நன்றி குங்குமம் டாக்டர்
மாஸ்டர் ஹெல்த் செக்அப் எப்படி… எப்போ… யாருக்கு?
குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற பிரத்யேகமான மாஸ்டர் ஹெல்த் செக் அப்கள் உள்ளன. குழந்தைகள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், 40-50 வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் ஏற்ற பலவகையான செக்அப்கள் உள்ளன.
என்னென்ன பரிசோதனைகள்?
உடல் எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்தத்தைக் கொண்டு செய்யப்படும் ஹீமோகிராம், பயோகெமிக்கல் பாராமீட்டர் பரிசோதனைகள், கொழுப்புப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, சிறுநீர்ப் பரிசோதனை, இ.சி.ஜி, தைராய்டு பரிசோதனைகள் போன்றவை பொதுவான பரிசோதனைகள். இதைத் தவிர குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு எனப் பிரத்யேகப் பரிசோதனைகளும் உள்ளன.
உடல் எடை, உயரம்
உடல் எடை, உயரம் ஆகியவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் ஒருவரின் பி.எம்.ஐ எவ்வளவு எனக் கண்டறிய முடியும். ஒருவர் அதிக உடல் பருமன் உடையவரா இல்லையா என்பதை பி.எம்.ஐ அளவைக் கணக்கிடுவதன் மூலம் அறியலாம்.
ரத்த அழுத்தம்
உடலில் உள்ள சிஸ்டாலிக் ரத்த அழுத்தம், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் மூலம் உடலில் ரத்த ஓட்டம் எந்த நிலையில் உள்ளது எனக் கண்டறியலாம். உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியமான பிரச்சனை. நாளடைவில் சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கும் இது வித்திடும் என்பதால், இந்தப் பரிசோதனையும் இன்றியமையாததே.
ரத்தப் பரிசோதனைகள்
ரத்தப் பரிசோதனைகள்தான் மாஸ்டர் ஹெல்த் செக்அப்பின் அடிப்படை. சுமார் இரண்டு மி.லி அளவில் மூன்று சாம்பிள்கள் அதாவது மொத்தம் ஆறு மி.லி ரத்தம் எடுக்கப்படும். இந்த ரத்தத்தைக் கொண்டு, ஹீமோகிராம், பயோகெமிக்கல் பாராமீட்டர், கொழுப்பு அளவு, கல்லீரலின் நிலை போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, இதய நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பைப் பற்றிக் கண்டறிய முடியும்.
ஹீமோகிராம்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, செல்களின் அடர்த்தி, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் சராசரி விகிதம் ஆகிய பரிசோதனைகள் இதில் செய்யப்படுகின்றன. ரத்தசோகை, ரத்தத்தில் ஏற்பட்டு உள்ள நோய்த் தொற்று, ரத்தம் உறையும் பிரச்னை, நோய் எதிர்ப்புச் சக்திக் குறைபாடு, ரத்தப் புற்றுநோய் போன்றவற்றை இதன் மூலம் கண்டறியலாம்.
வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியமானவை. உடலில் நுழையும் நோயை எதிர்த்துப் போராடுபவை. இவற்றில், மீயூட்டோபில், லிம்போசைட், மோனோசைட், இயோசினோபில் என்று பல வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை எப்படி உள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று கண்டறிவதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனை அனுமானிக்கலாம். பிளாஸ்மா எனும் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையைப் பரிசோதிப்பதன் மூலம் ரத்தம் உறையும் வாய்ப்பைக் கண்டறியலாம்.
உயிர் வேதியியல் பரிசோதனைகள்
உணவு உண்பதற்கு முன்னும் பின்னுமான ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் சராசரி விகிதம் (HbA1c), ரத்தத்தில் உள்ள யூரியா/கியாட்டின் அளவு, யூரிக் அமிலம், பி.பி பிளட் சுகர் போன்ற பரிசோதனைகள் இதில் செய்யப்படுகின்றன.ஃபாஸ்டிங் சுகர் எனப்படும் உணவு உண்பதற்கு முன்பு ரத்தம் எடுத்து பரிசோதித்துவிட்டு, உணவு உண்ட பின் ஒரு முறை மீண்டும் எடுத்துப் பரிசோதிக்கும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் விகிதம் போன்றவற்றை அனுமானித்து சர்க்கரை வியாதி உள்ளதா? அதற்கான வாய்ப்புகள் உள்ளதா எனக் ச்கண்டறிய முடியும்.
ரத்தத்தில் உள்ள யூரியா/ கிரியாட்டின், யூரிக் அமிலம் ஆகியவற்றின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்பாடு எப்படி உள்ளது. சிறுநீரகப் பிரச்னைகள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிய முடியும்.
கொலஸ்ட்ரால் பரிசோதனைகள்
உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது அது நல்ல கொழுப்பை நீக்கி, இதய ரத்த நாளங்களிலும் கல்லீரலிலும் படிகின்றன. இதனால், மாரடைப்பு, கல்லீரல் அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் பரிசோதனைகள் செய்வதன் மூலம், உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் அளவு, எல்.டி.எல் கொழுப்பின் அளவு, ஹெச்.டி.எல் கொழுப்பின் அளவு, டிரைகிளிசரைட் அளவு, மொத்த கொலஸ்ட்ராலுக்கும் ஹெச்.டி.எல் கொழுப்புக்கும் உள்ள விகிதம் போன்றவற்றைக் கண்டறியலாம்.
கல்லீரல் செயல்பாடு
ரத்தத்தில் உள்ள புரதம்/அல்புமின்/குளோபுலின் அளவு, அல்கலைன் பாஸ்பட்டேஸ் எனும் காரத்தன்மையின் அளவு, எஸ்.பிளிருபின் அளவு போன்றவற்றைக் கணக்கிடுவதன் மூலம் கல்லீரலின் செயல்பாடு எப்படி உள்ளது என்று கணிக்கலாம். இவற்றில் மாறுபாடு இருந்தால் மஞ்சள் காமாலை, லிவர் சிர்ரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
தைராய்டு பரிசோதனைகள்
ரத்தத்தில் உள்ள டி3, டி4, டி.எஸ்.ஹெச் சுரப்புகளின் அளவு பரிசோதிக்கப்படுவதன் மூலம் தைராய்டு சுரப்பி எந்த நிலையில் உள்ளது. தைராய்டு பாதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பனவற்றைக் கண்டறியலாம். பிட்யூட்டரியில் சுரக்கும் டி.எஸ்.ஹெச் ஹார்மோன் தைராய்டு சுரப்பியைத் தூண்டி, டி3, டி4 ஹார்மோன்களைத் சுரக்கச் செய்கின்றன. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த ஓட்டம், உண்ணும் உணவில் இருந்து கால்சியம் போன்றவற்றைக் கிரகிக்கும் வேலை, நமது பாலியல் செயல்பாடுகள் போன்ற பல செயல்பாடுகளை தைராய்டு ஹார்மோன்கள்தான் தீர்மானிக்கின்றன. தைராய்டு பிரச்னைகள் பெண்களுக்கே அதிகம் ஏற்படுகின்றன என்பதால், இந்தப் பரிசோதனை பெண்களுக்கு அவசியம் செய்யப்படுகிறது.
சிறுநீர் பரிசோதனைகள்
சிறுநீரக மாதிரிகள் மூலம் யூரியாவின் அளவு மற்ற உப்புக்கள் போன்றவற்றைப் பரிசோதிக்கலாம். இதன் முலம் சிறுநீரகத்தின் செயல்பாடு எப்படி உள்ளது எனக் கண்டறிய முடியும். யூரியா போன்ற உப்புக்களின் அளவு மாறுபடும்போது சிறுநீரகத்தில் கற்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சிறுநீர் பரிசோதனை மூலம் இதனைக் கண்டறியலாம்.
மலப் பரிசோதனை
இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செய்யப்படுகிறது. சமீபமாக, குடல்புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் அதிகரித்துவருவதால், இந்தப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது.
மார்பக எக்ஸ்ரே
மார்புப் பகுதியை எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் இதயம், நுரையீரல், மூச்சுக்குழாய் உள்ளிட்ட உள்ளுறுப்புகளின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
இ.சி.ஜி
இதயத்தின் செயல்பாட்டை அறிய இ.சி.ஜி பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இதயத்துடிப்பின் அளவு, வேகம் போன்றவற்றைக் கண்டறியலாம்.
பெண்களுக்கான பரிசோதனைகள்
கால்சியம், எலெக்ட்ரோலைட், பாஸ்பரஸ் பரிசோதனை
40 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு எலும்பு தொடர்பான குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, வழக்கமான ரத்தப் பரிசோதனைகளோடு கால்சியம், எலெக்ட்ரோலைட், பாஸ்பரஸ் விகிதங்கள் ரத்தத்தில் எவ்வளவு உள்ளன என்பதையும் கண்காணிப்பார்கள்.
அல்ட்ரா சோனோகிராம்
சப்த அலைகளை உடலுக்குள் செலுத்தி அதன் எதிரொலிகளை கறுப்பு வெள்ளைஉருவமாக மானிட்டரில் படியச் செய்து, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் நிலை எப்படி உள்ளது எனப் பரிசோதிக்கும் முறை இது. கர்ப்பப்பை, சினைப்பை போன்ற உறுப்புகள் என்ன நிலையில் உள்ளன என்று கண்டறியலாம். இது பொதுவாக, கர்ப்ப காலத்தில் கருவின் நிலையை அறிய செய்யப்படுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்குமே மாஸ்டர் ஹெல்த் செக்அப்பில் செய்யப்படுகிறது.
பாப்ஸ்மியர் பரிசோதனை
கர்ப்பப்பைவாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை இது. சமீபத்தில் கர்ப்பைப்பை வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதால் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்குமே இது பரிந்துரைக்கப்படுகிறது.
மேமோகிராம் பரிசோதனை
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக மேமோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்குமே இந்தப் பரிசோதனை அவசியம் செய்யப்படுகிறது.
முதியோருக்கான சிறப்புப் பரிசோதனைகள்
டிரெட்மில் பரிசோதனை
இ.சி.ஜி பரிசோதனையில் இதயத்தின் செயல்பாடு குறித்து முழுமையாக அறிய முடியாது என்பதால், 60 வயதைக் கடந்தவர்களுக்கு டிரெட்மில் பரிசோதனை எனப்படும் இதய ஸ்ட்ரெஸ் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. டிரெட்மில்லில் நடக்கச் செய்து பரிசோதனை செய்வதன் மூலம், நாம் செயல்படும்போது இதயம் எப்படி இயங்குகிறது என அறியலாம்.
டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை
முதுமையின் பிரச்னைகளில் முக்கியமானது எலும்புத் தேய்மானம். எனவே, 60 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்பின் அடர்த்தியைப் பரிசோதிப்பதற்காக டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.
ப்ராஸ்டேட் பரிசோதனை
60 வயதைக் கடந்த ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ப்ராஸ்டேட் கோளாறு முக்கியமானது. எனவே, டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாம் எனப்படும் ப்ராஸ்டேட் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
டப்ளர் பரிசோதனை
ரத்த நாளங்களிலும் இதய நாளங்களிலும் ரத்த ஓட்டம் எப்படி உள்ளது என்பதைப் பரிசோதிப்பதற்காக வேகமான சப்த அலைகளைச் செலுத்தி டப்ளர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அது கண்டறியப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு வலி உணர்வு குறைவு என்பதால் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் தெரியாது. எனவே, இந்தப் பரிசோதனை அவசியம்.
கால் அழுத்தப் பரிசோதனை
சர்க்கரை நோயாளிகள் கால்களை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், கால்களின் அழுத்தம் எப்படி உள்ளது என்று கண்டறிவதற்கான கால் அழுத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் காலின் உணர்வுத்திறன், ஆரோக்கியம் ஆகியவற்றைக் கண்டறியலாம்.
சாப்பிடாமல் செல்ல வேண்டுமா?
ரத்தப் பரிசோதனைகளை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பதுதான் நல்லது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்ட்ரால், நல்ல கொழுப்பு ஹெச்.டிஎல், எல்.டி.எல் ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிடும்போது வெறும் வயிற்றில் கணித்தால்தான் அதன் உண்மையான அளவு தெரியும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறும். மேலும், பித்தப்பையில் இருக்கும் பித்த நீர், உணவைச் செரிமானம் செய்ய வயிற்றுக்குள் சென்றுவிடும்.
பித்தப்பை காலியாக இருந்தால், அதில் கல் ஏதாவது இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியாது. இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம். எனவே, சாப்பிடாமல் செல்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் விகிதத்தை கண்டறிய உணவு உண்ட பிறகு ஒருமுறை ரத்தம் தர வேண்டியது இருக்கும்.
தண்ணீர் குடிக்கலாமா?
ஸ்கேன் பரிசோதனைகளின்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பார்கள். உணவற்ற வெறும் வயிற்றில் தண்ணீர் இருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியின் நிலையையும்; பெண்களுக்கு கர்ப்பப்பையின் நிலையையும், நீர்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் போன்ற பாதிப்புகள் இருந்தால், அவற்றையும் துல்லியமாகக் காண முடியும்.
சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு, சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்.
தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணா