பெங்களூரு: பிரதமருக்கு எதிரான இழிவான வார்த்தைகள் தேசத்துரோகமல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பிதாரில் உள்ள ஷாஹீன் பள்ளியில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி 4,5 மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில் பாஜ அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
அப்போது இந்த சட்டங்களை கொண்டு வந்த பிரதமர் மோடியை காலணியால் அடிக்க வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம், “பிரதமருக்கு எதிரான தவறான வார்த்தைகள் இழிவானவை. கண்டிக்கத்தக்கவை. அரசாங்க கொள்கைகளை ஆக்கப்பூர்வமாக எதிர்க்க வேண்டும். ஆனால் பள்ளி வளாகத்துக்குள் நடந்த இந்த நாடகத்தில் பொதுஅமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும், வன்முறையை தூண்டும் வார்த்தைகள் இல்லை என்பதால் இதனை தேசத்துரோகமாக கருத முடியாது” என்று தீர்ப்பு வழங்கினர். தொடர்ந்து, “கல்வியில் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பள்ளி நாடகங்கள் இருக்க வேண்டும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.