Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சோளிங்கர் அருகே தந்தையின் வீட்டுக்கு வந்தபோது பயங்கரம்; ஒருதலை காதலால் மாணவியின் உயிரை பறித்த கொடூரம்: வாலிபர் தற்கொலை முயற்சி

சோளிங்கர்: ேசாளிங்கர் அருகே காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஒருதலை காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகத்குமார்(40), கார்பெண்டர். இவரது மனைவி பிரியா (35). மகன் கார்த்திக் (17), மகள் ஜனனி (15). தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் பிரியா தனது தாய் வீடான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகையில் மகன் மற்றும் மகளுடன் வசிக்கிறார். அங்குள்ள பள்ளியில் கார்த்திக் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். ஜனனி 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார்.

இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக தந்தையை பார்க்க வந்த ஜனனி கடந்த ஒரு மாதமாக புலிவலம் கிராமத்திலேயே தங்கியிருந்தார். ஜெகத்குமாரின் அக்கா சென்னையை சேர்ந்த வாணி தனது மகள்கள் லக்‌ஷயா (16), சரண்யா (11) ஆகியோருடன் புலிவலம் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வாணியும் அவரது இளையமகள் சரண்யாவும் வீட்டு வெளியே அமர்ந்திருந்தனர். அப்போது பின்பக்க வாசல் வழியாக கத்தியுடன் திடீரென வீட்டுக்குள் ஒரு வாலிபர் வந்துள்ளார். அங்கு அறையில் இருந்த ஜனனியை அந்த வாலிபர், கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதில் வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்ததில் கதறினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த லக்‌ஷயாவும் கூச்சலிட்டபடி அந்த வாலிபரை தடுக்க முயன்றார். லக்‌ஷயாவையும் அந்த வாலிபர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கூச்சலிட்டபடியே லக்‌ஷயா வீட்டின் வெளியே ஓடிவந்தார்.

அதற்குள் அந்த வாலிபர் முன்பக்க கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். ஜனனியை மீண்டும் கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். பின்னர் அந்த வாலிபர், தனக்கு தானே கத்தியால் கீறி தற்கொலைக்கு முயன்றார். வீட்டுக்குள் நடந்த சம்பவம் குறித்து கதறி அழுதபடி லக்‌ஷயா, தனது தாயிடம் கூறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் அதற்குள் ரத்த வெள்ளத்தில் ஜனனி இறந்து கிடந்தார். தற்கொலைக்கு முயன்ற வாலிபரை சரமாரி அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் மற்றும் கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த லக்‌ஷயா மற்றும் வாலிபரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜனனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மாணவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையை சேர்ந்த சுப்பிரமணி(21). கே.ஜி.கண்டிகையில் ஜனனி வசிக்கும் வீட்டின் அருகே சுப்பிரமணி வசிக்கிறார். இவர் மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனையறிந்த ஜனனியின் தாய் பிரியா, அந்த வாலிபரை கண்டித்துள்ளார். ஜனனியும் அந்த வாலிபரை தவிர்த்து வந்தார். தனது காதலை ஜனனி ஏற்க மறுத்ததால் சுப்பிரமணி ஆத்திரமடைந்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனனி புலிவலம் கிராமத்தில் உள்ள தந்தையின் வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த சுப்பிரமணி, நேற்று கத்தியுடன் வந்து குத்தி கொலை செய்தது தெரியவந்தது. சுப்பிரமணி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் அவருக்கு மயக்கம் தெளிந்த பின்னரே விசாரணை நடத்த முடியும் என்றும், விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என போலீசார் தெரிவித்தனர். ஒருதலை காதலால் மாணவியை வாலிபர் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.