குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம்’’ நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்குச் சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்’’ என்று சொன்னார். மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர். குரு அவர்களைப் பார்த்து ‘‘உலகிலே இனிமையான ஒரு பொருளைக் கொண்டு வாருங்கள்’’ என்று
சொன்னார். மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர். ஒருவன் தேனைக் கொண்டு வந்தான்.
இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர். வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்றிருந்தான். குரு அவனைப் பார்த்து நீயுமா என்று ஆச்சரியமாக கேட்டார். சீடன் நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன் என்று சொன்னான். குரு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்’’ என்று கேட்டார். சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குரு ‘என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்’’ என்று கேட்டார்.
சீடன் ‘‘குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டு வரச் சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது? மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறியீடாக ஆட்டின் நாவை கொண்டு வந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்.’’ என்றான். குரு ‘‘இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்’’ என்று சொன்னார். சீடர் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான். குரு ‘‘உலகிலேயே கசப்பான ஒரு பொருளைக் கொண்டு வா’’ என்று சொன்னார்.
மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளைக் கொண்டு வந்தனர். ஒருவன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு. குரு ‘‘என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன். நாவை கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?’’ என்று கோபமாக கேட்டார்.
சீடன் ‘‘தீய சொற்களை பேசும் நாவைப்போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே, நாவுதான் உலகிலேயே கசப்பான பொருள்’’ என்று சொன்னான். சீடனின் அறிவைக் கண்டு வியந்த குரு தன் மகளை அவனுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். நாவு ஒரு அற்புதப் பொருள். ஆசீர்வாதங்களின் திறவுகோலும் அதுதான். சாபத்தின் வாசல்படியும் அதுதான். ‘‘தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்’’ (நீதி. 21:23) என இறைவேதம் கூறுகிறது. ஆகவே, நாவு என்னும் ஆயுதத்தை கவனமாக பயன்படுத்துவோம்.
– அருள்முனைவர்.பெ.பெவிஸ்டன்.