ஸ்ரீ மந் நகர நாயிகா
இதற்கு முந்தைய நாமத்தில் ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்று பார்த்தோம். ஸுமேரு மற்றும் அதற்கு மத்தியில் இருக்கக்கூடிய மூன்று ஸ்ருங்கங்கள் அதாவது சிகரங்களை குறித்துப் பார்த்தோம். அந்த மூன்று ஸ்ருங்கங்களுக்கு மத்தியில் மிக உயரமான இடத்தில் நான்காவதாக இருக்கும் ஸ்ருங்கமாக அதாவது சிகரமாக விளங்குகிறாள் என்றும் பார்த்தோம். அதாவது, நாம் வாழும் உணர்வு நிலைகளின்படி ஜாக்ரத் (உலகத்தை பார்த்தல்), சொப்பனம் (கனவுநிலை), சுஷுப்தியைத் (கனவுகளைத் தாண்டிய நிலை) தாண்டி துரீயம் என்கிற உயர்ந்த நிலையில் அம்பிகை இருக்கிறாள் என்று பார்த்தோம்.இப்போது இந்த நாமத்தில் அந்த ஸுமேரு ஸ்ருங்கத்தை இன்னும் நுட்பமாக வெகு அருகே கொண்டு வந்து பார்க்கப் போகிறோம். இதுவரையில் சென்ற நாமத்தில் ஸுமேரு ஸ்ருங்கஸ்தா என்கிற சிகரங்களை மட்டுமே பார்த்தோம். அந்த ஸுமேருவினுடைய மத்ய ஸ்ருங்கத்தில் அம்பாள் இருக்கிறாள். மற்ற மூன்று ஸ்ருங்கங்களில் பிரம்ம லோகம், விஷ்ணு லோகம், ருத்ர லோகம் இருப்பதை பார்த்தோம். மத்தியில் அம்பாள் இருக்கக்கூடிய ஸ்தானத்திற்கு என்ன பெயர் என்று பார்த்தோமானால், சஹஸ்ரநாமத்தில் என்ன பெயர் வருகிறதெனில் ஸ்ரீமந் நகர நாயிகா என்று வருகிறது. இந்த சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமே ஸ்ரீமாதா என்று தான் ஆரம்பிக்கின்றது.
வேறு எந்தவிதமான பெயரையும் சேர்க்காமல் ஸ்ரீமாதா என்பது எப்படி அம்பிகையை குறிக்குமோ அதுபோல ஸ்ரீநகரம் என்பது அம்பிகை இருக்கும் ஸ்தானத்தை குறிக்கும்.அம்பாளுடைய மந்திரத்திற்கு ஸ்ரீவித்யா என்று பெயர். குருவிற்கு ஸ்ரீகுரு என்று பெயர். அம்பிகைக்கு ஸ்ரீமாதா என்று பெயர். அம்பிகையின் சக்ரத்திற்கு ஸ்ரீசக்ரம் என்று பெயர். எங்கெல்லாம் ஸ்ரீ எனும் வார்த்தை வருகின்றதோ அங்கெல்லாம் அம்பாளுடைய சம்மந்தம் வருகின்றது என்று அர்த்தம். ஸ்ரீமந் நகர நாயிகா… என்றாலே அம்பிகையினுடைய ஸ்தானம்தான் என்றே கொள்ள வேண்டும். எல்லாவிதமான ஐஸ்வர்யங்களாலும் நிறைக்கப்பட்டிருக்கிற ஸ்ரீ நகரத்திற்கு நாயகியாக… இருக்கக் கூடியவள் என்று ஸ்ரீமந் நகர நாயிகா என்று இந்த நாமங்கள் வருகின்றன.எப்படி லலிதா ஸ்தவ நவரத்தினத்தில் ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா என்கிற நாமத்திற்கு விளக்கத்தை அளித்தாரோ… அதே லலிதா ஸ்தவ ரத்தினத்தில்தான் ஸ்ரீநகரத்தினுடைய வர்ணனை எல்லாமே வருகின்றது. இன்னும் கூடுதல் தகவல்களாக இந்த ஸ்ரீநகரத்திற்கு ஆதிவித்யா நகரம் என்றொரு நாமத்தையும் அளிக்கிறார். ஏனெனில், ஞானத்தினுடைய பிறப்பிடமாக அந்த நகரம் இருப்பதால் இதற்கு ஆதிவித்யா நகரம் என்கிற பெயரை கொடுக்கிறார்.நாம் அதையும் ஆதாரமாகக் கொண்டே பார்க்கலாம். அதேபோன்று சிதானந்தநாதர் சொல்லிய சில விளக்கங்களையும் நாம் சேர்த்துச் சேர்த்து பார்க்க வேண்டும்.
முதலில் ஸ்ரீநகரம் என்பது இருபத்தைந்து கோட்டைகளால் சூழப்பட்டுள்ளன. இந்த கோட்டைகளை சொல்லும்போதே கொஞ்சம் நாம் மனக் கண்ணால் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். இதில் கோட்டைகளுக்குள் நுழையும் முன்பு முதல் கோட்டை இருக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது கோட்டை இருக்கிறது. முதல் கோட்டைக்கும் இரண்டாவது கோட்டைக்கும் நடுவே ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தில் தோட்டம் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதை வனமென்றும் தோட்டமென்றும் கூறலாம். இப்படியே ஒரு கோட்டைக்கும் அடுத்த கோட்டைக்கும் இடையே தோட்டம் இருக்கும். அதாவது இரண்டு கோட்டைகளுக்கு நடுவே ஒரு தோட்டம்… இரண்டு கோட்டைகளுக்கு நடுவே ஒரு தோட்டம் என்று இருக்கும். இந்த தோட்டங்கள் இருக்கக்கூடிய பகுதியில் ஒவ்வொருவரும் வசிக்கிறார்கள். இந்த தோட்டத்திற்கு வாடிகை (vatika) என்று பெயர். அங்கு யாரெல்லாம் வசிக்கிறார்கள் என்பதும் ஸ்ரீநகர வர்ணனையில் வருகின்றது.முதல் எட்டு கோட்டைகள் உலோகங்களால் (metals) ஆனவை. அவை ஏன் உலோகங்களால் ஆனது என்பதன் விளக்கத்தை பின்னால் பார்க்கலாம்.
முதல் கோட்டையாக 1. இரும்புக் கோட்டை வருகின்றது. இது ஸ்ரீநகரத்திற்கு வெளியே இருக்கும் முதல் கோட்டையாகும். இதற்கு அடுத்து 2.வெண்கலக் கோட்டை. இந்த இரும்பு கோட்டைக்கும் வெண்கலக் கோட்டைக்கும் நடுவே ஒரு தோட்டம் இருக்கிறது. நாநா விருட்ச மகோத்யானம் என்று பெயர். அந்த தோட்டங்களில் வெவ்வேறு விதமான மரங்கள் சூழ்ந்திருக்கக்கூடிய தோட்டங்கள் இருக்கிறது. அந்த தோட்டத்தில் யார் வசிக்கிறார்கள் என்று பார்த்தால், அம்பாள் பத்ரகாளியாகவும் இறைவன் மகாகாளியுமாக வசிக்கிறார்கள்.இதற்கு அடுத்து 3. தாமிரக் கோட்டை (copper). இந்த வெங்கலக் கோட்டைக்கும் தாமிரக் கோட்டைக்கும் நடுவே கற்பக விருட்சங்களால் ஆன தோட்டம் இருக்கிறது. இந்த கற்பக விருட்ச தோட்டங்களில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், வசந்த ருதுவிற்குரிய தேவனான வசந்த ருது நாதனும், அவருடைய பத்தினிகளான மதுஸ்ரீ, மாதவஸ்ரீயோடு சேர்ந்த வசந்தருதுநாதன் என்போர்கள் அங்கு வசிக்கிறார்கள். இதிலிருந்து அடுத்த கோட்டைக்குள்ளும் ஆறு ருதுக்களுக்குரிய அதாவது பருவ காலத்திற்குரிய தேவர்கள் வசிப்பார்கள். இங்கு ஆறு ருதுக்கள் என்பது ஒரு வருஷத்திற்குரிய ஆறு பருவங்களாக பிரிக்கிறோம். ஆங்கிலத்தில் seasonஎன்பதுதான் இங்கு ருது என்று வந்திருக்கிறது.
அது four seasons என்று சொல்வோம். Winter is considered December, January and February; spring is March through May; summer is June through August; and fall or autumn is September through November என்கிறோம். ஆனால், நாம் இங்கு ஒவ்வொரு ருதுகளுக்குள்ளும் இரண்டிரண்டு மாதங்கள் வரும்.சித்திரை, வைகாசி மாதங்களின் வசந்த ருது (இளவேனில் காலம்), ஆனி, ஆடி மாதங்களுக்கான க்ரீஷ்ம ருது, (முதுவேனில்காலம்), ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களுக்கான வர்ஷ ருது (மாரிகாலம்), ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களுக்கான சரத் ருது (கூதிர்காலம்), மார்கழி மற்றும் தை மாதங்களுக்கான ஹேமந்த ருது (முன்பனிக்காலம்), மாசி மற்றும் பங்குனி மாதங்களுக்கான சிசிர ருது (பின்பனிக்காலம்).நான்காவதாக ஈயத்தால் ஆன கோட்டை. இப்போது தாமிரக் கோட்டைக்கும் ஈயக் கோட்டைக்கும் நடுவே ஒரு தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்திற்கு சந்தான வாடிகை என்று பெயர். அந்த சந்தான வாடிகையில் யார் இருக்கிறார்கள் எனில், சுக்ர ஸ்ரீ, சுசி ஸ்ரீ என்கிற இரண்டு பத்தினிகளோடு க்ரீஷ்ம ருது நாதன்… அந்த க்ரீஷ்ம ருதுவிற்குரியார் அங்கு வசிக்கிறார். இதற்குப் பிறகு 5. பித்தளைக் கோட்டை. இப்போது இந்த ஈயக் கோட்டைக்கும் பித்தளைக் கோட்டைக்கும் நடுவே என்ன இருக்கிறதெனில் ஹரி சந்தன வாடிகை என்கிற ஹரி சந்தன மரங்களால் சூழப்பட்ட தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் நபஸ்ரீ, நபஸ்ய ஸ்ரீ என்னும் இரண்டு பத்தினிகளோடு வர்ஷ ருது நாதன் அங்கிருக்கிறார்.
இதற்கு அடுத்து 6. பஞ்சலோகக் கோட்டை. இந்த பஞ்சலோகக் கோட்டைக்கும் பித்தளை கோட்டைக்கும் நடுவே ஒரு தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்திற்கு மந்தார வாடிகை என்று பெயர். மந்தார மரங்களால் சூழப்பட்ட தோட்டம் இருக்கிறது. அங்கு யார் இருக்கிறார்கள் எனில், இஷஸ்ரீ, ஊர்ஜஷீ என்கிற இரண்டு பத்தினிகளோடு சரத் ருது நாதன் இருக்கிறார்.இதற்கு அடுத்து 7. வெள்ளிக் கோட்டை இருக்கிறது. இந்த வெள்ளிக்கோட்டைக்கும் பஞ்சலோக கோட்டைக்கும் நடுவே பாரிஜாத விருட்சங்கள் நிறைந்த, பாரிஜாத வாடிகை என்கிற தோட்டமிருக்கிறது. அந்த தோட்டத்தில் சஹஸ்ரீ, சஹஸ்ய ஸ்ரீ என்கிற இரண்டு பத்தினிகளோடு ஹேமந்த ருதுநாதன் இருக்கிறார்.இதற்கு அடுத்து 8. தங்கக் கோட்டை இருக்கிறது. இந்த தங்கக் கோட்டைக்கும் வெள்ளிக் கோட்டைக்கும் நடுவே கதம்ப வனம் இருக்கிறது. கதம்ப மரங்களால் சூழப்பட்ட தோட்டங்கள் இருக்கிறது. இந்த கதம்ப தோட்டத்திற்குள் யார் இருக்கிறார்கள் எனில் தபஸ் ஸ்ரீ, தபஸ்ய ஸ்ரீ என்கிற பத்தினிகளோடு சிசிர ருது நாதன் அங்கிருக்கிறார்.இப்போது நாம் எட்டு கோட்டைகள் பார்த்து விட்டோம். அடுத்து வருவது ரத்தினங்களால் ஆனது.ஒவ்வொரு கோட்டையும் ஒரு ரத்தினத்தால் ஆனது. ஏனெனில், நாம் இந்த பூலோகத்தில் பார்க்கும் ரத்தினமே ஒரு பெருங் கோட்டையாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.இப்போது ஒன்பதாவதாக புஷ்பராகம் என்கிற ரத்தினத்தாலான ஒரு கோட்டை.
இந்த புஷ்ப ராக கோட்டைக்கும் இதற்கு முன்பு பார்த்த தங்கக் கோட்டைக்கும் நடுவே இருக்கும் தோட்டத்திற்கு நடுவே சித்த கணங்கள் என்றுஅழைக்கப்படுகின்ற, சித்தர்கள் இருக்கிறார்கள். இதற்கு அடுத்து பத்மராகம் என்கிற ரத்தினத்தாலேயே ஆன கோட்டை. பத்ம ராகம் என்கிற கோட்டைக்கு அடுத்த தோட்டத்தில் யார் இருக்கிறார்கள் எனில், சாரணர்கள் என்கிற தபஸ்விகள் இருக்கிறார்கள். இவர்களும் சித்தர்கள் போன்றே இருப்பவர்கள்.இதற்கு அடுத்ததாக, கோமேதகம் என்கிற ரத்தினத்தால் ஆன கோட்டை உள்ளது. அந்த கோமேதகம் என்கிற தோட்டத்திற்கு பக்கத்தில் யார் இருக்கிறார்கள் எனில், யோகினி கணங்களும், வடுக தேவர்களும் இருக்கிறார்கள். இந்த வடுக தேவர்கள் என்பவர்கள் பைரவ சொரூபமாக இருக்கக் கூடிய பிரம்மச்சாரிகள். அந்த வடுக தேவர்களை காப்பாற்றுவதற்கு யோகினி கணங்கள் இருக்கிறார்கள்.இதற்கு அடுத்து வஜ்ஜிர ரத்தினக் கோட்டை என்று வைரத்தாலேயே ஆன ஒரு கோட்டை இருக்கிறது. இந்த வைரத்தாலேயே ஆன கோட்டையில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், அப்ஸர ஸ்த்ரீகள் இருக்கிறார்கள். ரம்பா… ஊர்வசி… திலோத்தமா… மேனகா போன்ற அப்ஸர ஸ்த்ரீகள் இருக்கிறார்கள்.
மேலே சொன்ன ருதுக்களுக்குரிய தேவதைகள் ஆகட்டும், இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தேவதைகள் அனைவருமே ஏன் அங்கு இருக்கிறார் களெனில், இவர்கள் எல்லோருமே அங்கிருந்தபடியே ஸ்ரீநகரத்திற்குள் இருக்கின்ற பரதேவதையான லலிதா மகாதிரிபுரசுந்தரியை உபாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய சூரிகளைப் போலவும், கயிலாயத்திலுள்ள சிவ கணங்கள் மற்றும் கயிலாச வாசிகள்போலவும் உபாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர்களுக்கு அம்பாள் ஒருவழிமுறை கொடுத்திருக்கிறாள். அந்த வழிமுறைப்படி இவர்களெல்லாரும் உபாசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கு அடுத்து இருக்கக்கூடிய கோட்டையானது வைடூரியக் கோட்டையாகும். இது வைடூரிய ரத்தினத்தாலான கோட்டை. அந்தக் கோட்டைக்கு பக்கத்தில் இருக்கக் கூடிய தோட்டத்தில் யார் இருக்கிறார்களெனில், நாகங்கள் வாசம் செய்கின்றன. அதிலும் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகா பத்மன் போன்ற அஷ்ட நாகங்களும் அதற்குப் பிறகு நாக தேவதைகள்.
இதற்குப் பிறகு மகாபலி போன்ற அசுரர்கள் இந்த கோட்டைக்கு பக்கத்தில் இருக்கிறார்கள். நாகராஜாக்களும், அசுர ராஜாக்களும் இந்த கோட்டைக்கு பக்கத்திலிருந்து உபாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கு அடுத்து இந்திர நீலத்தால் ஆன ஒரு கோட்டை. இதில் யார் இருக்கிறார்கள் எனில், நம்முடைய மனித வர்க்கத்தில் பெரிய பெரிய சக்ரவர்த்தியாக இருந்த மனு, மாந்தாதா, பகீரதன், பரதன், பிருது போன்ற இஷ்வாகு வம்சத்தில் வரும் அத்தனை சக்ரவர்த்திகளும் இந்த இந்திர நீல கோட்டைக்கு பக்கத்தில் இருந்து கொண்டு அம்பிகையை உபாசிக்கிறார்கள்.இதற்கு அடுத்து முத்து என்கிற ரத்தினத்தால் ஆன கோட்டை இருக்கிறது. இந்த முத்துக் கோட்டைக்கு பக்கத்தில் யார் இருக்கிறார்களெனில், கிழக்கு பகுதியில் இந்திரன், தென் கிழக்கில் அக்னி, தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வட மேற்கில் வாயு, வடக்கில் குபேரன், வட கிழக்கில் ஈசானன் என்று முத்துக் கோட்டைக்கு பக்கத்தில் அஷ்ட திக் பாலகர்கள் அம்பிகையை உபாசிக்கிறார்கள்.
(சுழலும்)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா