நன்றி குங்குமம் டாக்டர்
சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.சுரைக்காயின் சாறு காதுவலியைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நோயை குணமாக்குகிறது.
உடலில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை வழங்குகிறது. பித்தத்தைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீர்க் கோளாறுகளை சரி செய்கிறது.
நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு, உடலுக்கு வலிமையையும் கொடுக்கிறது.நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்ற நோய்களை சரி செய்கிறது.
சுரைக்காயின் சதை உடல் எரிச்சலை தணிக்கிறது. இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மை கொண்டது.அஜீரணக்கோளாறு இருப்பவர்களும் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் தாகம் ஏற்படாது. மேலும் உடலின் வறட்சியை போக்கும் நல்ல நிவாரணி. கை, கால் எரிச்சல் உள்ளவர்கள் எரிச்சல் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பினாலும் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடை குறையும். ஆகவே இதனை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் இட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும்.சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர, சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்னைகள் குணமாகும். மேலும், கல்லீரல் வீக்கத்தை குறைத்து, நன்கு செயல்பட உதவுகிறது.
சுரைக்காய் சாற்றை தலைமுடிக்கு தேய்த்து குளித்தால், செம்பட்டை வராது. நல்லெண்ணெயுடன் சுரைக்காய் சாறு சேர்த்து, தலையில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளிக்க, நல்ல
தூக்கம் வரும்.ஒரு கப் பச்சை சுரைக்காய் சாறில், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால், நா வறட்சி நீங்கும்; வயிற்றுப் போக்கு நிற்கும். குறிப்பாக, உப்பு போடாமல் இதை அருந்தக் கூடாது.
தொகுப்பு: ஆர்.கே லிங்கேசன்