குளச்சல்: மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு ஒன்றிய அரசு 60 நாட்கள் தடை விதித்து உள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும். குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்.
ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தேவையான உணவு, குடிநீர், ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர்.இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடந்த மே மாதம் 31 ம் தேதி நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்து வருகின்றனர். மீனவர்கள் வலைகளை பின்னும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்காலம் நீங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் பணி இன்று காலை தொடங்கியது. குடிநீர் ஏற்றும் பணியும் தொடங்கி உள்ளது.இதற்காக மீன் பிடிச்சார்ந்த தொழிலாளர்கள் மீண்டும் குளச்சல் வந்து தங்கள் வழக்கமான பணியை தொடங்கி உள்ளனர்.
இதனால் குளச்சல் மீன் பிடித்துறைமுகம் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கி உள்ளது.