Wednesday, February 12, 2025
Home » ஹெச்.எம்.பி.வி எனும் புதிய அரக்கன்!

ஹெச்.எம்.பி.வி எனும் புதிய அரக்கன்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

ரெட் அலெர்ட்!

இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இப்போதுதான் ஆரோக்கியம் முதல் பொருளாதாரம் வரை அனைத்தும் ஓரளவு மேம்பட்டு உலகம் பெருமூச்சு விட்டது. இதோ இப்போது இன்னொரு வைரஸ் சீனாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. உலகமே மீண்டும் நடுங்கத் தொடங்கியுள்ளது. இந்த புதிய அரக்கனின் பெயர் ஹெச்.எம்.பி.வி.

ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகிவருகின்றன.தற்போது தமிழகத்தில் இரண்டு குழந்தைகளுக்கு ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு குழந்தைக்கும் சேலத்தில் ஒரு குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி

இந்தியாவில் முதன் முறையாக கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளுக்கு ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கர்நாடகாவில், இரண்டு குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ICMR) சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது’ என்று மத்திய சுகாதார அமைச்சகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 3 மாத பெண் குழந்தைக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், சிகிச்சைக்குப் பிறகு அந்தக் குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டது.குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியதாக பிபிசி இந்தியின் நிருபர் இம்ரான் குரேஷி தெரிவித்தார்.

கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ‘‘இந்த வைரஸ் ஏற்கெனவே இந்தியாவில் இருப்பதால் இதை HMPV-யின் முதல் பாதிப்பு என்று அழைப்பது தவறு. குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸின் ஒன்று முதல் இரண்டு சதவீதம் ஏற்கனவே இங்கு உள்ளது’’ என்று கூறினார். மேலும், ‘‘சிறுமியின் குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு பயணம் செய்ததாக எந்த பதிவும் இல்லை. இது சீனாவில் பரவும் அதே வகை (variant) தானா அல்லது வேறுபட்டதா என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது. இந்திய அரசு எங்களுக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை” என்று அவர் கூறினார்.

இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது என்றாலும் சீனாவில் இந்த நோய் பாதிப்பு அசாதாரணமானது அல்ல. HMPV வைரஸ் இந்த நேரத்தில் தொற்றும் ஒரு பொதுவான நோய்க்கிருமியாகும். நிலைமையை அந்நாட்டு அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்த நோய் பாதிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

ஹெச்.எம்.பி.வி. வைரஸ் என்றால் என்ன?

இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளில் தோன்றியது என்றும், அதன்பிறகு இந்த வைரஸ் சூழலுக்கேற்ப மீண்டும் மீண்டும் தன்னைத் தகவமைத்துக் கொண்டதாகவும் இப்போது இந்த வைரஸ் பறவைகளை பாதிக்காது என்றும் சயின்ஸ் டைரக்ட் என்ற ஆய்வுக்கட்டுரைகளுக்கான இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘கடந்த 2001ஆம் ஆண்டு மனிதர்கள் மத்தியில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதுதான் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கும் என்று கண்டறியப்பட்டது” என்று அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் தாக்கலாம். இதன் காரணமாக, நோயாளிக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
நோய் பாதிப்பு அதிகரித்தால், இந்த வைரஸால் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.இந்த வைரஸ் பொதுவாக 3 முதல் 6 நாட்கள் உயிருடன் இருக்கும். தொற்று எவ்வளவு கடுமையானது என்பதைப் பொறுத்து குறைந்த அல்லது அதிக நாட்களுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம்.

ஹெச்.எம்.பி.வி. வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

இந்த வைரஸ் இருமல் மற்றும் தும்மலின்போது வெளியாகும் சளி துளிகள் மூலம் பரவி மக்களிடம் நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.கை குலுக்குவதன் மூலமோ, கட்டிப் பிடிப்பதன் மூலமோ அல்லது ஒருவருக்கொருவர் தொடுவதன் மூலமாகவோ இந்த வைரஸ் பரவலாம்.இருமல் மற்றும் தும்மல் காரணமாக சளி துளிகள் ஓரிடத்தில் விழுந்து, அந்த இடத்தில் உங்கள் கைகளை வைத்த பிறகு, உங்கள் முகம், மூக்கு, கண்கள் அல்லது வாயைத் தொட்டால், இந்த வைரஸ் உங்களையும் பாதிக்கலாம்.

மருத்துவர்கள் கூறுவது என்ன?

பி.டி.ஐ செய்தி முகமையிடம் பேசிய டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் சுரேஷ் குப்தா, ‘‘இதுவொரு புதிய வைரஸ் அல்ல” என்று கூறினார்.‘‘இருபது ஆண்டுகளாக இதைப்பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள். குளிர்காலத்தில் இதனால் நோய் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது காய்ச்சல்
ஏற்படுத்தும் வைரஸை போன்றது.”‘‘இருமல், சளி போன்றவற்றுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளே இந்த நோய் பாதிப்புக்கும் கொடுக்கப்படும். பின்னர் நோயாளி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்” என்று மருத்துவர் சுரேஷ் குப்தா கூறுகிறார்.

‘‘பெரும்பாலும் இதற்காக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு பரிந்துரைக்கப்படவில்லை” என்று அவர் கூறுகிறார்.அதே மருத்துவமனையில் மார்பு மருத்துவத் துறையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் பாபி பலோத்ரா கூறுகையில், ‘‘இதுவரை நாங்கள் பார்த்த அனைத்து நோய் பாதிப்புகளும் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தன” என்றார். இருப்பினும், ஏற்கெனவே ஆஸ்துமா மற்றும் க்ரானிக் அப்ஸ்ரக்டிவ் பல்மொனரி டிசீஸ் எனப்படும் நுரையீரல் நோய் பாதிப்புகொண்ட நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். அவர்களுக்கு இந்த ஹெச்.எம்.பி.வி வைரஸ் நோய் பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் சிக்கல்கள் இருக்கலாம். அவர்களுக்கு சுவாசிப்பதில் அதிக சிரமம், சோர்வு மற்றும் காய்ச்சல் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

‘‘இந்த வைரஸின் திரிபு இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது. கொரோனா வைரஸ் கடுமையான சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தியது போல இதில் பாதிப்புகள் எதுவும் காணப்படவில்லை. சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வகை வைரஸின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதும் வரும் நாட்களில் தெரிந்துவிடும்” என்றார் அவர்.

மனதில் கொள்ள வேண்டியவை

இந்திய சுகாதார சேவைகள் துறை இயக்குநர் மருத்துவர் அதுல் கோயல், ஹெச்.எம்.பி.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்தும், சளி, இருமலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்கிறார்.

இருமல் அல்லது தும்மல் வரும்போது கைக்குட்டை அல்லது துணியை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

இருமல் மற்றும் தும்மலுக்கு ஒரு தனி கைக்குட்டை அல்லது துண்டைப் பயன்படுத்த வேண்டும். பிறகு கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும்.

உங்களுக்கு சளி இருந்தால், முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும், வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்க வேண்டும்.

அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, உங்கள் கைகளைக் குறைந்தது 20 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

நீங்கள் பயன்படுத்திய பாத்திரங்களை (கப், தட்டு அல்லது கரண்டி) மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

இதுவரை, இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட எதிர்ப்பு மருந்து எதுவும் தயாரிக்கப்படவில்லை அல்லது எந்தத் தடுப்பூசியும் இல்லை.

இந்த நோய் பாதிப்புக்கு காய்ச்சலுக்கான மருந்துகளே வழங்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஏற்கெனவே சுவாசப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, இந்த வைரஸ் சிக்கலை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi