Thursday, June 19, 2025
Home ஆன்மிகம் சாதனைகளைப் படைக்க அருளும் சப்தமாதர்கள்

சாதனைகளைப் படைக்க அருளும் சப்தமாதர்கள்

by Lavanya

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“கோமளவல்லியை, அல்லியந்‌ தாமரைக்‌ கோயில்வைகும்‌
யாமள வல்லியை, ஏதமி லாளை, எழுதரிய
சாமள மேனிச்‌ சகல கலாமயில்‌ தன்னைத்‌ தம்மால்‌
ஆமளவும்‌ தொழுவார்‌, எழுபாருக்கும்‌ ஆதிபரே.’’
– தொண்ணூற்று ஆறாவது அந்தாதி“ஆதியாக”

உமையம்மையை முழுமுதற் பொருளாகக்கொண்டு வழிபடும் சமயங்களுள் தலையாயதாகக் கருதப்படுவது அபிராமி சமயம். பட்டர் காலத்தில் ஒன்பது விதமான சமயங்கள் மாறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரவி இருந்தது. அதில் தாந்ரீகம் என்ற செயல்முறை வழிபாடு சார்ந்தது ஒரு சமயம். யந்த்ர, மந்த்ர, தந்த்ர, த்வைத, அத்வைத, சுத்தாத்வைத, தாந்ரீக, ஆசார, ஔஷத என்பதில் தாந்ரீக நெறியானது மூன்று முறையாக உள்ளது. வடமாநிலங்களில் ஒரு விதமாகவும், தென் மாநிலங்களில் ஒருவிதமாகவும், மத்ய பிரதேசத்தில் ஒரு விதமாகவும் இன்று வரை வழக்கில் உள்ளது.

* யாரும் அறியாமல் உபாசகன்தான் தனித்து நின்று உமையம்மையின் அருளால் ரகசியமாக வழிபடுவது.

* சப்த மாதர்கள் என்ற ஏழு தேவியர்களை ஒன்றாக இணைத்து அவர்களுடன் கணபதி, யோக மாகேஸ்வரர் அல்லது யோகநரசிம்மர் இவர்களையும் சேர்த்து வழிபாடு செய்வது.

* ஏழு தேவியர்களையும் தனித்தனியாக பிரித்து கணபதி, பைரவர், சப்தமாதர்களில் ஒருத்தி என மூவரையும் வழிபாடு செய்வது. இந்த மூன்று உபாசனையையும் ஒன்றாக மிகச் செம்மையாக உமையம்மையின் அருளால் செய்தவர் அபிராமி பட்டர். மது, மாமிசம், உயிர்ப்பலி, மத்ஸ்யம், உயிருள்ள பெண்களையே கடவுளாக பாவித்து வழிபடுவது. இந்த வழிபாடு தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டும் இருந்தது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முயல்வோம். இனி இப்பாடலுக்குள் நுழைவோம்.

‘`அந்தாதி பொருட்சொல் வரிசை’’

* கோமள வல்லியை
* அல்லியந்
* தாமரை
* கோயில் வைகும் யாமள வல்லியை
* ஏதம் இலாளை
* எழுதரிய சாமள மேனிச்
* சகலகலா மயில்
* தன்னைத் தம்மால்
* ஆம் அளவும் தொழுவார்
* எழுபாருக்கும் ஆதிபரே
இவ்வரிசையின் வழிபாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

“கோமள வல்லியை” என்ற வார்த்தையால் சாக்த சித்தாந்த நோக்கில் `சாமுண்டி’ என்ற தேவதையை குறிக்கிறார். இந்த தேவதையானது `மஹத்’ என்ற தத்துவத்திற்கு அதிதேவதையாகும். மேலும் `ரத்தத்திற்கும்’ இதுவே தேவதை. இது மோக்ஷ நகரமான `அவந்தி’ என்ற நகரத்திற்கு காவல் தேவதையாகத் திகழ்கிறது. இந்த தேவதையானது `சிங்கவாகனத்தின்’ மீது நான்கு கைகளுடனும் அபய, வரத முத்திரை தாங்கி பாசம் அங்குசம் ‘பாசாங்குசமும்’(2) என்ற ஆயுதம் தாங்கியிருக்கும்.

இந்த சாமுண்டி தேவியானவள் திரிபுர சம்ஹார காலத்தில் சிவனுக்கு `வடகிழக்கில்’ நின்று வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தாள் என்கிறது சாக்தம். இவளை வழிபட்டாள் அபிராமிபட்டர் கூறும் `ஆகு நல்லூழ்’ (பதிகம்) என்ற பதினாறு பேற்றில் ஒன்றை பெறலாம். இந்த சாமுண்டி தேவி சம்ஹார தாண்டவம் புரிபவள். `ஹம் க்ஷம்’ என்ற இரண்டு மந்திர எழுத்துக்களுக்கும் இவள் அதிதேவதை.

“மஹா தேவீச வித்மலேற,
இந்திர சக்தீச தீமஹீ,
தந்நோ சாமுண்டீ ப்ரசோதயர்த்.’’
– ‘உயிர் அவி உண்ணும் உயர் சண்டி’ (77) என்பதையே “கோமள வல்லியை” என்கிறார்.

“அல்லியந்’’என்ற வார்த்தையால் சாக்த சித்தாந்த நோக்கில் மாகேஸ்வரி என்ற தேவதையை சூட்டுகின்றார். இவள் அஹங்காரம் என்ற தத்துவத்தின் அதிதேவதையாகும். நாடி [நரம்பு] க்கும் இவளே அதிதேவதை. மேலும் மோக்ஷ நகரமான துவாரகைக்கு காவல் தேவதையாக திகழ்பவளும், விருஷப வாகனத்தில் நான்கு கைகளை உடையவளாகவும், `அபய வரத’ முத்திரை தாங்கி `மான்மழு’ என்ற ஆயுதம் தாங்கியவளாகவும் இவளை வடிப்பர். இந்த தேவியானவள் சம்ஹார காலத்தில் வட மேற்குத் திசையில் நின்று வெற்றியை பெற்றுத் தருவாள் என்கிறது சாக்தம். `ஓம்’ என்ற மந்திர எழுத்துக்கு இவள் அதிதேவதையாவாள். இந்த உமையம்மை ஆனந்த தாண்டவம் புரிபவள்.

“மஹா தேவீச வித்மஹே,
ஈச சக்தீச தீமஹீ,
தந்நோ மாகேஷ்வரி ப்ரசோதயாத்’’
– என்ற மந்திரத்தை கொண்டவளையே “அல்லியந்’’ என்கிறார்.

“தாமரை” என்ற வார்த்தையால் `வைஷ்ணவி’ தேவியை சூட்டுகிறார். இவள் `சப்தம்’ என்ற தத்துவத்தின் அதிதேவதையாவாள். மஜ்ஜா என்ற தாதுவிற்கு அதிதேவதை இவளே. மேலும் `அயோத்தி’ என்ற மோக்ஷ நகரத்தின் காவலாக இருப்பவளும் இவளே. இந்த வைஷ்ணவி, கருட வாகனத்தில் நான்கு கைகளுடன், அபய வரத முத்திரை தாங்கி, சங்கு சக்கரம் என்ற ஆயுதம் தாங்கி, திரிபுர சம்ஹார காலத்தில் சிவனுக்கு தென்கிழக்கு திசையில் நின்று வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தருபவள் என்கிறது சாக்தம். இவள் முனி தாண்டவம் புரிபவள். இந்த தேவியை வழிபட்டால் வாழ்நாள் பேற்றைப் பெறலாம் என்கிறது. “ப, ப (Bhaa), ம, ய, ர, ல’’ என்ற ஆறு எழுத்து மந்திரத்தின் அதிதேவதையாவார்.

“மஹா தேவீச வித் மஹே,
விஷ்ணு சக்தீச தீமஹீ,
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்’’

– என்பதனாலும், `நாராயணி’ (50) என்பதையே “தாமரை” என்கிறார்.“கோயில் வைகும் யாமள வல்லியை’’ என்று சாக்த சித்தாந்தப்படி `காளி’(77) என்ற தேவதையை குறிப்பிடுகின்றார். இவள் `ஸ்பரிசம்’ என்ற தத்துவத்தின் அதிதேவதையாகவும், சருமத்திற்குத் தேவதையாகவும் இருப்பவர். மோக்ஷ நகரமான காஞ்சிக்கு காவல் தேவதையாகத் திகழ்பவள். இந்த காளி தேவியானவள் பேய் வாகனத்தில் அமர்ந்து நான்கு கைகளுடன் அபய, வரத முத்திரை மற்றும் இரண்டு கைகளில் சூலம் – கபாலம் என்ற ஆயுதம் தாங்கியிருப்பவள்.

இந்த காளிதேவி திரிபுர சம்ஹார காலத்தில் சிவனுக்கு தென்மேற்குத் திசையில் நின்று வெற்றி வாய்ப்பை பெற்று தருபவள் என்கிறது சாக்தம். இந்த தேவியை வழிபட்டால், பதினாறு பேற்றில் ஒன்றான `வலிமை’ யை (பதிகம்) பெறலாம். இந்த காளி தாண்டவம்புரிபவள். வடமொழி எழுத்தான `க1, க2, க3, க4, ங, ச1, ச2, ச3, ச4, ஞ, ட1, ட2 என்ற பன்னிரெண்டு எழுத்துகளின் அதிதேவதையாவாள்.

“மஹாதேவீச வித்மஹே,
ருத்ர சக்தீச தீமஹீ,
தந்நோ காளி ப்ரசோதயாத்’’
– என்றும் ‘காளி’ (77) என்பதையே பட்டர் “கோயில் வைகும் யாமள வல்லியை’’
என்கிறார்.

“ஏதம் இலாளை’’
என்ற வார்த்தையால் சாக்த சித்தாந்த நோக்கில் வாராகி என்ற தேவதையை குறித்தார். இவள் `ரஸம்’ என்ற தத்துவத்தின் அதிதேவதையாவாள். `அஸ்தி’ என்ற தாதுவின் தேவதையும் இவளே. மோக்ஷ நகரமான மதுராவின் காவல் தேவதையாக திகழ்பவள். யானை வாகனத்தின் மீது நான்கு கைகளில் அபய, வரத முத்திரையும், ஏர், உலக்கை என்ற ஆயுதத்தை தாங்கியும்,
திரிபுர சம்ஹார காலத்தில் சிவனின் வடக்கு திக்தில் நின்று வெற்றியை பெற்று தருபவள் என்கிறது சாக்தம். இந்த வாராகி தேவியானவள் திரிபுர தாண்டவம் புரிபவள். பதினாறு பேற்றில் ஒன்றாகிய ‘தான்யத்தை’ அளிக்க வல்லவள்.வடமொழி உயிர் எழுத்தான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஔ, அம், அ: இந்தப் பதினாறு எழுத்துக்களின் அதிதேவதை வாராகி.

“மஹா தேவீச வித்மஹே,
சிவ சக்தீச தீமஹீ,
தந்தோ வாராஹீ ப்ரசோதயாத்’’
– என்கிறது வாராகி (50) என்பதையே பட்டர் “ஏதம் இலாளை’’ என்கிறார்.

“எழுதரிய சாமள மேனிச்’’ என்பதனால் சாக்த நோக்கில் கௌமாரி என்ற தேவியை சூட்டுகிறார். இவள் `ரூபம்’ என்ற தத்துவத்தின் அதிதேவதையாவாள். மாம்சம் என்ற தாதுவிற்கு இவளே தேவதையாவாள். `மாயை’ என்ற மோக்ஷ நகரத்திற்கு காவல் தேவதையும் இவளே, மயிலை வாகனமாகக் கொண்டவள். நான்கு கைகளை உடையவள் அபய, வரத முத்திரையும், வஜ்ரம், சக்தி என்ற ஆயுதத்தையும் தாங்கியிருப்பவள். இந்த கௌமாரி திரிபுர சம்ஹாரகாலத்தில் சிவனிற்கு மேற்கு திசையில் இருந்து வெற்றி வாய்பைத் தந்தாள் என்கிறது சாக்தம். இந்த தேவியை வழிபட்டால் பதினாறு பேற்றில் ஒன்றாகிய நுகர்ச்சியைப் பெறலாம் என்கிறார். இந்த தேவி கௌரி தாண்டவம் புரிபவள். வடமொழி எழுத்தான ட, ட, ண, த, த, த, த, ந, ப, ப இந்த பத்து எழுத்திற்கும் இவள் அதிதேவதையாவாள்.

“மஹா தேவீச வித்ஹே,
குவற சக்தீச தீமஹீ,
தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்’’
– என்று காயத்ரீயும். `ஒளிரும் கலா’ (77) என்பதையே “எழுதரிய சாமள மேனி’’ என்கிறார்.

“சகலகலா மயில்’’என்பதனால் பிராம்மி என்ற தேவதையை குறித்தார். இவள் கந்தம் என்ற தத்துவத்தின் அதிதேவதை. சுக்லத்திற்கு தேவதையும் இவளே மோட்ச நகரமான காசிக்கு காவல் தேவதையாக திகழ்பவளும் இவளே. இந்த தேவதை அன்ன வாகனமும் நான்கு கைகளில் அபய, வரத முத்திரையும், கிண்டி, அட்சமாலை என்ற ஆயுதத்தையும் தாங்கி, திரிபுர சம்ஹார காலத்தில் சிவனின் கிழக்கு திசையில் நின்று வெற்றியைப் பெற்றுத் தருவாள் என்கிறது சாக்தம்.

இந்த தேவி சந்தியா தாண்டவம் என்ற நடம்புரிவாள். பதினாறு பேற்றில் ஒன்றாகிய துணிவை பயனாக தர வல்லவள். வடமொழி எழுத்தான வ, ஷ என்ற அட்சரத்தின் அதிதேவதை பிராம்மி. இதை பட்டர் `நான்முகி’ (50) என்று சூட்டுகிறார். “மஹாதேவீச வித்மஹே, ப்ரம்ம சக்தீச தீமஹி, தன்னோ ப்ராம்மி ப்ரசோதயாத்’’ என்கிறது மந்த்ர காயத்ரி. இதையே பட்டர் “சகலகலா மயில்’’ என்கிறார்.

“தன்னைத் தம்மால்” என்பதனால் தன்னை தானே தொழக் கூடிய யோக மாகேஷ்வரரை குறிப்பிடுகிறார். இந்த யோகமாகேஸ்வரர் மனதில் எழுத்து வடிவத்துடன் சப்த மாதர்கள் இதழ் வடிவத்துடனும், கணபதியானவர் பொருள் வடிவத்துடனும் தியானிக்கப்படுகிறார். இதனாலேயே பட்டர் `கணபதியே நிற்கக் கட்டுரையே’ (காப்பு) என்று கணபதியி னிடத்துச் சொற்கள் இணைவதனால் ஏற்படும் கருத்தை வேண்டுகிறார். சொல்லாக சிவத்தையும் பொருளாக சப்த மாதர்கள் எழுவரையும் இணைந்து பிரார்த்திப்பதால் வாக்கு பலிதமும், கவிதை இயற்றும் திறனும் பெற்றே நமக்குக் கவிதை படைக்கிறார். இதையே ‘‘தன்னைத் தம்மால்” என்கிறார்.

“ஆம் அளவும் தொழுவார்” என்பதனால் “ஆம்” என்பது கணபதியைக் குறிக்கும் மந்திரக் கலைச்சொல். இது கண பதியின் பீஜாச்சரத்தை குறித்தது. இது கணபதியின் ஓர் எழுத்து மந்திரமாகும். “அளவு” என்பது இந்த இடத்தில் மாத்திரையையே குறிக்கும். தமிழகத்தில் சப்தமாதர்கள், கணபதி, யோகமாகேஸ்வரர் அல்லது யோக நரசிம்மர் இவர்களை ஒன்றாக இணைத்து வழிபாடு செய்வர். இதையே பட்டர் ‘மெய்ப்பீடம்’(60) என்பதால் அறியலாம். சாமுண்டி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, காளி, வாராஹி, கௌமாரி, பிராம்மி என்ற ஏழு திருஉருவங்களையும் இணைத்தே அமைப்பர். இவர்கள் கன்னியாகவும் மற்றும் தனியாக வசிக்கும் பேரிளம் பெண்ணாகவும் கருதியே வழிபடுவர்.

கன்னியாக வழிபடும்போது சப்தகன்னியர் என்ற பெயரும், பேரிளம் பெண்ணாக வழிபடும் போது சப்தமாதர் எனவும் அழைக்கப்பட்டனர். ஊரின் எல்லைப் பகுதியிலேயே இவர்களுக்கு வழிபாடு செய்யப்பட்டது. சிவன் கோயிலில் வடக்கு நோக்கி இந்த உருவங்களை அமைத்து வழிபட்டனர். இவர்களுக்கு உருவம் இன்றி தட்சிணா மூர்த்திக்கு முன் பலிபீடங்களாக அமைத்து வழிபடுவதும் உண்டு. இதையே இப்பாடலில் பதிவு செய்கிறார். இனி ஒவ்வொன்றாய்க் காண்போம்.

சப்த மாதர்கள் தமிழகத்தின் நோக்கில் மாத்ருக்கள் என்று எண்ணிக்கை சூட்டி அழைக்கப்படுகின்றனர். அந்தகாசுரனை வதம் செய்ய முற்பட்டபோதில் சிவபெரு மானின் திருமேனியிலிருந்து அவதரித்தவர்கள் இவர்கள் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, சாமுண்டி, காளி அல்லது இந்திராணி என அழைக்கப்பட்டனர். இவர்களை வழிபட்டு எல்லா நலன்களையும் அடையலாம் என்கிறது சாத்திரம்.

இவர்களையே சாமுண்டியை “கோமளவல்லி” என்றும், மாகேஸ்வரியை “அல்லியம்” என்றும், வைஷ்ணவியை தாமரை என்றும், காளி அல்லது இந்திராணியை “கோயில் வைக்கும் யாமள வல்லி” என்றும், வாராஹியை “ஏதமிலாளை” என்றும், கௌமாரியை “எழுதரிய சாமள மேனிச்’’ என்றும், பிராம்மியை “சகலகலா மயில்” என்றும் இப்பாடலில் பதிவு செய்கிறார் பட்டர். இவர்களை வணங்குவதனால் ஏற்படும் பயனையும் அவரே குறிப்பிடுகிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi