இம்பால்: மணிப்பூரில் மாயமான மெய்டீஸ் இனத்தை சேர்ந்த நபரை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. மணிப்பூரில் நீடிக்கும் இனக்கலவரத்தின் தொடர்ச்சியாக மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகள், 3 பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றதுடன், மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 2 ஆண்களையும் தீ வைத்து எரித்து கொன்றனர். இதனால் ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வந்தது. மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் மாயமான 3 குழந்தைகள், 3 பெண்களும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மெய்டீஸ் சமூகத்தை சேர்ந்தவர்கள் மாநில அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், தீ வைத்து எரித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வன்முறை பரவுவதை தடுக்க இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இம்பாலின் மேற்கில் உள்ள லொய்டாங் குனேவ் கிராமத்தை சேர்ந்தவர் லைஷ்ராம் கமல்பாபு சிங்(55). மெய்டீஸ் இனைத்தை சேர்ந்த இவர் குகி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளால் சூழப்பட்ட காங்போங்பியில் உள்ள லீமாகோங் ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த திங்கள்கிழமை(நவ.25) பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும், ராணுவமும் இணைந்து மாயமான லைஷ்ராம் கமல்பாபு சிங்கை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆளில்லா விமானங்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் மாயமான நபரை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. லைஷ்ராம் கமல்பாபு சிங் பணியாற்றிய ராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்எல்ஏ, அமைச்சர் வீடு தாக்குதல் பெண் கைது
இதனிடையே நவம்பர் 16ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக திங்பைஜாம் சுசீலா தேவி என்ற பெண் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.