Monday, July 22, 2024
Home » மதிப்பெண் உளவியல்

மதிப்பெண் உளவியல்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

கூர்மையாக இந்த Gas lighting- ஐப் புரிந்து கொள்ள இன்னுமொரு திரைப்பட உதாரணம் பார்க்கலாம். அவ்வை சண்முகி திரைப்படத்தில் சண்முகி குழந்தையைக் காப்பாற்றி பாராட்டு வாங்கிக் கொண்டிருக்கும்போது, தவறு செய்து கொண்டிருக்கும் டெல்லி கணேஷ் அந்தப் பாராட்டைத் தடுப்பார். இப்போ எதற்கு என்று பேச்சை மடை மாற்றுவார். மருத்துவர் என்பதாலோ என்னவோ SP பாலசுப்பிரமணியம் கதாபாத்திரம் சட்டென இது ‘gas lighting’ என உணர்ந்து ‘‘பாராட்டினால் உனக்கு ஏண்டா வயிறு எரிகிறது” என்று கேட்டு அனைவரையும் நேரான பார்வைக்கு கொண்டு வருவார். இது பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வசனம். இத்தகு நிலைதான் கல்விக்கும் இன்று நடக்கிறது. சமூக பொறுப்பு மிக்கவர்கள் கூட கல்விக்கு எதிரான மனநிலைக்கு மாணவர்களை உந்தித்தள்ளும் தவறான செயலுக்குத் துணை போகிறார்கள்.

கல்விக்கண் திறந்த காமராஜருக்கும், சட்டமேதை அம்பேத்கருக்கும், பெண்களை கல்வியை பற்றிக் கொள்ளச் சொன்ன பெரியாருக்கும் அவர்கள் பிறந்தநாட்களில் மாலை போடும் சந்தர்ப்பவாதிகள் மதிப்பெண் பட்டியல் வரும்போது கல்விக்கு எதிர்ப்பக்கம் நின்று விடுவது ஒரு எதிர்மறை ஈர்ப்பு செயலே. சிறு வயதில் தன்னால் தோற்க முடியாத முதலிட மாணவன் /மாணவி மேல் கொண்ட காழ்ப்புணர்வு வளர்ந்தபின் ஊடக சுதந்திரத்தின் வாயிலாக கேலி பேசும் கோழைத்தன மனநிலை என்பது உளவியல் சொல்லும் பாடம்.

மதிப்பெண் முக்கியமில்லை என்று பேசுவது… இல்லை அதிக மதிப்பெண் எடுத்தே ஆக வேண்டும் என்று டார்ச்சர் செய்வது இரண்டுமே தவறு. எல்லாவற்றிலும் விளிம்பு நிலையில் நிற்பது மிக அபாயகரமான தீவிர மனநிலை நோக்கிச் செலுத்துவதே ஆகும். இந்நிலையில்தான் சமநிலையைத் தவற விடுவது நேர்கிறது. குழந்தைகளை கொடுமைப்படுத்தி, இயல்பாக இருக்கவிடாமல் தூண்டி அதிக மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது.

ஆனால், இது ஓரளவுக்கே உண்மை. நாற்பது எடுக்கும் மாணவனை மிரட்டி அமர வைத்து படிக்க வைத்தால் அறுபது எடுக்கலாம். தொண்ணூறுக்கு மேல் எடுப்பது, முதலாவது மதிப்பெண் பெறுவது என்ற உயர் இலக்குகளுக்கு அந்தந்த மாணவரது முழு ஈடுபாடும், அர்ப்பணிப்பும் மிக அவசியம். வயதுக்குரிய விளையாட்டு, பொழுதுபோக்கு, நட்பு என்று எதுவும் இல்லாமல் இருந்தால்தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பது முற்றிலும் தவறான புரிதலே.Smart work மற்றும் நேர்மறை மனநிலையைத் தயார் செய்வதே அதிக மதிப்பெண் பெறுவதன் சூட்சமம்.

உறவுகளையே எடுத்துக் கொள்வோமேயானால் நாம் வேண்டாம் என்று நினைக்கும் உறவு இரண்டு நாள் பேசவில்லை என்றால் அப்படியே பேசாமல் போய் விடும். அதே வேண்டும் என்று எண்ணுபவர்களோடு எவ்வளவு சண்டை ஏற்பட்டாலும் மனமிறங்கி சமாதானமாகி சேர்ந்து விடுவோம். ஐந்து வயதில் பிடிக்காது என்று புலம்பியபடியே உண்ணும் பாகற்காயை குழந்தை வெளியே தள்ளி வாந்தி எடுத்து விடுகிறது. அதே 30 வயதில் பாகற்காய் உடம்புக்கு நல்லது என்று வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்.

இங்கே பாகற்காயின் சுவை மாறவில்லை. மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதன் விளைவாக ‘‘நல்லது’ என்று உளப்பூர்வமாக ஒன்றை நம்பும்போது அதனை உடல் ஏற்கிறது. மனதிற்கும் அதேதான். கற்றலில் இவ்வளவு போதும் என்ற மனநிலையோடு இருப்பின் கல்வி உள்ளே செல்லாது. கற்றலுக்கு முடிவே இல்லை. அது அவசியம் என ஆழ்மனதில் உணரும் எவருக்கும் கல்வியில் சாதிப்பது எளிதாகும்.

இன்றைய சூழலில் கல்வி அவசியமில்லை என்ற பொதுக்கருத்து வேரூன்றி விட்டதால் மாணவர்கள் அரைகுறைகள், தற்குறிகள், தான்தோன்றிகளாக வளர்கிறார்கள். அவர்களில் பலர் எவரையும் மதிக்காத, எதனையும் நம்பாத, தன்னை மேம்படுத்திக் கொள்ளும் தொடர் செயலை தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மேல் அவ்வளவு மரியாதை இருக்கும். பெரியோரை மதித்தல், ஆசிரியரைத் தொழுதல் என்று இருந்த காலம் போய் இன்று தனது சுதந்திரம் என்பது பெரியோரை அவமானப்படுத்துதல் என்றாகிவிட்டது.

சில மாணவர்கள் பெண் ஆசிரியர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம். தனி மனித ஒழுக்கம் நிலைத்தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது. ஏன் எதற்கு எப்படி என்று கேட்க வேண்டும் என்று பகுத்தறிவு பாடம் சொல்லிக் கொடுத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு, வெறுமனே எல்லாவற்றையும் எதிர்த்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலில் மாணவர்கள் இருக்கிறார்கள். ‘‘தங்கள் கீழ்படிந்துள்ள…” என்ற சொல்லாடல் வழக்கொழிந்து போய்விட்டது.எதிலுமே செயல்திறன் மற்றும் தீர்வை நோக்கி வரவே முடியாது என்ற நிலையில் பெரியவர்களை எதிர்த்து நிற்பது மட்டுமே அறிவின் அடையாளம் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

இதைத்தாண்டி Peer group pleasure எனும் குழுமனப்பான்மைக் கொண்டாட்டம் சேரும் பொழுது போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. ஒரு பிரச்னை வரும்போது எதிர்கொள்ளும் மனவலிமையின்றி Substance என்று தற்காலிக தப்பித்தலுக்காக போதையை நாடுகிறார்கள். சமூகத்தோடு, ஆசிரியர்களோடு அல்லது பெற்றோரோடு தம்மால் ஒத்துப் போக முடியவில்லை எனும் மனச்சிக்கல் அவர்களுக்கு ஏற்படுகிறது. வயது காரணமாக ஏற்படும் உடல், மன மாற்றங்கள் சார்ந்த குழப்பங்களை முறையாக சமாளிக்க இயலாதவர்களும் தவறான பாதைக்குச் செல்கிறார்கள்.

உலக அளவில் அதிக மரணங்களுக்கான காரணங்களில் மூன்றாவது முக்கிய காரணமாக ஆல்கஹால் பயன்பாடு இருக்கிறது. உலக அளவில் ஒரு ஆண்டில்,ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளம் இறப்புகள் பெரும்பாலும் குடியினால் மட்டுமே ஏற்படுகிறது என்று ஒரு சர்வதேசப் பட்டியல் நம்மை வேதனைப்பட வைக்கிறது.வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் மூளை செயல்பாடுகளின் மாற்றங்களினால் வாதாடும்தன்மை (arugementation ), அதீத சுயவுணர்வு தாக்கம் ( Excessive Self Conscious influence ),ஒதுங்கியிருக்கும் தனிமை விழைவு ( Isolation -Loneliness ),
குறைகாணுதல் (Criticism ),அதீத நவீனத்துவம் (Excessive modernism) போன்றவை உருவாகின்றன.

இதன் விளைவே தலைமுறை இடைவெளி ( Generation Gap ) எனும் பெரும் சவாலாக நம்முன் இன்று நிற்கிறது. எனவேதான் இந்த Adolocence பருவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாற்றத்திற்கு உரிய ஒரு பருவமாகவும் உளவியலில் வலியுறுத்தி பிரச்னைக்குரிய பருவம் (Threatening age) என்று குறிப்பிடுகிறது. ஏனெனில், பலரும் எதிர்மறையானவர்களாகவும் பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் நிரந்தரமாக மாறிவிடக்கூடிய வாய்ப்பு அதிகம்.

நடைமுறைக்கு எதிரான பருவமாகவும் இது உணரப்படுவதால், மற்றவர்கள் தங்களை அதிகமாக விரும்ப வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதிக உணர்வு பூர்வமானவர்களாகவும், எளிதில் சோர்வடைந்து ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் திறனற்றவர்களாகவும் பலர் இருப்பதைக் காண்கிறோம். கூடுதலாக எதிர்பால் ஈர்ப்பு, காதல் – காமம் சார்ந்த தேடல் என்றும் கவனம் சிதற கல்வியின் முக்கியத்துவத்தை முற்றிலும் சிலர் மறந்து விடுகிறார்கள்.

உளவியல் மேதை எரிக்ஸன் இந்தக் காலகட்டத்தை Identity Vs Confusion என்று குறிப்பிடுகிறார். தான் யார் தனக்கு எது சரியானது என்பதைப் புரிந்து கொள்ளாத குழப்பநிலையே அது. இப்படியான நிலையில் அவர்களிடம் சுமுகமாக, நட்பாக இருப்பது அவசியம். அதே நேரத்தில் கல்வியின் முக்கியத்துவம், தனி மனித ஒழுக்கம், ஆரோக்யமான உணவுமுறை, சுயக் கட்டுப்பாடு போன்றவற்றை வலியுறுத்தி முறையான பழக்க வழக்கங்களுக்குள் அவர்களைக் கொண்டு வருவதும் பெரியவர்களின் தலையாய கடமை என்று உணர வேண்டும்.

பொருளாதாரக் காரணிகளுக்காக தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் பல வீடுகளில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்காமல் கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையின் ஆபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.‘Quality time’ எனப்படும் தரமான நேரம் செலவிடல் என்பதைப் பெற்றோர் நடைமுறைப் படுத்துதல் வேண்டும் என்று தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கிறது உளவியல்.

மாணவர்களுக்கு அதிகப்படியான சுதந்திரம் அல்லது அதீதக் கட்டுப்பாடு என்ற தவறான இரு விளிம்பு நிலையில் இருந்து பெற்றோர் இறங்கி வருவதே நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். கத்தி மேல் நடக்கும் பருவம் – எனும் அச்சம் தரும் குறிப்பை அளவான சுதந்திரம், தொடர் கல்வி போன்ற பயனுள்ள கேடயங்களை வைத்தே எதிர்கொள்ள இயலும்.எனவே,கல்விக்கண் பேணுவோம். மதிப்பெண்ணுக்காக என்றில்லாமல் அனைவருமே வாழ்தலை அர்த்தமுள்ளதாக்க கற்றலைத் தொடர்பயிற்சியாகக் கைக்கொள்வோம்.

You may also like

Leave a Comment

11 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi