Friday, July 18, 2025
Home ஆன்மிகம் இரட்டை என்ற யதார்த்தம்

இரட்டை என்ற யதார்த்தம்

by Lavanya

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 98 (பகவத்கீதை உரை)

அகங்காரம் என்பது நமக்குள்ளேயே தோன்றினாலும், அது அதிகமாக பாதிப்பது என்னவோ, பிறரைத்தான்! அது தீயின் குணம். எரித்தல், வெம்மை பரப்புதல் என்ற தன் குணத்தை அது பரவலாக்குகிறது. குத்து விளக்காய் அந்த ஒளி அடங்கி விடுவதில்லை; ஒரு விபத்தாகப் பரவி விடுகிறது. இதற்கு நம்முடைய சங்கல்பமே முக்கிய காரணம். அதாவது எதிர்பார்த்தல், அடுத்து ஏக்கமுறுதல், அதற்கடுத்து பொறாமை கொள்ளுதல் என்பதாக வளரும் தன்மை.

நூறு ரூபாய் வைத்திருப்பவன் அது ஆயிரமாகாதா என்று ஏங்குகிறான். அப்படியே ஆகிவிட்டால், அது லட்சம், கோடி என்றாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். நேர்மையான உழைப்பில் பொருளாதாரம் உயர்ந்தால் அது பலருக்கும் நன்மையளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் அதுவே பேராசையால் வளருமானால், தனக்கே தீயதாக முடியும்.

ஆமாம், அத்தனை பணத்தையும் பாதுகாக்க வேண்டுமே! எங்கே பதுக்குவது, நம்பிக்கைக்கு உரிய எந்த சொந்தம் அல்லது நட்பிடம் கொடுத்து வைப்பது, அரசாங்க சட்டப் பார்வைக்குப் படாமல் இருக்க வேண்டுமே என்றெல்லாம் எத்தனை துன்பம்! இந்தக் ‘கவலை‘யால் சரியாக தூங்க முடிவதில்லை, சாப்பிட முடிவதில்லை, யாருடனும் சுமுகமாகப் பழக முடிவதில்லை – டயபடீஸ், கொலஸ்ட்ரால், ரத்தக் கொதிப்பு, நட்பு – உறவுகளின் தொடர்பு அற்றுப் போவது….. இதில் வேடிக்கை என்னவென்றால், தான் சேர்த்திருக்கும் பணத்தால் தனக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிவிட முடிகிறது; ஆனால் இன்னும் புதிதாக ஏதேனும் தேவைப்படுமோ, அதை வாங்க வேண்டியிருக்குமோ என்ற பேராசையில் கூடுதல் பணம் சேர்க்க, இச்சை தூண்டுகிறது!

தற்காலத்தில் இந்த இச்சைக்கு, சில விளம்பரங்களும் தூபமிடுகின்றன. ‘ஏற்கெனவே உங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கிறதா, இன்னொன்றையும் வாங்குங்கள் – மலைப் பிரதேசத்தில், கடற்கரை அருகில், தனித் தீவுப் பகுதியில்…‘ என்றெல்லாம் இச்சைத் தீக்கு நெய் வார்க்கின்றன.இப்படி இச்சை கொள்வதால் ஏற்படும் தீய விளைவுகளின் பாதிப்பு அதிகம் என்பதால் அடிப்படையிலேயே இச்சையைத் தவிர்ப்பவனே யோகி என்று விளக்குகிறார் கிருஷ்ணன். இச்சை வழியே சென்றால் சுகம் கிடைப்பதில்லை, அது துக்கத்தையே எதிர்கொள்ள வைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள, ஒருவர் சிந்திப்பவராக இருக்க வேண்டும்.

கிருஷ்ணன் குறிப்பிடும் சந்நியாசம், எல்லாவற்றையும் துறந்து, துக்கப் போர்வைக்குள் ஒளிந்து கொள்வதல்ல; துறப்பால் விளையும் இன்பத்தை நுகர்வது. அதாவது பலனை எதிர்பாராத இன்பம்! பொதுவாக, எதையும் முழுமையாகச் செய்யும்போது, அதிலேயே ஒன்றிவிடும்போது, பலன் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை. உண்ணும்போது வேறெதிலும் கருத்து போய்விடாதபடி உண்பதே சிறந்தது என்பர் பெரியோர்.

‘நொறுங்கத் தின்றால் நூறு வயசு‘ என்பது அவர்களுடைய வாக்கு. அதாவது வாயிலேயே உணவு முழுமையாக அரைபட்டு விடவேண்டும். ஜீரணம், வாயில் ஊறும் உமிழ்நீரிலேயே ஆரம்பித்து விடுகிறது. ஆகவே நிதானமாக, கவனம் பிசகாமல் உண்பதில்தான் ஆனந்தம் இருக்கிறது. இதையே பேசுவதிலும், நடையிலும், உறக்கத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய அறிவுரை. இதனால் இச்சை கட்டுப்படுகிறது; ஒழுக்கம் வளர்கிறது.

ஆரூருக்ஷோர்முனேர் யோகம் கர்ம காரணமுச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம காரணமுச்யதே (6:3)

‘‘தியான யோகத்தில் முன்னேற விரும்பும் ஒரு யோகிக்குக் கர்மம் (செயல்) கருவியாகிறது. அதே தியானத்தில் சித்தியடைந்தவனுக்குச்செயலற்றிருப்பதே காரணமாகிறது.”இரட்டை நிலை என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாதபடி நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. எதை யோசித்தாலும் அந்த இரு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. நடக்கும், நடக்காது என்ற இருநிலை எதிர்பார்ப்பில், இரண்டுக்கும் நடுவே வாழ்பவன்தான் யோகி என்கிறார் கிருஷ்ணன். அதாவது, ‘நடந்தால் சரி, நடக்காவிட்டாலும் சரி’ என்ற மனப்பாங்கு. தராசுமுள் போல சமநிலை பக்குவம்.

எடை அதிகமுள்ள பக்கத்தில் சாய்வதும், அதே எதிர்ப் பக்கத்தில் கூடுதல் எடை சேருமானால் இந்தப் பக்கம் சாய்வதுமாக இருந்தாலும், அதன் தன்மை நடுநிலையாக, நேராக நிற்பதுதான் – அதன் பணி எந்தத் தட்டில் கூடுதல் எடை இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதுதான் என்றாலும்! இந்த சமநிலை புத்திதான் யோகத்தின் சாரம் என்பது கிருஷ்ணனின் கூற்று. இரட்டை நிலைகளிடையே ஊசலாடுகிறது மனிதமனசு.

மனிதன் என்றாலே, மனசு கொண்டவன் என்றுதானே அர்த்தம்? மிருகத்துக்கும், மனிதனுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் இந்த மனசுதான். வெறுமே சாப்பிடுவதும், உறங்குவதும், இனப்பெருக்கம் செய்வதுமாக மிருகத்தின் பொழுது கழிகிறது. பசிக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்; எங்கு வேண்டுமானாலும் உறங்கலாம்; எப்போது வேண்டுமானாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடலாம் என்ற அந்த விலங்கியலைவிட, மனிதவியல் மேம்பட்டது. காரணம், இங்கே மனசு இருக்கிறது.

ஆனால் அப்படி இருப்பதே சங்கடத்துக்கும், துன்பங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதுதான் ஆதி மனிதன் முதல் இன்றைய சிறுவன்வரை வாழ்க்கையாகிப் போனது. அதாவது மனதினால் உறுதியாகச் செயல்பட இயலவில்லை. ‘இதைவிட அது, அதைவிட இன்னொன்று’ என்ற ஒப்பீடு மற்றும் லாப நஷ்டக் கணக்கில்தான் அது இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ஐம்புலன்களும் அதற்கு அடிமையாகிவிடுகின்றன. இதிலிருந்து மீள வேண்டும். மனதை அடிமையாக்க வேண்டும்! மனசு போன போக்கிலே போனால் வாழ்க்கையே வேஸ்ட்தான். அதாவது மனதை நடுநிலைக்கு இழுத்து வரவேண்டும். அங்கே, இங்கே என்று ஓடாதபடி கட்டிப் போட வேண்டும். தராசு முள் போல நிலைநிறுத்த வேண்டும்.

மனது ஓர் உணர்வை அடையும்போதே, அதற்கு எதிரான இன்னொரு உணர்வுக்கும் தயாராகிவிடுகிறது என்கிறார் தத்துவ ஞானி, ஓஷோ. நண்பர்களிடையே நட்பு என்ற உயர்நிலையில், எந்த வகையிலாவது பகை என்ற தேடுதலும் கூடவே அமைந்து விடுகிறது! ‘மிகவும் அந்நியோன்னியமாகப் பழகிவந்தார்கள், திடீரென்று என்ன ஆயிற்றோ தெரியவில்லை, பிரிந்துவிட்டார்கள்‘ என்று நெருங்கிய நண்பர்களைப் பற்றி விமரிசிக்கக் கேட்டிருக்கிறோம்.

மனசுதான் காரணம். நட்பு வலுப்பெறும்போதே மனசு பகைக்கான காரணத்தை, வாய்ப்பைத் தேட ஆரம்பித்துவிடுகிறது. மிக அற்பமான விஷயம், அதை மனசு பூதாகரமாக்கி, இனிய நட்பை நிரந்தரப் பகையாக்கிவிடுகிறது. மனசை அடிமைப்படுத்தத் தவறியதன் அல்லது இயலாததன் காரணம்தான் இது. நட்புக்கு சந்தோஷப்படும் மனசு, கூடவே பகைக்கான மிகச்சிறு துரும்பையும் தேடுகிறது என்பதுதான் விசித்திரமான மனோவியல். துரதிருஷ்டவசமாக இந்தச் சிறு துரும்பு பெரிய தடுப்பாக மாறிவிடுகிறது!

அது ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஒளிந்திருக்கும் வக்கிரம். நேரடியாக இல்லாவிட்டாலும், வதந்தியாக, மூன்றாம் நபர் தகவலாக அறியப்படும் ஒரு செய்தியை, தனக்கு எதிரான அபிப்பிராயத்தை ஊதிப் பெரிதாக்குவதுதான் இந்த வக்கிரத்தின் வேலை. ‘இவ்வாறு கேள்விப்பட்டேனே, சொன்னாயா?’ என்று முகத்துக்கு நேரே கேட்கத் தயக்கம், ஈகோ. ஆனால் அந்தத் தயக்கமே நிரந்தரப் பிரிவுக்கும் வழி காட்டிவிடுகிறது. தன்னிடம் எதற்காகப் பகைமை பாராட்டுகிறார் என்பது புரியாமலேயே, அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலேயே நண்பரும் விலகிப் போய்விடுகிறார். எத்தகைய நட்பு நஷ்டம்! யாரோ சொன்ன கற்பனை விஷயம் விஷமாகிப் போயிற்றே!

இந்த மனதை அமைதியால், தியானத்தால், கட்டுப்படுத்த இயலும் என்பது கிருஷ்ணன் போதிக்கும் உளவியல். பழகுமுறை ஒரு நாளைப்போல இன்னொரு நாளைக்கு இருப்பதில்லை. அந்தந்த தனி நபர் சந்திக்கும் அனுபவங்கள், விமரிசனங்கள், அறிவுரைகள், உணவு, உறக்கம் – இவற்றை அனுசரித்து நாளுக்கு நாள் பழகுமுறை மாறுபடுகிறது. இதை எதிர்பார்க்காத நண்பர், இவருடைய மாறுபாடான பழக்கத்தால் குழம்புகிறார். இவராவது நேரடியாகக் கேட்கலாம், ஏன் இப்படிப் பழகுகிறாய் என்று. ஒருவேளை அவர் தன் பிரச்னையைச் சொல்வாரானால், இவர் அதற்கான தீர்வும் அளிக்கக் கூடும். இருவருமே மௌனம் சாதிப்பதால் இழப்பு இருவருக்குமேதான். ஏன் இந்த நிலை? மனசுதான் காரணம்!

இதில் வேடிக்கை என்னவென்றால், திடீர் முரணான பழக்கத்துக்கு வழிகாட்டிய அதே மனசுதான், ‘அடடா, அப்படி நடந்து கொண்டு விட்டேனே!’ என்று அங்கலாய்க்க, பச்சாதாபப்பட வைக்கிறது. சரி, இதற்காக மன்னிப்பு கேட்கலாம் என்று போனால் மீண்டும் மனசு குறுக்கிடுகிறது. ‘நண்பன் உன்னைத் தப்பாகவா நினைத்துக் கொள்ளப்போகிறான்? எல்லாம் சரியாகப் போய்விடும்,’ என்று சொல்லித் தடுக்கிறது. இரண்டு நாளில் நண்பன், முந்தைய சம்பவத்தை நினைவில் கொண்டு பார்த்தும் பார்க்காததுபோலப் போனால், மீண்டும் பச்சாதாபம் துளிர் விடுகிறது; மறுபடியும் ஈகோ துளிரைத் துண்டித்து விடுகிறது; பகைக் களை சந்தோஷமாகப் பயிராகிறது.

இது ஒவ்வொருவருக்குமான, தவிர்க்க முடியாத குணாதிசயம்தான். ஆனால் நட்புக்கும், துரோகத்துக்கும் நடுவே வாழ்ந்து பார் என்கிறார் கிருஷ்ணன். நட்பில் அபிரிமிதமான பாசத்தையும் காட்டவேண்டாம்; விரோதத்தில் கடுமையான விஷத்தையும் கொட்ட வேண்டாம். முயன்றால் இது சாத்தியமாகும். நண்பனுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடனே பதறி, பரிதவித்தால், அது சிலசமயம் நடிப்பு போலவே இருக்கும். அதற்கு பதிலான நிதானமாக நடந்து கொண்டால், தனக்கு ஏதோ ஆறுதல், பற்றுக்கோடு கிடைக்கும் என்று நண்பனுக்கு நம்பிக்கை வரும். அவன் எதிர்பார்க்கும் ஊன்று கைத்தடியை நம்மால் கொடுக்க முடியாவிட்டாலும், நடிக்கவில்லை என்ற உணர்வே நண்பனுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கும்!

மனதின் இரட்டை நிலை விலகினால், அது விசாலமடையும். எந்த சந்தர்ப்பத்தையும் லாப – நஷ்ட கணக்கில்லாமல், சுயம் – புறம் என்று கொள்ளாமல் பார்த்தோமானால் விசாலத்துக்கு வாய்ப்பு உண்டு. இதற்கு தனி நபர் அணுகுமுறையைவிட, பொதுவான, சமுதாய அணுகுமுறை சரியான வழியாக அமையும். சத்சங்கங்களின் பொறுப்பு இதுதான். தொண்டர்கள் ஒன்றாய்க் கூடும்போது, ஆளாளுக்கு ஏதேனும் ஒரு வேலையை உளமார எடுத்துக் கொண்டு செய்கிறார்கள் என்றால், அவர்கள், அங்கே குழுமியிருக்கும் அனைவருக்குமாக சேவை செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? இதே மனப்பாங்கு, தனிநபருக்கும் காட்டப்பட வேண்டும் என்பதுதான் இந்த சேவையின் உள்நோக்கம்.

இவ்வாறு அடிக்கடி சத்சங்கங்களில் பங்கேற்பவர்கள், பொதுவாக எந்த பலாபலனையும் எதிர்பாராமல், பிற சந்தர்ப்பங்களிலும் சேவையாற்றக் கூடியவர்களாகவே இருப்பார்கள். உதாரணத்துக்கு புட்டபர்த்தி சத்ய சாய் பாபா இயக்கத்தின் தொண்டர்களைச் சொல்லலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடும் இவர்கள் அங்கே எந்த வேலையையும் கௌரவம் பார்க்காமல், ஈகோ பார்க்காமல் ஆர்வத்துடன் தாமாக முன்வந்து மேற்கொள்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் அனைவருமே தனிப்பட்ட முறையில் இதே விசால மனதுடன்தான் பிற அனைவருடனும் பழகுகிறார்கள்.

ஒருமைப்பட விரும்பும் மனசுக்கு, இதுபோன்ற சத்சங்கங்கள் பெரிதும் உதவுகின்றன. இதனால் கோபத்தை அதாவது மாற்றுக் கருத்தை இதமாக வெளிப்படுத்த முடிகிறது. தத்தமது அனுபவங்களை வைத்து, பிரச்னைகளுக்கு வழி அல்லது தீர்வு காட்ட முடிகிறது. வாழ்க்கையின் விசித்திரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில் இவர்கள் தனித்தனியே யோகிகளாகவே திகழ்கிறார்கள்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi