திருவேட்களம் திருக்கோயில் மிகமிக புகழ் பெற்றது. இந்த ஊரில்தான் புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் இருக்கிறது.கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜப் பெருமானைத் தான் குறிக்கும். அதற்கு அருகாமையில் இருக்கக் கூடிய இந்த தலம் 274 சிவத்தலங்களில் இரண்டாவது தலமாகப் போற்றப்படுகின்றது. வேட்கள நன்னகர் என்று இத்திருக்கோயில் தேவாரத்தில் போற்றப்படுகின்றது. பாசுபதேஸ்வரர் இவ்வாலயத்தில் நல்ல நாயகி என்னும் பெயருடைய அம்மனோடு காட்சி தருகின்றார்.கோயில் எதிரிலே அருமையான ஒரு திருக்குளம். கோயிலுக்குரிய குளம் ஆனாலும் இங்கு உள்ளவர்களுடையகுளிக்கவும் குடிக்கவும் ஆன தண்ணீர் தேவையை ஒரு காலத்திலே நிறைவேற்றிய புகழ்பெற்ற தீர்த்தம். கிருபா தீர்த்தம் என்று பெயர்.திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் அருணகிரிநாதரும் பாடிய திருத்தலம்.ஞானசம்பந்தப் பெருமான் தில்லை வீதிகளில் தன்னுடைய திருவடி படுவதுகூட தகாது என்று எண்ணி அங்கே தங்காமல் திருவேங்கடத்தில் தங்கினார் என்பார்கள். இங்குள்ள முருகன் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி தருகின்ற கோலம் அற்புதக் கோலம். அழகான திருவாசி அத்தனையும் ஒரே கல்லில் அமைந்த சிற்பம்.
ஒரு காலத்தில் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் ஈசனை நோக்கி பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக ஒற்றைக்காலில் தவம் இருந்தான். அவனுடைய தவத்தைக் கலைப்பதற்காக துரியோதனன் மூகாசுரன் என்ற அசுரனை பன்றி வடிவில் அனுப்பி வைத்தான்அர்ஜுனனுக்கு காட்சி தரவும், அவனோடு விளையாடிப் பார்க்கவும் எண்ணிய ஈசன், ஒரு வேடன் உருவில் வந்து அந்தப் பன்றியை அம்பு எய்து கொன்றார். அதே நேரத்திலே தவத்தில் இருந்து எழுந்த அர்ஜுனனும் ஆரம்ப அந்த பன்றியை அம்பால் அடித்தான். பன்றி இறந்தது. ஆனால் ‘‘நான் அல்லவா இப்பன்றியைக் கொன்றேன் என்று அர்ஜுனன் சொல்ல இருவருக்கும் சண்டை மூண்டது. அர்ஜுனுடைய வில் முறிந்தது. அந்த முறிந்த வில்லால் ஈசனை அடிக்க அது சர்வலோக உயிரினங்களிலும் அடியாக விழுந்தது.பிறகு அர்ஜுனனை அணைத்து, தான் யார் என்பதை காட்டி, பாசுபதாஸ்திரத்தை தந்த வரலாறு நிகழ்ந்த அற்புத தலம் இது,
இந்த தலத்திற்கு வந்து ஈசனை வணங்கினால் அவன் எந்த பிரச்னையோடு வந்தாலும் அந்த பிரச்னை தீர்ந்து விடும் என்பதை திருநாவுக்கரசரின் பாடல் தெரிவிக்கிறது.அல்லல் இல்லை அருவினை தானில்லைமல்கு வெண்பிறை சூடும் மணாளனார்செல்வனார் திருவேட்களம் கைதொழ வல்ல ராகில்வழி அது காண்மினே இந்தத் திருத்தலத்திற்கு ஒருவன் வந்து கை கூப்பித் தொழுதால் அவனுக்குத் துன்பம் வராது. துன்பங்கள் வினைகளால் வருவதால் அந்த வினைகள் வேலை செய்யாது. காரணம் இங்கே அழகான வெண்மையானசந்திரனை திருமுடியில் சூடிய மணாளனும், எல்லாச் செல்வங்களும் உடையவனுமான ஈசன் எழுந்தருளியிருக்கின்றான்.இந்த திருவேட்கத்தை நினைத்து நீங்கள் ஒரே ஒரு முறை வணக்கம் செலுத்தக் கூடும் என்று சொன்னால், உங்கள் அத்தனை பிரச்னைக்கும் நீங்கள் வழியை கண்டடைவீர்கள் என்பதுதான் இப்பாடலின் பொருள். எத்தனை அழகான பாடல். நம்முடைய பிரச்னைகளை எல்லாம் தீர்க்கக்கூடிய பாடல்.