* முன்னணி நடிகைகள் பலர் ரெகுலராக போதை பொருள் வாங்கியதாக பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், கானா நாட்டு வாலிபர் உட்பட 4 பேரை போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பிரபல முன்னணி நடிகைகளுக்கு நடிகர் காந்த் மற்றும் கிருஷ்ணா, கெவின் மூலம் ரெகுலராக கொக்கைன் விற்பனை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி இரவு குடிபோதையில் நடந்த மோதல் தொடர்பாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத்(33), அவரது நண்பர் அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உட்பட 9 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார்(எ)பிரடோ(38) என்பவரிடம் இருந்து அதிகளவில் கொக்கைன் என்ற போதைப் பொருள் வாங்கி சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதன் மூலம் அவர் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து இருப்பதும் அவரது வங்கி கணக்குகள் மூலம் உறுதியானது. அதனை தொடர்ந்து, போலீசார் பிரசாத் மற்றும் போதை பொருள் விற்ற பிரதீப்குமார் அளித்த தகவலின்படி நடிகர் காந்த் மற்றும் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்வீர்(எ)கெவின் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தடயவியல் துறை நிபுணர்கள் மூலம் ஆய்வு ெசய்த போது, முன்னணி நடிகைகள் பலர் நடிகர்களிடம் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொக்கைன் போதை பொருள் வாங்கியது தெரியவந்தது.
இதனால் சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப்குமார் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து உயர் ரக கொக்கைன் கடத்தி வந்து விற்பனை செய்த கானா நாட்டைச் சேர்ந்த ஜான்(38) மற்றும் ஜெஸ்வீர்(எ)கெவின் ஆகிய 4 பேரை முதற்கட்டமாக 6 நாள் காவலில் நீதிமன்ற உத்தரவுப்படி நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடந்த விசாரணையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் சினிமா தயாரிப்பாளராக இருப்பதால், நடிகர் ஸ்ரீகாந்த் மூலம் முன்னணி தமிழ் நடிகைகள் பலருக்கு நேரடியாக கொக்கைன் வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதற்காக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் வழக்கமாக இரவு நேரத்தில் ஒன்று கூடும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் கொக்கைன் நம்பிக்கையான நபர்கள் மூலம் நடிகைகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கான பணத்தை ரொக்கமாக வாங்கியதாகவும், ஒரு சில நடிகைகளுக்கு நடிகர் காந்த் மற்றும் கிருஷ்ணா மூலம் பணம் பிரதீப்குமார், கெவின் மூலம் கொக்கைன் விற்ற கானா நாட்டு வாலிபருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. உயர் ரக கொக்கைன் என்பதால் நடிகைகள் அதை அதிகளவில் வாங்கி பயன்படுத்தியதாக அதிமுக நிர்வாகி பிரசாத் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இருந்தாலும் போலீசார் கொக்கைன் வாங்கிய நடிகைகள் பலர் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதால் அவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியாததால், கொக்கைன் வாங்கியதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் இடையே நடிகர் காந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகே கொக்கைன் வாங்கிய பிரபல நடிகைகள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.