Monday, July 14, 2025
Home ஆன்மிகம் சந்தோஷமாக வாழும் வழி

சந்தோஷமாக வாழும் வழி

by Lavanya

மனித வாழ்க்கை விசித்திர மானது. உலகத்தில் எறும்பு முதல் யானை வரை எத்தனையோ ஜீவராசிகள் இருக்கின்றன. ஆனால், பரிணாம வளர்ச்சியில் மிக உயர்ந்த உயிரினமாகத் தன்னைக் கருதிக் கொண்டு வாழ்பவன் மனிதன். இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் எல்லாம் படைக்கப்பட்ட பிறகு நிறைவாகப் படைக்கப்பட்டவன் மனிதன் என்று ஒரு கருத்து உண்டு. இதனை ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியாக விஞ்ஞானம் பேசுகிறது, ஆன்மிகமும் சொல்கிறது.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

– என்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் அற்புதமாகப் பாடுகின்றார்.
இதில் பகுத்தறிவு எனப்படும் ஆறாவது அறிவு மனிதனுக்கே உரியது. ஆறாவது அறிவின் விளைவுகளாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம்.மனிதன் தான் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, எல்லா உயிரினங்களையும் அரவணைத்துக் கொண்டு, அன்போடு, அருளோடு, பண்போடு வாழ்வதற்கு இந்த ஆறாம் அறிவு உதவுகிறது என்று நேர்மறையாகச் சொல்லலாம். ஆனால், இதே ஆறாம் அறிவின்
உதவியோடு அவன் சுயநலம் மிக்கவனாக, மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பவனாக, மனிதர்களுக்கு மட்டுமல்லாது, உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையூறு செய்பவனாகவும் இருக்கிறான் என்பதும் நடைமுறை உண்மை.மனிதனுக்கு முன் எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும், இந்த பூமியில் பெரிய அளவில் பேரழிவுகள் (manmade disasters) நிகழவில்லை.ஆனால், மனிதன் வளர்ந்து அறிவு பெற்று சுயநலம் மிக்கவனாக மாறியதால், குடும்பத்தில் ஆரம்பித்து உலகம் வரை அமைதி இல்லாமல் தவிக்கிறது.மற்ற உயிரினங்கள் தவறு செய்தாலும் கூட அதைத் தவறு என்று அதனால் உணர முடியாது. உதாரணமாக ஒரு சிங்கம் மானை உணவுக்காக அடிக்கிறது என்றால், மானை அடித்த பிறகு, தவறு செய்து விட்டோம் என்று சிங்கம் வருந்துவதில்லை. காரணம், அதற்கு ஆறாவது அறிவு இல்லை. அதுமட்டுமில்லாமல் தனக்கு வேண்டிய உணவுக்காக மட்டும் தான் சிங்கம் வேட்டையாடுமே தவிர, 100 மான்களையும் கொன்று போட்டு விடாது. ஒரு புல்வெளியில் 100 மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். அதில் எத்தனை வலுவுள்ள மாடாக இருந்தாலும் மற்ற 99 மாடுகளை முட்டித் தள்ளிவிட்டு தான் மட்டுமே மேயாது. அதைப்போலவே, தன்னுடைய பசி நிறைந்து விட்டால் மேற்கொண்டு சாப்பிட்டு வாந்தி எடுக்காது.ஆனால், மனிதர்கள் அப்படி அல்ல. அவர்கள் அறிவு, பெரும்பாலும் அச்சத்தை வழங்குகிறது. அந்த அச்சம், எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்துவிட வேண்டும் என்கின்ற சுயநல உணர்வைத் தருகிறது. சுய நலம், பிறரை அடக்குதல், அதிகாரம், வன்முறை எனபல்வேறு தளங்களில் இயங்குகிறது. அதனால்தான் அருளாளர்கள் ஆன்மிகம் என்கின்ற உணர்வின் மூலம் இந்த விஷயங்களை எல்லாம் கட்டுப்படுத்தி முழு மனிதனாக வாழ வேண்டும் என்றார்கள்.மற்ற உயிரினங்களுக்கு நாளை பற்றிய அச்சம் இல்லை. பசு மாட்டுக்கு வேண்டிய வைக்கோலை நாம்தான் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மாடு தானாக சேகரித்து வைத்துக் கொள்ளாது. அதற்கு நாளை பற்றிய கவலை இல்லை. கவலை இல்லாததால் அச்சம் இல்லை. ஆனால் மனிதன், நாளை பற்றிய அச்சத்தில் எல்லாவற்றையும் தனக்கென்று சேகரிக்கத் தொடங்குகின்றான். இந்தச் சேகரிப்புகூட எல்லை கடந்து விடுகின்றது. மற்றவர்களால் தனக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமே என்பதற்காக ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இந்த ஆயுதங்களும் மற்ற உயிரினங்களுக்கு இல்லாதது. இறைவன் எல்லா உயிரினங்களுக்கம் பாதுகாப்புக்கான ஆயுதங்களை உடல் பாகமாகவே தந்திருக்கிறான்.
பாம்புக்கு விஷத்தைத் தந்திருக்கிறான். பசு மாட்டுக்குக் கொம்புகளைத் தந்திருக்கிறான். மானுக்கு விரைவாக ஓடும் சக்தியையும் கால்களையும் தந்திருக்கிறான். பறவைகளுக்கு பறக்கும் ஆற்றலைத் தந்திருக்கின்றான். யானைக்கு மிகப்பெரிய பலத்தைத் தந்திருக்கிறான். ஆனால், எந்த உயிரினமும், சண்டைபோடும் போது கூட, தன்னிடம் இருக்கக்கூடிய பாதுகாப்புக்கான அந்த ஆயுதங்களை, (கொம்பு, கால்கள், வாய், பற்கள் முதலியவற்றை)ப் பயன்படுத்துமே தவிர நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தாது.
ஆனால் மனிதன் ஒரு சின்ன துப்பாக்கியை வைத்து மிகப்பெரிய யானையை வீழ்த்தி விட முடியும். ஒரு துப்பாக்கியை வைத்து நூற்றுக் கணக்கான மனிதர்களை கொன்றுவிட முடியும். ஆயுத வளர்ச்சியைப் பாருங்கள். இன்றைக்கு பல நாடுகள் அணுகுண்டு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. எதற்காக அணு ஆயுதங்கள்? பாதுகாப்பிற்காக? யாரிடமிருந்து பாதுகாக்க? மனிதர்களிடமிருந்து பாதுகாக்க?
ஒரு நாட்டின் மனிதர்கள் மற்றொரு நாட்டின் மனிதர்களை பகைவர்களாகவோ நண்பர்களாகவோ கருதுகின்றார்கள் என்றால் அச்சத்தின் விளைவுதான் இதற்குக் காரணம்.ஆன்மிகத்தின் மிக முக்கியமான நோக்கம் மனிதனின் இந்த அச்ச உணர்வை மாற்றுவதுதான்.

1. நாளைய வாழ்க்கை பற்றிய பயம்.
2. மரணத்தைப் பற்றிய பயம்.
3. அதிகாரத்தைப் பற்றிய பயம்.
4. பொருளாதாரத்தைப் பற்றிய பயம்.

இப்படி பல அச்சங்களோடு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இன்னும் சொல்லப்போனால் செல்வமும் அதிகாரமும் சேரச் சேர அச்சமும் அவஸ்தையும் அதிகமாகிக் கொண்டேபோகிறது.
வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, ‘‘எது வேண்டுமானாலும் நடக்கும், நாம் தயாராக இருப்போம், நடப்பதெல்லாம் இயல்பானதுதான்’’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு அச்சம் வருவதில்லை.
அச்சம் இல்லாததினால் அவர்களுடைய வாழ்க்கை உயர்வானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கிறது. மற்ற எல்லா உயிரினங்களும் தங்களுக்குக் கொடுத்த வாழ்க்கையை மனப்பூர்வமாக, சந்தோஷமாக, சுதந்திரமாக வாழுகின்றன. வானத்தில் சந்தோஷமாகப் பறக்கக்கூடிய பறவைகளைப் பார்த்து பாரதி தன் கவிதையை இப்படி ஆரம்பிக்கின்றார். இதன் ஒவ்வொரு வரிகளிலும் பாரதியின் குதூகலம் தெரியும்.

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

இதைப் போன்ற ஒரு இனிமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், முதலில் மற்ற உயிரினங்களின் சந்தோஷத்தை உங்கள் மனதில் கொண்டு வாருங்கள். மற்ற உயிரினங்களைப் பார்த்து அச்சமில்லாத வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் நிம்மதியைத் தேடுங்கள்.ஒரே ஒரு விஷயம். பொருள்களில் சந்தோஷத்தைத் தேடாதீர்கள். ஒன்றரை லட்சம் ரூபாய் விலையுள்ள சோபாவில் நீங்கள் கவலையோடு உட்கார்ந்து இருக்கலாம். ஒரு கிழிந்த பாயில், தோட்டத்தில் அட்டகாசமாக மலர்ந்திருக்கும் செவ்வரளிப் பூக்களைப் பார்த்துக்கொண்டே, நசுங்கிய அலுமினிய டம்ளரில் தேநீர் அருந்திக்கொண்டே சந்தோஷமாக இருக்கலாம்.“சந்தோஷமாக வாழ்வது தான் வாழ்க்கையின் பொருள்” என்று உணருங்கள்.

தேஜஸ்வி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi