பல்லாவரம்: குன்றத்தூர் அருகே சென்டர் மீடியனில் மோதிய சொகுசு கார் சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். குன்றத்தூரில் இருந்து குமணன்சாவடி வரை செல்லும் சாலையில் தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், குன்றத்தூர் அடுத்த சிவன்தாங்கல் பகுதியில் இருந்து சென்டர் மீடியன் தொடங்குகிறது. அதுவரை வரும் வாகனங்கள், சென்டர் மீடியன் தொடங்குவது தெரியாமல் இரவு மற்றும் பகல் நேரங்களில் அந்த சென்டர் மீடியன் மீது மோதி விபத்துகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குன்றத்தூரில் இருந்து நேற்று பூந்தமல்லி நோக்கி சென்ற சொகுசு கார், இந்த சென்டர் மீடியனில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து காருக்குள் சிக்கிய ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். இதில் அதிஷ்டவசமாக டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த காரை, கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டது. இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதால் சிக்னல் அல்லது ஒளிரும் மின்பட்டைகளை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.