மந்த்ரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா
இந்த சம்ஹாரத்தை யாரால் செய்ய முடியுமெனில், மிக மிக மென்மையாக soft ஆக இருக்கக்கூடிய மந்த்ரிணியாலத்தான் செய்ய முடியும். இதை ஒரு force full ஆக செய்ய முடியாது. ஏனெனில், அந்தப் பற்று தேவைப்படுகின்றது. ஆனால், அது அஞ்ஞானத்திற்குள் அழைத்துக்கொண்டு சென்று விடக் கூடாது. ஏனெனில், ஒரு பிடிப்பு எல்லோருக்குமே தேவை. அந்தப் பிடிப்பானது அத்யாத்ம சம்மந்தத்தோடு இருக்கும் பிடிப்பாக இருக்க வேண்டும். அந்தப் பிடிப்புக்குத்தான் சத்சங்கம் என்று பெயர். அந்த சத்சங்கத்தைத்தான் ஆச்சார்யாள், சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்கிறார்.
பற்றை விட வேண்டுமெனில், ஒரு பற்றை பிடித்துக் கொள்ளப்பா… மீண்டும் சொல்கிறோம். நாம் ஒரு பற்றை பிடித்துக் கொள்ள வேண்டும். அஞ்ஞானத்திற்கு கொண்டு போகக்கூடிய பற்றை பிடித்துக் கொள்வதற்கு பதிலாக, நாம் பிடித்துக் கொள்ள வேண்டிய பற்றானது ஞானத்திற்குரிய பற்றாக இருக்கட்டும். அது சத்சங்கமாக இருக்கட்டும் என்பதுதான் இங்கு விஷயம். இந்த சத்சங்கத்தை நமக்குக் கொடுக்கக் கூடியவள், நமக்கு பிரசாதிக்கக் கூடியவள் யாரெனில் மந்த்ரிணீ. அவள் எப்படிக் கொடுக்கிறாள் எனில், மந்த்ரிணீயாக இருப்பதினால், குரு கொடுக்கக்கூடிய அந்த மந்திரத்தை ஜபம் செய்கிறோம் அல்லவா… அதுவொரு சத்சங்கம். குருவோடு நமக்கொரு பற்று ஏற்படுகிறதல்லவா… அதுவொரு சத்சங்கம்.
இதற்கு முன்பு கேய சக்ர ரதா ரூட என்கிற நாமாவில் பார்த்திருக்கிறோம். அம்பாள் சங்கீத யோகினியாக இருப்பதால் நாம சங்கீர்த்தனத்திற்கும் அவள்தான் விஷயமாக இருக்கிறாள். அப்போது இந்த நாம ஜபம், நாம சங்கீர்த்தனம் போன்றவற்றையும் இந்த ராஜ மாதங்கி கொடுக்கிறாள். அது என்ன செய்கிறதெனில், பக்தர்களோடு நம்மைச் சேர வைக்கின்றது. யாரெல்லாம் நாமாக்கள் சொல்கிறார்களோ, யாரெல்லாம் நாம ஜபம் செய்கிறார்களோ, நல்ல நல்ல விஷயங்கள் பேசுகிறார்களோ அவர்களோடு சேர வைக்கின்றது. அப்படிச் சேர வைக்கும்போது என்ன செய்கிறதெனில், அங்கு ஒரு பற்று. அப்போது நல்லவர்களோடு சேரக்கூடிய ஒரு பற்றை உண்டாக்கிக் கொடுக்கிறது.
அதற்கடுத்து மஹா ஷியாமளாவாக இருப்பதினால், அம்பாள் மென்மையாக ஒரு தாயாக இருந்து உபாசனை மூலம் தன்னையே ஒரு பற்றாக கொடுக்கிறாள். இவனுடைய அஞ்ஞானப்பற்றை நீக்குவதற்கு அத்யாத்மமான பற்றை கொடுக்கிறாள். அதுவும் எப்படியெனில், குருவை பற்றாக கொடுக்கிறாள். தன்னையே பற்றாக கொடுக்கிறாள். பக்தர்களையும் நல்லவர்களையும் பற்றாக கொடுக்கிறாள். அந்தப் பற்றையெல்லாம் அவன் பிடித்துக் கொண்டபோது அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு ஞானத்தில் முன்னேற ஆரம்பிக்கிறான். அதுதான் விஷங்க வதம். அதை அம்பிகையானவள் மென்மையான மாதங்கி ரூபத்தில் வந்து செய்கிறாள். அப்படி பண்ணக் கூடியதை சொல்வதுதான் இந்த நாமம்.
அதனால்தான் திருவள்ளுவரும் கூட ,
பற்றுக பற்றற்றான் பற்றினை
அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
– என்கிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை என்பதில் பற்றற்றான் என்பது குரு ஆவார். நம்முடைய பற்றை விடவேண்டுமெனில், பற்றற்றானாக இருக்கக்கூடிய குருவை பற்றிக் கொள்ள வேண்டும். நம்மை பற்றை விடவேண்டுமெனில் குரு மூலமாக நமக்கு காண்பித்து கொடுக்கக் கூடிய நல்ல சத்சங்கத்தை பற்றிக் கொள்ள வேண்டும். அந்தப் பற்று விட வேண்டுமெனில், குரு நமக்கு காண்பித்து கொடுக்கக் கூடிய அம்பாளை பற்றிக் கொள்ள வேண்டும். அப்படி பற்றினால் நமக்கு இந்த அஞ்ஞானப்பற்று விடுபட்டு விடும்.
எப்படி இந்த விஷயத்தை திருவள்ளுவர் குறள் மூலமாக காண்பித்துக் கொடுக்கிறாரோ, அதுபோல இங்கு அம்பாள் மந்த்ரிணீ சொரூபமாக இருந்து விஷங்க வதம் பண்ணி நம்மை நிஸ்ஸங்கம் பண்ணி சத்சங்கத்தில் வைக்கிறாள். நம்மை அஞ்ஞான பற்றிலிருந்து விடுத்து ஞானப்பற்றில் வைக்கிறாள். அந்த ஞானப் பற்றை கொடுக்கக் கூடியதுதான் இந்த நாமம்.
நமக்கு இருக்கின்ற attachment அத்யாத்மமாக மாறும்போது, தேவையற்ற attachment லிருந்து அப்படியே detachment ஆகின்றது. இன்னும் கேட்டால், spiritual attachment ஆக மாறுகிறது. அந்த transformation ஐ கொடுப்பது ராஜமாதங்கி, மந்திரிணி, மகா ஷியாமளா. இதுதான் இந்த நாமாவின் விஷயமாகும்.
இதற்கான கோயிலாக பார்க்கும்போது… பொதுவாக ராஜமாதங்கி, ராஜ ஷியாமளா என்று பார்க்கும்போது மதுரைதான். ஆனால், இங்கு வேறொரு கோயிலைப் பார்க்கலாமா.
கும்பகோணத்திற்கும், ஆடுதுறைக்கும் அருகேயுள்ள திருநீலக்குடி எனும் தலத்தில் அருளும் அம்பிகையான பக்தாபீஷ்டதாயினி என்றும், இறைவனை மனோக்யநாத சுவாமி என்பது சுவாமியினுடைய பெயர்.
ஏன், நாம் இந்த தலத்தைச் சொல்கிறோம்.
இங்கு ஈசன் மனோக்யநாதனாக இருப்பதால், நம்முடைய மனசு அவருக்குத் தெரியும். நம்முடைய மனசுக்கு ஒரு பற்று தேவை. நம்முடைய மனசு அவருக்குத் தெரிவதால் என்ன ஆகிறதெனில், அவரே நம்முடைய பற்று ஆகிவிடுகிறார். அப்படி பற்றாகும்போது என்ன நடக்கிறதெனில், நாம் இஷ்டப்பட்டதையெல்லாம் தருவதற்கு அம்பாள் அங்கு பக்தாபீஷ்டதாயினியாக வெளிப்படுகிறாள்.
நாம் நம்முடைய மனதை பரமாத்மாவிற்கு பற்றாக்கி விட்டோமெனில், இந்த மனசு இஷ்டப்படுவதையெல்லாம் பரமாத்மா நடத்தும்.
நாம் இதற்கு முன்பு எப்படி நினைத்தோமெனில், நம்முடைய மனசாற இஷ்டப்படறதெல்லாம் நடக்கணும். ஆனால், நம்முடைய பற்று பூராவும் உலகியல் பக்கம் இருக்கிறது.
அஞ்ஞானத்தை நோக்கிய பற்றாக இருக்கிறது. மனதில் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமென்று நினைக்கின்றோம். இது கர்மப் பற்றாகப் போய்விடும். ஆனால், இங்கு சொன்ன பற்று என்பது பகவானுக்கு கொடுக்கப்படும் பற்றாகும். நம்முடைய மனதே பகவானுக்கு சென்று விட்டது. அதனால், மனோக்கியநாதனாக இருக்கிறார்.
இந்த மனதானது பகவானைப் பற்றிய பிறகு, இந்த மனம் என்ன நினைத்தாலும் அது பகவத் சங்கல்பமாகத்தானே இருக்கும். அந்த பகவத் சங்கல்பத்தை நிறைவேற்றி வைப்பவள் யார். பக்தா அபீஷ்டதாயினி. பக்த அபீஷ்ட தாயினி. இந்த பக்தன் என்ன இஷ்டப்படுகிறானோ அதை கொடுக்கிறாள். ஏனெனில், இவன் பக்தன். இவன் மனசானது அவளை பற்றியிருக்கிறது.
குரு மூலமாக வந்த மந்திரம், சத்சங்கம் என்றுதான் இந்த மனது பற்றியிருக்கிறது. அப்போது இது ஞானப்பற்றாக இருக்கிறது. அப்படி ஞானப் பற்றாக இருக்கக்கூடிய மனதானது எப்படியிருக்கும்? பகவத் சங்கல்பமாக இருக்கும்.
இறைவன் மனோக்கியநாதனாகவும், அம்பாள் பக்தாபீஷ்டதாயினியாகவும் இருப்பதால், விஷங்கம் என்று சொல்லக் கூடிய கர்மப்பற்றை அஞ்ஞானப் பற்றை நீக்கி உயர்ந்த பற்றான ஞானப்பற்றை இங்கு அருள்கிறார்கள்.
இன்னொரு விஷயம், திருநீலக்குடியில் அப்பர் சுவாமிகள் ஒரு பாட்டு பாடுவார். ‘‘நீலக்குடி அரன் நாமம் பிடித்தே…’’ பஞ்சாட்சரம் என்கின்ற சுவாமியின் நாமத்தை பிடித்துக் கொண்டே சம்சாரத்தை கடந்து விட்டேன் என்று பாடுவார்.
(சுழலும்)