சென்னை: இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு (ஓய்வு) அவர்களின் தந்தையார் வெங்கடாசலம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். வெங்கடாசலம் சாமானிய பின்னணியில் இருந்து. தனது உழைப்பால் தனது இரு மகன்களை இந்திய ஆட்சிப் பணியாளர்களாகவும் மகள்களைப் பேராசிரியர்களாகவும் ஆக்கிச் சமூகத்துக்கு அளித்த பொறுப்புமிக்க தந்தை ஆவார்.
தமது பிள்ளைகள் அனைவருக்கும் தூய தமிழில் இனிமையான பெயர்களைச் சூட்டித் தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தி அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். அன்னாரை இழந்து தவிக்கும் இறையன்பு, திருப்புகழ் உள்ளிட்ட அவரது குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.