்’’ என்றனர்.
* கொலையான சிவக்குமாருக்கு சொந்தமான வீடு சுப்புராஜா மடத்தெருவில் உள்ளது. இந்த வீட்டில் ஆவாரம்பட்டியை சேர்ந்த ஐயப்பன் (27) என்ற யோகா மாஸ்டர் வாடகைக்கு வசித்து வந்தார். சிவக்குமார் சென்னை சென்ற பிறகு ஐயப்பனுக்கும், காளீஸ்வரிக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது.