Sunday, July 20, 2025
Home மருத்துவம்உடல்நலம் உங்கள் கையில் கனிகளின் அரசி விளைவது மலைகளின் அரசியிடம்!

கனிகளின் அரசி விளைவது மலைகளின் அரசியிடம்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

‘‘இந்தப் பழத்தை நீங்கள் இதுவரை சுவைத்ததில்லை என்றால், உலகின் மிக உன்னதமான சுவையை நீங்கள் தவறவிட்டு உள்ளீர்கள்..!” ‘‘Tastes like Heaven..!” என்றும், ‘‘Most Delicious Exotic Fruit..!” என்றும், மலைகளில் வளரும் கனி வகையான மங்குஸ்தானைப் பற்றித்தான் இன்றைய இயற்கை 360°யில் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.6000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது எனப்படும் மங்குஸ்தான் பழத்தை சுவைக்க விரும்பிய விக்டோரியா மகாராணி, அதனை தன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு Knighthood என்ற மறவர் பட்டம் வழங்குவதாக அறிவிப்பு விடுத்தாராம். David Fairchild என்ற அமெரிக்க தாவரவியலாளர், ஐஸ்கிரீம் போல கரையும் இந்த சுவையான இனிப்பு நிறைந்த மங்குஸ்தான் பழங்களை வேறு எதனுடனும் ஒப்பிடவே முடியாது என்றும் கூறியுள்ளார். இவ்வளவு தனிச்சிறப்பு பெற்ற மங்குஸ்தானை,‘The Most Delicious Exotic Fruit’ என்று கொண்டாடுவதில் வியப்பில்லை..!

மங்குஸ்தான், கட்டாம்பி, ஹன்னு, கோக்கம் என பலவாறு அழைக்கப்படும் Mangosteen பழத்தின் தாவரப்பெயர் Garcinia mangostana. இது தோன்றிய இடம் மலாய் தீவுகளான இந்தோனேசியா, சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளாகும். இனிப்பும், புளிப்பும் என்ற பொருள்தரும் Mangosteen என்ற சொல், ‘Mang-chi-shih’ என்ற சீன மொழியிலிருந்தும், ‘Manggis’ என்ற மலாய் மொழியிலிருந்தும் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கருஞ்சிவப்பு அல்லது வயலெட் நிறத்தில், உருண்டை வடிவில், பீட்ரூட் மற்றும் நுங்குவைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் மங்குஸ்தானின் தோல் பகுதி மாதுளையை விட தடிமனாகவும், உள்ளே இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிற பூண்டு போன்ற சுளைகளும் விதையும் காணப்படும். பார்க்க அழகாக, சுவைக்க இனிதாக இருக்கும் மங்குஸ்தான் சுளைகள், ‘Sweet garlic’ என்றே சிலேடையாக அழைக்கப்படுகிறது. மங்குஸ்தான் பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஜூஸ், சாலட், ஜாம், ஸ்மூத்தி, ப்யூரீ, ஐஸ்கிரீம் தயாரித்தும் உண்ணலாம். ஷாங்கோ ஜூஸ் (‘Xango juice’) மற்றும் க்ளஃபோட்டி (‘Thai style Clafouti’) போன்றவை மங்குஸ்தானில் தயாரிக்கப்படும் பிரபல பானங்களாகும்.

இனிப்பும், புளிப்பும் சேர்ந்த சுவையும், குளிர்ச்சியும் கொண்ட மென்மையான மங்குஸ்தான் சுளைகளில், மருத்துவ குணங்களும் ஏராளம் இருக்கிறது. அதிக நீர்த்தன்மை (80%), குறைந்த கலோரிகள் (73/100g), நிறைந்த நார்ச்சத்துடன் (1.7g), வைட்டமின்கள் C, B, A, E மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட கனிமச்சத்து
களைக் கொண்ட மங்குஸ்தான் பழங்கள், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், இதய நோய், சர்க்கரை நோய், அலர்ஜி, வாய்ப்புண், வயிற்று அழற்சி, மலச்சிக்கல், சிறுநீர்த் தொற்று, மாதவிடாய் வலிகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், வைட்டமின் சி மற்றும் தாவரச்சத்துகள், கண் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், மூட்டு மற்றும் தசை ஆரோக்கியத்தைக் கூட்டுவதுடன், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்த உதவுகின்றன.

பழத்தில் உள்ள சத்துகளைக் காட்டிலும், தோலில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம் என்கிற ஊட்டச்சத்து நிபுணர்கள், அதன் ஸாந்த்தோன்கள் (Xanthones) ஆல்ஃபா மற்றும் காமா மங்கோஸ்டின்கள், கார்சினோன் (Garcinone), கார்ட்டனின் (Gartanin) மற்றும் ஆந்தோ-சயனின்கள் (anthocyanins) நிறைந்த இதன் தோல், அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் நிறைந்தவை என்கின்றனர். இதன் தாவரச்சத்து, யூரிக் அமிலத்தைக் குறைத்து, மூட்டு வீக்கம் மற்றும் வலியை கட்டுப்படுத்தும்.

முகப்பரு, தேமல், அலர்ஜி, சொரியாசிஸ், கிரெட்டோசிஸ் போன்ற சரும நோய்களில் இருந்தும், ஆழமான தழும்புகளில் இருந்தும், இன்னும் குறிப்பாக பற்சிதைவு, ஈறு வீக்கம் மற்றும் ஈறுகளில் நோய்த்தொற்று போன்றவற்றில் மங்குஸ்தான் பழத்தோல் மேல்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதால் தோல், குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் பரவாமல் தடுக்கிறது என முதல் நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மங்குஸ்தானின் மேல் தோல், இயற்கை மருத்துவத்தில் பயனளிப்பதுடன், அதன் கருஞ்சிவப்பு அல்லது வயலெட் நிறம், இயற்கை சாயமாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. நாள்பட்ட மங்குஸ்தான் கனியில் ஏற்படும் கேம்போக்ஸ் (gamboges) தாக்கத்தில், தடிமனான தோல் வழியாக மரப்பால் சுளைகளுக்குள் இறங்கி, மஞ்சள் நிறத்தில் மாற்றுவதுடன், சுளை களைக் கசப்பாகவும் துர்வாடையுடனும் மாற்றுகின்றன. இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நாம் உட்கொள்ளும்போது வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, இதயப் படபடப்பு, சமயத்தில் உயிருக்கே ஆபத்தும் ஏற்படக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கனிகளில் மிகச்சிறந்த ஒன்றாகத் திகழும் மங்குஸ்தான், பொதுவாக, மரக்கன்றுகள் மூலம் விளைவிக்கப்படுகிறது. அதிக நீர், அதிக சூரிய ஒளி மற்றும் மண் வளம் தேவைப்படும் மங்குஸ்தான் மரங்கள் எட்டு முதல் பதினைந்து வருடங்களுக்குப் பிறகே காய்க்கத் தொடங்குகின்றன. காய்ப்புக்கு வந்தபின், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, ஒரு மரம் கிட்டத்தட்ட 500 பழங்கள் என்ற முறையில் நல்ல மகசூலைத் தரும். மங்குஸ்தானின் சீசன் மே, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இருக்கும்.

20 அடி முதல் 80 அடி வரை வளரக்கூடிய இந்த மரங்கள், அதிகம் வளர்வது இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ், மலேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலாய் தீவுகள் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் என்றாலும், இவற்றின் பிரத்யேக குணங்களால் உலகம் முழுவதும் வலம் வருவதோடு, அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது.

பழங்களின் அரசியான மங்குஸ்தான், தமிழகத்தில், மலைகளின் அரசியான நீலகிரியில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கைகளால் பறிக்கப்படும் பழுத்த கனிகளை தடிமனான தோல் காப்பதால், பறித்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு வைத்து உட்கொள்ளலாம். குளிரூட்டப்படும் பழங்களை எட்டு வாரங்களுக்கு வைத்து உட்கொள்ளலாம். சீசனல் பழம் என்பதால் இதன் விலை சற்று கூடுதலாக இருக்கும்.வெப்ப மண்டல சூழ லில் மட்டுமே விளையும் இந்த சீசனல் பழத்தை அதன் தனிச்சுவைக்காக உண்டு மகிழ்வோம்… நலம் பெறுவோம்..!

(இயற்கைப் பயணம் நீளும்!)

தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன்
மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi