நன்றி குங்குமம் தோழி
உணவே மருந்து என்பது போல் நாம் நம் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. இவை பல நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அவை என்ன மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
சீரகம்: வைட்டமின் ஏ, சி சத்துக்கள் கொண்டவை. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவிலோ, தனியாகவோ சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது. பித்தத்தைத் தணித்து பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திட உதவும்.
வெந்தயம்: இரும்பு, கால்சியம் சத்துக்கள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மையைத் தரக்கூடியது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவைத் தடுக்கும். தாய்ப்பாலைப் பெருக்கும்.
மிளகு: இதய நோய், ரத்தக்கொதிப்பு, மூச்சுத்தொல்லை, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் உணவில் மிளகாய்க்குப் பதில் மிளகை சேர்த்துக்கொண்டால் நோயின் தன்மை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் நீக்கிவிடும்.
பூண்டு: வைட்டமின் சி, ஏ நிறைந்ததாகும். பாலில் பூண்டு, தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டம் தரவல்லது. வாயுப்பிடிப்பை நீக்கும்.
சோம்பு: இதில் உப்புச்சத்து உள்ளது. குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக்கும் தன்மை கொண்டது.
– அ.திவ்யா, காஞ்சிபுரம்.