விசுக்ர பிராண ஹரண வாராஹீ வீர்ய நந்திதா
பிராணனிலிருந்து வரக்கூடிய இடையூறு என்பது, உள்முகமான அதாவது அகத்திலிருந்து (internal) ஆக வருகின்ற இடையூறு. நோய் நொடியாகட்டும் எல்லாமே பிராணனில் வருகின்ற மாற்றத்தினால் வருகின்றது. External ஆக மற்றவர்களுடைய விஷயத்திலிருந்து வருமல்லவா… அடுத்தவர்களுடைய தாக்கம் இருக்குமல்லவா… நாம் எதுவுமே செய்யவில்லையென்றாலும் நம்மை தவறாக நினைக்கலாம். சிலருடைய திருஷ்டி நம்மீது வேலை செய்யலாம். மற்றவர்கள் நம்மீது ஒரு அவதூறு சொல்லலாம். நாம் ஒருவருக்கு எந்தக் கெடுதலும் செய்திருக்க மாட்டோம். ஆனால், அவன் நம்மை எதிரியாக நினைத்துக் கொண்டிருப்பான். Internal ஆக ஒரு list போடுவதுபோல, external ஆகவும் list போடலாம். இப்படி external ஆக வரக்கூடிய இடையூறுகளையும் வாராஹிதான் தகர்க்கிறாள். ஏன், எதிரிகளுடைய தொல்லையை நீக்குவதற்கு வாராஹியை சொல்கிறார்களெனில் அதற்கு இதுதான் காரணம். நமக்கு internal ஆக வரக்கூடிய எதிரிகளையும், external ஆக வரக்கூடிய எதிரிகளையும் நீக்கக் கூடியவளே வாராஹி.
ஆனால், இதை மென்மையாகச் செய்ய முடியாது. Force full ஆக செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு வாராஹியினுடைய விஷயம் இங்கு தேவைப்படுகின்றது. வாராஹியினுடைய சொரூபத்தில் வந்து அந்த சாதகனை காப்பாற்றுகிறாள்.
எப்படி காப்பாற்றுகிறாள் எனில், ஸ்தூலமாக வரக்கூடிய negativities விருத்திகள் இருக்கிறதல்லவா…. அது வெளியிலிருந்து வரக்கூடியதாக இருக்கலாம். அல்லது உள்ளுக்குள்ளிருந்து வரக்கூடியதாகவும் இருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் சூட்சுமமாகப் பார்ப்போம்.
அதாவது, சாதகனுடைய, இவனுடைய பிராணனுக்கு ஏதேனும் இடையூறு வந்தால், அந்த இடையூறினுடைய பிராணனை அம்பிகை தகர்த்து விடுவாள். அதனால்தான், விசுக்ர பிராண ஹரண வாராஹி…. இங்கு சுக்ரம் என்றால் ஒளி மிகுந்தது என்று சொல்லலாம். சுக்ரம் என்றால் வெண்மை, purity என்று வெவ்வேறு பொருள்கள் உள்ளன. இங்கு வி என்கிற வார்த்தை சேரும்போது… இதற்கு முன்னால் உள்ள நாமத்தைப்பார்க்க வேண்டும். விஷங்கன் என்று பார்க்கும்போது விக்ருஷ்டேன சங்கஹா… என்று பார்த்தோம். அதாவது நம்மை சம்சாரத்திற்குள் செலுத்தக் கூடிய சங்கம். Negative சங்கம் எதுவென்றால் அதுவே விஷங்கம். அந்த விஷங்கனை அவள் சம்ஹாரம் செய்தாள் என்று பார்த்தோம்.
இங்கு விசுக்ரம் என்பதில் சுக்ரம் என்றால் ஒளி. எவனுக்கு ஒளி இல்லையோ… நன்கு கவனியுங்கள். விக்ருஷ்டேன சுக்ரஹா… விக்ருஷ்டம் என்றால் இல்லை. அதாவது எவனுக்கு ஒளி இல்லையோ அவனே விக்ருஷ்டம். அப்போது இருள் ரூபத்தில் இருக்கிறான் அவன். ஒளியில்லாதவன். Puritiy யே இல்லாத impurity. அதுபோல வெண்மை என்று எடுத்துக் கொண்டால், வெண்மை இல்லாதவனே விசுக்ரன்.
நம்முடைய தேகத்திலேயும் பிராணனிலேயும் எப்படி எதிரொலிக்கும் எனில், நம்முடைய தேகத்திலேயும் தேஜஸிலேயும் நம்முடைய purity ஐ எது குறைக்கின்றதோ, அது உள்ளேயிருந்து வந்தாலும் சரிதான். வெளியிலிருந்து வந்தாலும் சரிதான். வெளி எதிரிகளாக இருந்தாலும். உள் எதிரிகளாக இருந்தாலும். பிராணனில் ஏற்படக் கூடிய மாற்றமாக இருக்கட்டும். கர்ம வாசனையினால் ஏற்படக் கூடிய மாற்றமாக இருக்கட்டும். இந்த இடையூறுகளை மிக வீரியமாக வாராஹி சம்ஹாரம் செய்கிறாள். அப்படி சம்ஹாரம் செய்யக் கூடிய வாராஹியை பார்த்து அம்பிகையானவள் சந்தோஷப்படுகிறாள்.
இந்த நாமாவானது என்ன காண்பித்துக் கொடுக்கிறதெனில், சூட்சுமமான அஞ்ஞான விருத்திகளை அழிக்க அம்பிகை எப்படி உதவி செய்கிறாளோ, அதேபோல ஸ்தூலமான அஞ்ஞான விருத்தி விஷயங்களிலிருந்து காப்பாற்றுகிறாள். ஒரு குழந்தையை அம்மாவானவள் எப்படி எல்லா வகையிலும் காப்பாற்றுவாளோ… சாப்பாடு கொடுப்பது முதல் வெளியிலிருந்து அந்தக் குழந்தைக்கு எதுவும் வந்து விடக்கூடாது என்பதும் அம்மாவினுடைய விஷயமல்லவா?
எனவே, இந்த சாதகனை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எந்த இடையூறும் வராதபடிக்கு அம்பாள் வாராஹி சொரூபத்திலிருந்து காப்பாற்றுகிறாள். பண்டாசுரனின் சேனாதிபதியான விசுக்ரனை மஹாவாராஹியான தண்டநாதா சம்ஹாரம் செய்வதைப் பார்த்து அம்பாள் ஆனந்தப்படுகிறாள் என்பதுதான் இந்த நாமாவின் பொருளாகும்.
இந்த நாமத்திற்கு அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தைச் சொல்லலாம். ஏனெனில், சிவன் அந்தகாசூரன் எனும் அசுரனை வதைத்த தலமாகும். ஏனெனில், இந்த நாமமே வெண்மையில்லாத, ஒளியற்ற, தூய்மையற்ற இருளான விசுக்ரன் என்கிற அஞ்ஞான இருள் ஆவான். அப்படிப்பட்ட அதேபோன்ற அந்தகாசுரன் எனும் அரக்கனை இங்கு சிவன் வதைத்து வீரட்டேஸ்வரர் எனும் நாமம் பெற்றார். அந்தகன் என்றாலே இருள் என்றுதான் பொருள். அப்படி அந்தகாசுரனை சம்ஹாரம் செய்யக் கூடிய சுவாமியாக இருப்பதால் இந்தக் கோயிலைச் சொல்லலாம்.
இங்குள்ள அம்பாளுக்கு பெரிய நாயகி என்றொரு பெயர் உண்டு. மேலும். இங்கு அந்தகாசுரனை வீரட்டேஸ்வரர் வதைத்ததைப் பார்த்து அம்பாள் சந்தோஷித்ததால், மகிழ்ந்ததால் அம்பிகைக்கு சிவ மகிழ் வள்ளி என்றொரு நாமமும் உண்டு. ஏனெனில், இந்த நாமத்தில் நந்திதா என்று வருகின்றது. அதாவது சந்தோஷப்பட்டாள் என்று வருகின்றது. மேலும், சிவானந்த வல்லி என்றும் ஒரு நாமம் உண்டு. எனவே, இந்த நாமத்தைச் சொல்லி, திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தையும் தரிசித்து வருதல் இன்னும் சிறப்பாகும்.
(சுழலும்)