Wednesday, February 12, 2025
Home » பாரம்பரிய அரிசியின் மகத்துவங்கள்

பாரம்பரிய அரிசியின் மகத்துவங்கள்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

அன்னம் என்றும் அமுதம் என்றும் அரிசியைக் கொண்டாடும் மரபு நம்முடையது. வெள்ளையாக இருப்பதுதான் நல்ல அரிசி என்ற மூட நம்பிக்கை நம்மிடம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சிவப்பாகவோ பழுப்பாகவோ சின்னஞ்சிறு வரிகளுடன் நார்ச்சத்துடன் இருக்கும் அரிசியை மெஷினில் கொடுத்து வெளுக்கவைத்து நல்ல அரிசி என நம்பிக்கொள்கிறோம். பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் நார்சத்து உள்ளிட்ட நுண்ணூட்டச்சத்துக்கள் நீங்குவதால் அதில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து மட்டுமே இருக்கும்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட பாரம்பரியமான நெல் ரகங்கள் இருந்திருக்கின்றன. சமூக ஆர்வலர்கள், இயற்கை வேளாண் நிபுணர்களின் அரிய முயற்சியால் தற்போது சுமார் 150 நெல் வகைகள் மட்டும் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய அரிசிகள் என்பவை வெறும் வரலாற்றுப் பொருள் மட்டும் அல்ல; அவை நம் முன்னோரின் உடல் காத்து உயிர் வளர்த்த அற்புதங்கள். உணவே மருந்து என வாழ்ந்த நம் மக்களின் ஆரோக்கியத்தைப் பறைசாற்றும் ஆவணங்கள்.

மூதாதையர் உண்ட உணவை நாம் உண்ணும்போது, அதில் உள்ள ஐயானிக் அளவிலான நுண்ணூட்டச்சத்துக்களை (Micro nutrients) உடலானது எளிதில் கிரகித்துக்கொள்ளும் தன்மையைப் பெறுகிறது. நம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் நாம் உண்ணும் உணவுக்கும் தொடர்பு உண்டு. பாரம்பரியமான நம் உணவை உண்ணும்போது, அதற்குப் பழக்கப்பட்ட நுண்ணுயிர்கள் நம் வயிற்றையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை பெருகும். அவரவர் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப விளையும் இந்த உணவுகள் நம் உடலுக்குப் பொருந்தி, எளிதில் ஊட்டமளித்து வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும். இந்த பாரம்பரிய அரிசிகள் சிலவற்றில் என்னென்ன சத்துகள் உள்ளன? வாங்க பார்க்கலாம்.

மாப்பிள்ளை சம்பா

மாப்பிள்ளை சம்பாவுக்கு இந்தப் பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. முன்பு, ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் இளவட்டக் கல் எனப்படும் பெரிய கல் ஒன்றைத் தூக்கிக் காட்ட வேண்டும். அப்படி, இளவட்டக் கல்லைத் தூக்கத் தயாராகும் மாப்பிள்ளைக்கு ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) இந்த அரிசியைத்தான் சமைத்துப்போடுவார்கள். அதனால்தான் இந்த அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்ற பெயர்.

ஒல்லியாக, பலவீனமாக இருப்பவரையும் இளவட்டக் கல்லைத் தூக்கும் அளவுக்கு பலசாலி ஆக்கும் அரிசி இது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின் பி, தயமின் நிறைந்தது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்குவதில் சிறந்தது. பக்கவாதம், வலிப்புப் பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடலாம். மாப்பிள்ளை சம்பா வடித்த கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி அமோகமாக இருக்கும்.

காலாநமக்காலா என்றால் கறுப்பு என்றும் நமக் என்றால் உப்பு என்றும் பொருள். இதன் உமியில் உப்பு சுவைகொண்ட தாதுக்கள் இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்திய நிலம் முழுதும் விளையும் நெற் பயிர் இது. புத்தர் சாப்பிட்ட அரிசி என்ற பெருமையைப் பெற்றது. ஒருவேளை சாப்பிட்டாலே போதும் பசி எடுக்காது; வயிறும் நிறையும் சத்தும் அதிகம் என்பதால் அந்தக் காலத்தில் ஆண்டிகள் முதல் அரசர்கள் வரை அனைவரும் விரும்பி உண்டுள்ளனர். புத்த பிக்குகள் இன்றும் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். சத்விக குணத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளைச் சமன் செய்திடும். சிறுநீரகப் பிரச்னைகளைச் சரிசெய்யும். தோல் வியாதிகள் நீங்கும்.

காட்டுயானம்

காட்டுயானம் விளைந்த காட்டில் யானை நுழைந்தாலும் மறைந்துவிடும் என்பார்கள். சராசரியாக எட்டு அடி வளரும் ராட்சஷ தாவரம் இது. அதனால்தான் காட்டுயானம் என்று பெயர். ரத்தத்தில் சர்க்கரையைச் சேர்க்கும் கிளைசெமிக் வீதம் இதற்கு மற்ற அரிசிகளைவிடவும் குறைவு. எனவே, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் காட்டுயானம் எக்ஸ்பர்ட். பசியைத் தாமதப்படுத்தும் என்பதால் நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற உணவு.

காட்டுயானத்தை மண் பானையில் சமைத்து, மிஞ்சிய சாதத்தை நீர் ஊற்றிவைத்து அந்த நீராகாரத்தை ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை நோய் கட்டுப்படும். காட்டுயானக் கஞ்சியுடன் கறிவேம்பு இலையைப் போட்டு ஊறவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் உண்டு வந்தால் புற்றுநோயால் உண்டாகும் புண்கள் குணமாகிறது என்கிறார்கள். புற்றுநோய்க்கான மருந்துகள் பற்றிய ஆய்வுக்கு காட்டுயானத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

கொட்டாரம் சம்பா

கொட்டாரம் என்றால் அரண்மனை என்ற பொருள் உண்டு. அரச குடும்பத்தவர்களுக்காக நாஞ்சில் நாட்டுக்காரர்கள் விளைவித்த நெல் இது. இதை, குழந்தைகளுக்கான ஸ்பெஷல் அரிசி எனலாம். இதில் குழந்தைகளுக்கு கஞ்சி, புட்டு, பலகாரங்கள் செய்து கொடுத்தால் ஆரோக்கிய அட்டகாசமாக இருக்கும். மருத்துவரையே மறந்துவிடலாம். பாலூட்டும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பது மேம்படும். தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் எளிதில் செரிக்கும். வயிற்று மந்தம் நீங்கும். மலச்சிக்கல், வயிற்றுத் தொந்தரவுகளைத் தடுக்கும்.

குள்ளக்கார்

பாரம்பரியமான சிவப்பு அரிசி வகையைச் சார்ந்தது இது. குள்ளக்கார் அரிசியில் ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. கெட்ட கொழுப்பைக் கரைக்கும். செரிமானம் மெதுவாக நடப்பதால் பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இதை சாப்பிடலாம். வயிறும் நிறையும்; உடல் பருமனும் ஏற்படாது. அலுவலகப் பணிக்குச் செல்பவர்கள். உடல் உழைப்புக் குறைந்தவர்களுக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

கருங்குருவை

கருங்குருவையை ‘காயகல்பம்’ என்றே சொல்லலாம். கருங்குருவைக் காடி நீர் சித்த வைத்தியத்தில் முக்கியமான மருந்து. உடலின் இணைப்புகளை வலுவாக்கும். உட்புற உறுப்புகளை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. குஷ்டம், வெண்புள்ளி, விஷக்கடியால் சருமத்தில் உருவாகும் பாதிப்புகளைப் போக்கக்கூடியது. கருங்குறுவை சோறும், கள்ளிப்பாலும், தேனும் இணைந்து யானைக்கால் நோய்க்கு மருந்தாகும் எனக் கண்டறிந்துள்ளார்கள்.

கிச்சலி சம்பா

சன்னரக அரிசி இது. எனவே, நாம் தற்போது பயன்படுத்தும் பொன்னி போன்ற அரிசிகளின் பயன்பாட்டில் இருந்து பாரம்பரிய அரிசிப் பழக்கத்துக்கு மாற கிச்சலி சம்பாவைப் பயன்படுத்தலாம். கிச்சலி சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கும்.

சிவப்பு மற்றும் கறுப்புக் கவுனி

பழைய செட்டிநாட்டுச் சமையல்களில் கவுனி அரிசி பிரபலம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், பைட்டோகெமிக்கல்ஸ், தயமின், வைட்டமின் பி நிறைந்தது. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சில வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்காது. கவுனி அரிசிகளைச் சாப்பிடுவதன் மூலம் அவற்றை நிறைவாகப் பெறலாம். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கும். நச்சுக்களை அகற்றும். பாம்புக் கடி, தேள் கடி பாதித்தவர்களுக்கு இதைக் கொடுத்துவர உடல் நலம் விரைந்து மேம்படும். தற்போது, வெளிநாடுகளில் இருப்பவர்களாலும் அதிகம் விரும்பப்படும் அரிசியாக இது உள்ளது. புட்டு செய்ய, சத்துமாவு தயாரிக்க ஸ்பெஷலான அரிசி.

பூங்கார்

பெண்களின் உடல் நலனுக்கு ஏற்ற சிறப்பு அரிசி என்றே இதை சொல்லலாம். கர்ப்பிணிகளுக்கு இந்த அரிசியில் கஞ்சி வைத்துக் கொடுத்துவர, சுகப்பிரசவத்துக்கு உதவும். கர்ப்பப்பையை வலுவாக்கும். சீரற்ற மாதவிலக்கைச் சரிசெய்யும் யூடெரின் டானிக்காகச் செயல்படும். பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்துதர இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும். எலும்புகளை வலுவாக்கும். கை, கால் மூட்டுகளில் வலி உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவரலாம்.

காட்டுப்பொன்னி

நார்ச்சத்தும், புரதச்சத்தும், கால்சியம் எனும் சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த காட்டுப்பொன்னி உடலுக்கு வலுவைத் தரக்கூடியது. செரிமானத்தை எளிதாக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பெண்கள், வயதானவர்களுக்கு கஞ்சி வைத்துக்கொடுத்தால் கை,கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

அனைத்துக் காலங்களிலும் இவை கிடைக்குமா?

பொதுவாக, கடைகளில் கிடைக்கும் அரிசிகள் 50-60 நாள் பயிர் வகையைச் சார்ந்தவை. ஆனால், சில பாரம்பரிய அரிசிகளோ 150 – 180 நாள் பயிர்கள். எனவே, ஒவ்வொரு அரிசியும் ஒவ்வொரு சீஸனில் கிடைக்கும். தற்போது, இருப்பு வைத்துப் பயன்படுத்துவதால், ஆண்டு முழுவதும் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ப கிடைக்கும் அரிசி வகைகளைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் இயற்கையோடு நாம் இயைந்து வாழும் பழக்கம் ஏற்படும்.

பாரம்பரிய அரிசியை பழகுவது எப்படி?

வெள்ளைப் புழுங்கல் அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றையே சாப்பிட்டுப் பழகிய நமக்கு புதிய சுவைகொண்ட இந்த அரிசி ரகங்கள் தொடக்கத்தில் சிரமமாகவே இருக்கும். ஆனால், இதில் உள்ள உடலுக்கு வலுவூட்டும் சத்துகளை எண்ணி நாம் சாப்பிடப் பழகுவதே நல்லது. நாளடைவில் இந்த ருசியும் நம் நாக்குக்குப் பழகிவிடும். புளிக்குழம்பு, காரக்குழம்பு, கூட்டு, அவியல், திக் கிரேவி, தயிர் போன்றவற்றுடன் பாரம்பரிய அரிசியின் சுவை பிரமாதமாக இருக்கும். சாம்பார், ரசத்துடன் ஓரளவுக்கே பொருந்தும். இதை, பிசிபெளபாத் போல செய்து சாப்பிடலாம். இந்த அரிசிகளை எட்டு மணி நேரம் கட்டாயம் ஊறவைக்க வேண்டும். அலுவலகம் செல்வோர், இரவு ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை பயன்படுத்தலாம். இவை வேக 30-40 நிமிடங்கள் ஆகும். குக்கரில் வைத்தால் ஐந்தாறு விசில் வரை விடலாம்.

பாரம்பரிய அரிசியை எளிமையாகப் பயன்படுத்த நினைப்போர், தோசை மாவு மிக்ஸ் வைத்து இட்லி, தோசை, அடை, இனிப்பு அடை செய்து சாப்பிடலாம். ஹெல்த் மிக்ஸ் வைத்து கஞ்சியாகவும் புட்டு மாவு மிக்ஸ் வைத்துப் புட்டாகவும் செய்யலாம். வெள்ளையாக இட்லி, தோசை சாப்பிட்டோர், சிவப்பு, பிரவுன் நிறத்தில் சாப்பிட புதிய சுவையுடன் இருக்கும். குழந்தைகளுக்கும் பிடிக்கும். நான்கு வெள்ளை தோசையைச் சாப்பிடுபவரால், இந்த வகை தோசையை இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாது. சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறையும் என்பதால் உடல் எடை அதிகரிக்காது. இயல்பாகவே டயட் கன்ட்ரோலாகும்.

பராமரிப்பது எப்படி?

பாரம்பரிய அரிசிகள் இயற்கையான முறையிலேயே விளைவிக்கப்படுகின்றன என்பதால் இதில் எளிதாக வண்டு பிடிக்கும். புடைத்து வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது நல்லது. அவ்வப்போது அளவாக வாங்கிப் பயன்படுத்துவதும் சிறந்ததே.

You may also like

Leave a Comment

fourteen + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi