சென்னை: தமிழகத்துக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்ட துறை சார்ந்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை பள்ளிகளில் 1.85 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். ஜெர்மனிக்கு மாணவர்கள் சென்று வந்துள்ளனர். வெளி நாடுகளில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகள், கற்றல் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.
அதன் மூலம் மொழி தவிர அறிவும் முக்கியம் என்பதை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் குழுவினர் சென்று மாணவர்களையும், கல்வியாளர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற்று, மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட உள்ளது. தேசிய கல்வி கொள்கையை பொறுத்தவரையில் ஒன்றிய அரசு பெரியண்ணன் போல நடந்துகொள்கிறது. அதில் தெரிவிக்கப்பட்ட ஷரத்துக்கள் தமிழகத்துக்கு தேவையில்லை என்பது எங்கள் முடிவு. ஒன்றிய அரசு நிதி வழங்காமல் போனதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
அவர்களின் நிதி தேவை என்பதால், அதை வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். மாணவியருக்கு வழங்கப்படும் நிதி இதனால் தடைபடுகிறது. ஒன்றிய அரசு அவர்களின் கொள்கையை திணிக்க வேண்டும் என்பதை தான் கவனத்தில் கொள்கின்றனர். கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இது தொடர்பாக நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதிமன்றத்தின் மூலம் இது சாத்தியம் ஆகும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. இவ்வாறு அமைச்சர் அன்பில் கூறினார்.