Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி - சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்

திருச்சி: திருச்சியிலிருந்து சென்னைக்கு இன்று (16ம்தேதி) முதல் 31ம் தேதி வரை தினமும் காலை, மாலை என இரண்டு முறை ‘ஏர்பஸ்’ விமானம் இயக்கப்பட உள்ளது. 180 பேர் வரை பயணிக்கலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏடிஆர் ரக விமானங்களை கொண்டு இண்டிகோ நிறுவனம் இந்த சேவைகளை வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் 6 முறை விமானங்கள் இயக்கப்படுகின்றன. காலை 7.35 மணி, 10.35 மணி, பிற்பகல் 12.40 மணி, 2.55மணி, இரவு 7.45மணி, 10.15 மணி ஆகிய நேரங்களில் விமான சேவை தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஏடிஆர் ரக விமானங்களில் 76 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

இந்நிலையில் இந்த சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (16ம்தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை இண்டிகோ நிறுவனம் ‘ஏர்பஸ்’ விமானங்களை கொண்டு காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணி என ஒரு நாளைக்கு இரண்டு சேவைகள் மட்டும் இயக்க உள்ளது.

இந்த ‘ஏர்பஸ்’ விமானங்களில் 180 ேபர் வரை பயணிக்கலாம். இதனால், சென்னைக்கான மற்ற விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகள் கொண்ட ‘ஏர்பஸ்’ விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.