Wednesday, July 16, 2025
Home ஆன்மிகம் பாதுகையின் பெருமை

பாதுகையின் பெருமை

by Lavanya

பகுதி 1

பெருமாளின் திருவருளை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது அவரது திருவடியோடு சேர்ந்தே இருக்கும் பாதுகையே. ஒரு குழுந்தைக்கு ஏதோ ஒரு வகையில் சிறு காயம் ஏற்பட்டு, அந்தக் குழந்தை எதுவுமே சொல்லத் தெரியாமல் அழும்போது அக்குழந்தையின் தாயானவள் எப்படி ஓடி வருவாளோ அப்படியே பக்தர்களாகிய நாம் படும் துன்பங்களைக் கண்டு பொறுக்க முடியாமல், அந்த துன்பங்களைக் களைய வேண்டும் என்று நமக்காக நம்மிடம் ஓடிவருபவளே பாதுகா தேவி.

பெருமாளின் திருவடி என்பது தந்தை என்றும் பாதுகா தேவியைத் தாய் என்றும் பெரியோர்கள் சிலாகித்துக் கூறுவார்கள். தன் குழந்தை தவறே செய்திருந்தாலும் அம்மா என்று கூப்பிட்டுவிட்டால் போதும், உடனே உதவி செய்ய தாயானவள் தன்னுடன் அக்குழந்தையின் தந்தையையும் சேர்த்தே அழைத்துக் கொண்டு வருவதை போலல்லவா பாதுகா தேவி திருமாலை நம்மிடம் அழைத்து வருகிறாள்?

வேதங்களுக்கெல்லாம் மேல் சாத்தாக, மேல் பகுதியாக விளங்கி கொண்டிருப்பவள் பாதுகாதேவியே. அப்படிப்பட்ட அந்த பாதுகையின் பெருமையைப் பற்றி தன்னுடைய “ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” கொண்டு நமக்கெல்லாம் தெரிவிக்கிறார் ஸ்வாமி தேசிகன். காஞ்சிபுரத்தை விட்டு ஸ்ரீரங்கத்தில் ஸ்வாமி தேசிகன் வாசம் செய்து கொண்டிருந்த ஒரு சமயம். ரங்க நாதனுக்கு ஸ்வாமி தேசிகன் மீது தனியொரு பாசம். தேசிகன் தன்னோடு நீண்ட நாட்கள் திருவரங்கத்தில் வாசம் செய்ய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டான், ரங்கன். அத்திருவரங்கனின் திருவருளால் ஸ்வாமி எழுதிய கிரந்தங் களில், பாதிக்கும் மேற்பட்ட, கிட்டதட்ட 53 கிரந்தங்கள் உருவானதே ஸ்ரீரங்கத்தில்தான்.

பாதுகையின் பெருமையை முன்னிறுத்தி 1008 ஸ்லோகங்களை ஸ்வாமி தேசிகன் அருளியதன் பின்னால் இருக்கக் கூடிய நிகழ்வு என்பது சாட்சாத் ஆதிசேஷன் மீது சயனித்துக்கொண்டிருக்கும் அந்த அரங்கனே தன் அரங்கமான திருவரங்கத்தில் நடத்திக் கொண்ட ஒரு அற்புதமான லீலை. திருவரங்கத்தில் ஸ்வாமி தேசிகன் தங்கி இருந்த சமயம் அது. ஒரு நாள் அதே ஊரைச் சேர்ந்த மிகத் திறமை வாய்ந்த கவிஞர் ஒருவர் ஸ்வாமி தேசிகனிடம் வந்து, “ நமக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம்..” என்றார்.

அதற்கு ஸ்வாமி தேசிகனோ, நமக்குள் இந்த போட்டி எல்லாம் எதற்கு நீர் பெரியவரா நான் பெரியவனா என்ற கேள்வியோ போட்டியோ எதற்கு? தேவரீரே பெரியவர் என்று சொல்ல, அதற்கு அந்த கவிஞரோ, “அதெல்லாம் கிடையாது. இன்றைய இரவிற்குள் பகவத் விஷயமாக ஆயிரம் ஸ்லோகங்கள் எழுதும் போட்டியை வைத்துக்கொள்வோம். நான் பெருமாளின் திருவடித் தாமரை விஷயமாக ஆயிரம் ஸ்லோகங்கள் இயற்றப் போகிறேன்.

நீரும் ரங்கநாதர் விஷயமாக ஏதாவது காவியம் செய்யலாமே? உங்களால் முடியாதது என்று ஒன்று கிடையவே கிடையாது என எல்லாரும் சொல்கிறார்களே” என்று சொல்ல,அதற்கு தேசிகனோ,” இதுவரை நானாகச் செய்ய வேண்டும் என்று எந்த ஸ்லோகத்தையும் அருளியதில்லை. தானாகவே கருட பகவனோ, ஹயக்ரீவரோ, சக்ரத்தாழ்வாரோ அவர்களாகவே வந்து சொல்லி அனுமதி கொடுக்கும் போது தான் அவர்கள் சம்பந்தப்பட்ட ஸ்லோகங்களை அடியேன் அருளி இருக்கிறேன். ரங்கநாதன் அப்படி அடியேன் ஆயிரம் ஸ்லோகங்களை அருள வேண்டும் என்று நியமித்தால் அது பகவத் சங்கல்பத்தின்படி நடக்கட்டும் என்று கூறிவிட்டு ரங்கநாதனின் சந்நதியை நோக்கி நடக்கலானார்.

திருவரங்கனின் சந்நதியில் தீர்த்தம் கொடுக்கப்பட்டபோது ஜல் என்ற ஒரு சப்தம் ஸ்வாமி தேசிகன் உட்பட அங்கிருந்த அர்ச்சகர் காதிலும் விழுந்தது. என்ன சப்தம் இது எங்கிருந்து வந்தது என அர்ச்சகர் பார்த்த போது ரங்கநாத பெருமாளின் திருவடியை அலங்கரிக்கும் பாதுகை சற்றே முன்னே வந்திருப்பது தெரிந்தது. அந்த பாதுகையை அப்படியே ஸ்வாமி தேசிகனின் தலையில் சாற்றி இதோ பாதுகாவே உங்களைத் தேடி வந்திருக்கிறாள் என்று அர்ச்சகர் சொல்ல சந்தோஷப்பட்ட ஸ்வாமி தேசிகன் பாதுகாவைப் பற்றியே ஆயிரம் ஸ்லோகங்கள் செய்வோம் என்று முடிவெடுத்தார்.

பாதுகாவே தன்னைப் பற்றி ஆயிரம் ஸ்லோகங்களை எழுத வைத்து நாளை அரங்கேற்றம் செய்து கொள்வாள் என்று அங்கிருப்பவர்களிடம் தெரிவித்து விட்டு தன் திருமாளிகைக்கு (இல்லத்திற்கு) வந்த ஸ்வாமியின் காதில் திரும்பவும் ஜல்லென்ற பாதுகையின் சலங்கை நாதம் ஒலிக்க, “ஸந்த: ஸ்ரீ ரங்க” என்று ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் இனிதே ஆரம்பிக்கப்பட்டு 1008 ஸ்லோகங்களாக ஒரே இரவில் வந்தது.

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் வழிகாட்டியாய் விழிகாட்டியாய் இருந்தது பாதுகையின் ஜல் என்ற சலங்கை சப்தமே.சில இடங்களில் அந்த நாதத்தையே விசேஷமாக ஒலிக்க செய்து தேசிகரே, இந்த இடத்தில் மாற்றி சொல்லும் என்று எடுத்துக் காட்டுவாளாம் பாதுகா.பாதுகையின் மீது அலாதி பக்தி கொண்டவர் ஸர்வ தந்த்ர ஸ்வதந்தத்ரரான ஸ்வாமி தேசிகன். பரம வைராக்கிய சீலரான தேசிகன் மிகவும் வேண்டி விரும்பி ரங்கநாதப் பெருமாளிடம் கேட்டுக்கொண்டது எதைத் தெரியுமா?

“பாதுகா சேவகர்” என்ற விருதை எனக்கு ரங்க நாதா நீ கொடுத்தருள வேண்டும் என்பதை மட்டும் தான். “பாதுகா சேவகரே என்றே என்னை எல்லோரும் கூப்பிட வேண்டும். இந்த தேகத்தை விட்டு உயிர் பிரியும் தருணத்தில், பாதுகா சேவகரே வாரும் என்று சொல்லி நித்ய சூரிகள் என்னை அழைத்துக் கொண்டு போக வேண்டும். அந்த விருதை எனக்கு அதனால் தயவுக்கூர்ந்து கொடுத்தருள வேண்டும் என்று ஸ்வாமி தேசிகன் வாய்திறந்து கேட்டதே பாதுகையின் மீது அவருக்கிருந்த பக்தியையும் ப்ரியத்தையும் அல்லவா எடுத்துக் காட்டுகிறது?

ஆகாயம் முழுவதும் சேர்ந்து ஒரு பெரிய எழுதும் சுவடியாகவும், ஏழு கடல்களில் உள்ள தண்ணீர் பேனாவின் மையாகவும், ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதி சேஷனே எழுதுகோலாகவும், ஆயிரம் தலைகள் கொண்ட அந்த பெருமாளே சொல்ல முற்படும் போது ஒரு வேளை பாதுகையின் பெருமையைச் சொல்ல முடியுமோ என்னவோ என்று பாதுகையின் பெருமையைச் சிலாகித்து சொல்கிறார் ஸ்வாமி தேசிகன். பெருமாளை அலங்கரிக்க மேலே இருக்கும் குடைகளும் கூடவே இருக்கும் சாமரங்கள் என்று அழைக்கப்படும் விசிறிகளும், திருமாலின் திருவடியை அலங்கரிக்கும் பாதுகையைப் பார்த்து கேலி செய்ததாம்.

நாங்கள் எல்லாம் பெருமாளுக்கு மேற்புறத்தில் இருக்கிறோம்.. ஆனால், பாதுகையே நீயோ கீழே அல்லவா இருக்கிறாய் என்று? அந்த கேலி பேச்சைப் பொறுத்துக் கொள்ள முடியாத பெருமாளே, ராமாவதாரத்தில், பாதுகைக்கு பரதன் வழியாக பட்டாபிஷேகம் செய்ய வைத்து, அந்த பாதுகைக்கு நீ குடை பிடி என்று குடையிடம் சொல்லி, விசிறியிடம் இதோ இந்த பாதுகைக்கு நீ விசிறி வீசு என்றே பணித்தாராம் திருமால்.பாதுகையின் பெருமையைத் தொடர்ந்து “ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்” கொண்டு நாம் அனுபவிக்க அந்த பாதுகா தேவியே துணை நிற்கட்டும் என்று அவளது சரணார விந்தங் களில் பணிந்து வேண்டி நிற்போம்..

(வளரும்).

நளினி சம்பத்குமார்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi