இதற்கு முந்தைய நாமத்தில் பாலா திரிபுரசுந்தரியினுடைய விஷயம் இருந்தது. அதாவது அம்பாளினுடைய பாலா சொரூபத்தினுடைய விஷயம். அம்பிகையின் குமாரியான பாலாவினுடைய விஷயம். அவள் எப்படி பண்ட புத்திரர்களை சம்ஹாரம் செய்தாள். அந்தர்முகமாக காலத்தைத் தாண்டிய நிலையை எப்படி காண்பிக்கின்றது என்று பார்த்தோம். இப்போது இந்த நாமமானது மந்த்ரிணீ தேவி அதாவது ராஜமாதங்கி, ராஜ ஷியாமளா இந்தப் போரில் முக்கியமான விஷயத்தைச் செய்கிறாள். அதைப்பற்றித்தான் இந்த நாமம்.
மந்த்ரிணீ தேவி இங்கு என்ன செய்கிறாள்?
இந்தப் போரில் விஷங்கன் என்கிற ஒரு அசுரன் வருகிறான். அவன் யாரெனில் பண்டாசுரனுக்கு மந்த்ரிணீயாக இருக்கிறாள். பண்டாசுரன் என்ன செய்கிறான் எனில், தன்னுடைய தோள்கள், தன்னுடைய இரண்டு புஜங்களிலிருந்து ஒரு புஜத்திலிருந்து விஷங்கனையும், இன்னொரு புஜத்திலிருந்து விசுக்ரன் என்கிற அசுரனை சிருஷ்டி செய்கிறாள். அப்படிச் செய்து, விஷங்கனை மந்திரியாக்கி, விசுக்ரனை சேனாதிபதியாக்கினாள்.
இப்போது விஷங்கன் என்று சொல்லக் கூடிய மந்திரிதான் போருக்கு வருகிறான். அப்படி வரும்போது அம்பாள் என்ன செய்கிறாளெனில், தன்னுடைய மந்திரியாக இருக்கக்கூடிய ராஜமாதங்கி மகாஷியாமளாவை அனுப்புகிறாள். ஏனெனில், இதற்கு முந்தைய நாமத்தில் பண்ட புத்திரர்கள் வந்தபோது, தன்னுடைய புத்திரியான பாலாவை அனுப்பினாள். இந்த நாமாவில் பண்டாசுரனுடைய மந்திரி வரும்போது தன்னுடைய மந்திரிணியை அனுப்புகிறாள்.
ஏனெனில், ஒரு போரில் என்ன விஷயமெனில், வரக்கூடிய எதிரிக்கு ஏற்றபடி தன்னுடைய சேனையிலிருந்து ஒருவரை அனுப்ப வேண்டுமென்பது மகாராஜாவுக்கோ அல்லது மகாராணிக்கோ இருக்கக்கூடிய விஷயம். அதனால், மந்த்ரிணியையே அதாவது ராஜமாதங்கியையே அனுப்புகிறாள். அப்போது மந்த்ரிணியான ராஜமாதங்கியானவள் அந்த விஷங்கன் என்கிற அசுரனை வதம் செய்துவிடுகிறாள். அப்படி வதம் பண்ணுவதைப் பார்த்து அம்பாள் சந்தோஷப்படுகிறாள்.
இதுதான் இந்த நாமாவினுடைய பொதுப்பொருள். வெளிப்படையான அர்த்தம்.
இந்த நாமாவானது நமக்கு உள்முகமாக என்ன காண்பித்துக் கொடுக்கிறது என்று பார்க்க வேண்டும்.
ஏற்கனவே, மந்த்ரிணீ சம்பந்தமாக சில விஷயங்களை பார்த்திருக்கிறோம். அதாவது, கதம்பவன வாஸினி என்று சொல்லும்போதும் சரி, கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா என்று சொல்லும்போதும் சரி என்று இதற்கு முன்பு ராஜமாதங்கி, மகாஷியாமளாபற்றி சில விஷயங்களை பார்த்திருக்கிறோம்.
இப்போது, மஹா ஷியாமளா என்றாலே மென்மையானவள் – (soft). அம்பிகையினுடைய மென்மையான சொரூபம். அந்த மென்மையான சொரூபம் இங்கு ஒரு வதம் செய்கிறது. மென்மையாக இருக்கக் கூடியது என்று நான் நினைக்கும் ஒன்று தன்னுடைய வீர்யத்தை காண்பிக்கின்றது.
அது எப்படி? இங்கு எதிர்த்து வந்தவன் யார்?
யாரை வந்து அம்பாள் வதம் செய்கிறாள் எனில், எதிர்த்து வந்த அந்த அசுரன் இருக்கிறான் அல்லவா? அவனே பண்டாசுரனுடைய மந்திரி. அவனுக்குப் பெயர்தான் விஷங்கன் என்பதையும் பார்த்தோம்.
இந்த விஷங்கன் என்கிற பெயர் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறதெனில், சங்கம் என்றால் ஒரு கூட்டம். அல்லது ஒரு பற்றுதல் என்று அர்த்தம். ஒரு attachment. இப்போது விஷங்கன் என்பதில், வி – சங்கம். இதற்கு என்ன பொருளெனில், விருத்தமான அல்லது விக்ருஷ்டமான சங்கம். சமஸ்கிருத இந்த சொற்றொடரின்படி தேவையற்ற சங்கம். விக்ருஷ்டமான சங்கம் எனில் தேவையற்ற அல்லது, தீய வகையில் இருக்கக் கூடிய ஒரு பற்றுதலாக இருக்கிறது. அப்படி தீய வகையில் இருக்கக்கூடிய பற்றுதல்தான் இங்கு விசங்கம்.
இதைத்தான் இந்த நாமம் இங்கு காண்பித்துக் கொடுக்கின்றது.
அதென்ன தீய வகையில் இருக்கக் கூடிய பற்று என்றால், அத்யாத்மமாக இல்லாமல் மீண்டும் மீண்டும் சம்சாரத்திற்குள் நம்மைப் போக வைக்கக்கூடிய பற்று. மீண்டும் மீண்டும் இந்த பிறப்பு இறப்பு சுழற்சிக்குள் போக வைக்கக்
கூடிய இந்தப் பற்று. அந்த பற்றுக்குத்தான் விசங்கம் என்று பெயர். அதனால்தான் பகவத்பாதாள் பஜ கோவிந்தத்தில்,
“சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
நிச்சலதத்வே ஜீவன்முக்தி”
இதில் முதலில் சொல்லக்கூடிய சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்று வருகிறதல்லவா… இந்த சம்சாரத்திற்குள் மீண்டும் மீண்டும் போக வைக்கக்கூடிய சங்கம் எதுவோ, அந்த சங்கத்திலிருந்து விடுபடுவதற்கு நமக்கு சத்சங்கமே உதவி புரிகிறது.
இங்கு விஷங்கன் என்பவன் அப்படிப்பட்ட ஒரு பற்று. ஜென்ம ஜென்மாந்திர கர்ம வாசனைகளால் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு பற்று. இந்த பற்றானது தேவையற்ற அஞ்ஞானத்தை வளர்த்துக் கொள்ளத்தான் உதவி செய்கிறது. அந்த அஞ்ஞானப்பற்றையே இங்கு அம்பாள் சம்ஹாரம் செய்கிறாள். அப்படி சம்ஹாரம் செய்வதற்கு அம்பிகையானவள் மந்த்ரிணியாக வருகிறாள். ராஜமாதங்கி, மகாஷியாமளாவாக வருகிறாள்.
அப்படி வந்து, தேவையற்ற இந்த அஞ்ஞானத்தை வளர்க்கக் கூடிய அந்த பற்றுதலை சம்ஹாரம் செய்கிறாள். அதை சம்ஹாரம் செய்தது மந்த்ரிணி. அந்த மந்த்ரிணி அதை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறாள். இது உள்ளே நமக்கு எப்படி impact ஆகிறதெனில், இந்தப் பற்றுதல் என்பது மிகமிக மென்மையான ஒரு விஷயம். அதாவது நாம் attachment என்பது மென்மையான ஒரு விஷயம். ஒவ்வொரு சமயத்திலேயும் நமக்கொரு பற்றுதல் தேவைப்படும். பிறந்தவொரு சமயத்திலிருந்து குழந்தைக்கு அம்மா ஒரு பற்று. அதுபோல ஒவ்வொரு பற்றும் தேவைப்படும். அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, ஆத்ம சாதகனுக்கு குரு ஒரு பற்று. ஒரு உபாசகனுக்கு அந்த உபாசனா தெய்வம் ஒரு பற்று. அப்படியே வந்து வந்து… நல்லவொரு அத்யாத்மமாக இருக்கக்கூடியவனுக்கு சத்சங்கம் ஒரு பற்று.
இப்படியாக இந்தப்பற்று நல்ல வகையில் முன்னேற வேண்டும். அப்படி முன்னேறாமல், இந்தப் பற்றானது அஞ்ஞானத்தை நோக்கி அழைத்துச் சென்றால், அதுதான் விஷங்கம். அப்படி அஞ்ஞானத்தை நோக்கி கொண்டுபோகும்
பற்றான அந்த விஷங்கனை…. அம்பாள் சம்ஹாரம் செய்கிறாள்.
(சுழலும்)