மேஷம் என்றால் ஆடு என்று பொருள்.எல்லா மொழிகளிலும் மேஷ ராசியின் அடையாளச் சின்னமாக ஆட்டுக் கடாவே உள்ளது. இந்த ராசியில் செவ்வாய் ஆட்சி வீடாக உள்ளதால், ஆட்டுக்கடாய் போலவே சண்டை போடும் மூர்க்கத்
தனத்தை கொண்டுள்ளதால் ஆடு அடையாளச் சின்னமாக உள்ளது.
மேஷ ராசியானது நெருப்புத் தத்துவத்தை அடையாளமாக கொண்டதாக உள்ளது. ரோமானியர்களும் கிரேக்கர்களும் அவர்களின் யுத்த கடவுளான ‘மார்ஸ்’ என்ற பெயரை இந்த ராசியின் அதிபதிக்கு சூட்டியுள்ளனர். அதுபோலவே, தேவர்களை காப்பாற்றிய தீமைகளை எதிர்த்து யுத்தம் செய்யும் சுப்ரமணியரையே செவ்வாய் கிரகத்திற்கு அதிதேவதையாகவேத ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் மாதங்களில் சூரியன் மேஷத்தில் பயணிக்கும் காலத்தை மேஷ மாதம் என்றும் அழைத்தனர். காலபுருஷன் என்பதன் முதல் ராசியை மேஷத்திற்குத்தான் கொடுத்துள்ளனர். இவ்வாறு மேஷத்திலிருந்துதான் வரிசையாக ராசி தொடங்குகிறது.
மனித உடல் உறுப்புகளில் மேஷம் என்பது தலை,முகம், முளை ஆகியவற்றை குறிக்கிறது.
மேஷம் என்பது…
*சூரியனும் செவ்வாயும் இணைந்து வலிமை அடைவதால் அதீத வெப்பத்தை உற்பத்தி செய்யும் மண்டலமாக உள்ளது. ஆகவே, மருத்துவத்தை குறிக்கும் இடமாக உள்ளது.
*மேஷத்தை சர ராசி என்று சொல்லப்படுகிறது. சரம் என்பது நிலையற்ற தன்மையை குறிக்கிறது. அதாவது,மாறிக்கொண்டே இருக்கும் அமைப்பை கொண்டதாக உள்ளது.
மேஷம் தொடர்பான இடங்களும் பெயர்களும்…
*அதீத சூரிய வெப்பம் கொண்ட இடங்களும் மலையும் மலையை ஒட்டியுள்ள வறண்ட இடங்களும். இங்குள்ள மலைகளில் தாவரங்களோ செடி, ெகாடிகளோ அதிகம் காணப்படாது. ஆகையால், வெப்பத்தை குறைக்கும் சக்தி என்பது இருக்காது.
*செங்கல் சூளைகள் மற்றும் தென்னை மரங்கள் சூழ்ந்த பகுதிகளாக காணப்படும். இராணுவப் பயிற்சி பெறும் இடங்கள், காவல்நிலையம், காவல்துறை பயிற்சி செய்யப்படும் இடங்கள்.
*பெரிய ஆலைகள், இராணுவத் தளவாடங்களை உருவாக்கும் ஆலைகள், துப்பாக்கித் தொழிற் சாலைகள், வெடி மருந்து கிடங்குகள், இரும்பு மற்றும் எஃகு உருக்கு ஆலைகள், அனல்மின் நிலையங்கள், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையங்கள் தொடர்பில் வருகின்றன. மருத்துவமனைகள், மருத்துவத்திற்கான மருந்துகள் உற்பத்தி செய்யும் ஆலைகள் ஆகியவை.
மேஷம் தொடர்பான புராணக் கதைகள்
பிரம்மாவால் படைக்கப்பட்ட தலைமையானவர்களில் ஒருவரான தட்சன் ஒரு யாகம் நடத்துகிறார். இந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்காமலே யாகத்தை தொடர்கிறார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி தட்சனின் யாகத்தில் குதித்து தன்னை அர்ப்பணம் செய்கிறாள். இதனை கண்டுகொள்ளாமல் யாகம் நடைபெறுகிறது. இந்நிகழ்வை அறிந்த சிவபெருமான் கோபம் கொள்கிறார். தனது ஜடாமுடியிலிருந்து வீரபத்திரர் மற்றும் காளியை உருவாக்குகிறார். வீரபத்திரன் தட்சனின் தலையை கொய்து எறிகிறார். பிரம்மா முதலான தேவர்கள் யாகம் தடைபடும் என்று வேண்டிக் கொள்ளவே. ஒரு ஆட்டின் தையை இணைத்து தட்சனை உயிர் பெறச் செய்கிறார் என்பது புராணமாக உள்ளது. இதுவே, மேஷமான ஆட்டின் புராணமாகச் சொல்லப்படுகிறது.
அவ்வாறே, கிரேக்க புராணத்தின்படி, ஒரு தங்க செம்மறியாடு இருந்தது. இது ஃபிரிக்ஸஸ் மற்றும் ஹெல்லே என்ற அரச குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அனுப்பப்படுகிறது. இவர்களை பலியிட சதி செய்தாள் சிற்றன்னை ஈனோ. பலியிடப் போகும் சமயத்தில் தங்க செம்மறியாடு வந்து முதுகில் சுமந்து வானில் பறந்து செல்கிறது.
பறந்து செல்லும் வழியில் ஹெல்லே கடலில் வீழந்து முழ்கி விட்டாள். ஆனால், ஃபிரிக்ஸளை காப்பாற்றியது தங்க செம்மறியாடு. அங்கு மன்னன் ஏட்டஸ் அடைக்கலம் கொடுத்தான். அந்த தங்க செம்மறியாட்டை ஜியூஸ் கடவுளுக்கு மன்னன் பலியிட்டான்.
ஜியூஸ் கடவுள் தங்க செம்மறியாட்டின் நினைவாக வானில் ஒரு நட்சத்திர மண்டலத்தை உருவாக்கினார். இவ்வாறு மேற்கத்திய நாடுகளில் மேஷத்தை பற்றிய புராணங்கள் உண்டு.
மேஷம் ராசிக்கும் மேஷ லக்னத்திற்கும் உள்ள தொடர்புகள் என்ன
ராசி என்பது சந்திரனின் கதிர் வீச்சை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. லக்னம் என்பது சூரியனின் கதீர்விச்சை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. மேஷத்தில் சந்திரன் பாதிக்கப்படும் பொழுது உங்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கான பாதிப்புகள் உண்டு. மேஷத்தில் சூரியன் பாதிக்கப்படும் பொழுது உங்களின் இயங்களில் தடைகள் ஏற்படும் தந்தைக்கு பிரச்னைகள் உண்டாகலாம் என்பதே வேறுபாடு ஆகும். பொதுவாகவே மேஷத்தில் சூரியன் இருப்பவர்களுக்கு தந்தை பாதிக்கப்படுகிறார்கள்.
எச்சரிக்கை…
மேஷத்தை அசுப கிரகங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது மேஷ ராசி தொடர்பான இடங்களுக்கு சென்று வரும் பொழுது எந்த கிரகங்களால் பாதிப்பு ஏற்படுகின்றதோ அந்த கிரகங்களுக்கான தெய்வத்தை வணங்கலாம். அந்த இடத்திற்கு செல்லாமல் இருப்பது நலம் பயக்கும்.
மேஷத்திற்கான பரிகாரம்…
சூரியனும் செவ்வாயும் பலமடைவதால் திருவண்ணாமலை சென்று பௌர்ணமி கிரிவலம் வருவது சிறந்த பரிகாரம் ஆகும். விடாமல் பௌர்ணமி தோறும் சென்று வருந்தால் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்கம்.
குறிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று அங்கேயே தங்கி பின்பு ஒரு நாள் கழித்து வீடு திரும்பினால் நற்பலன்கள் உண்டாகும்.
சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்னக் காரர்களும் திருவண்ணாமலை சென்று வருவது வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழியை உருவாக்கும். காரணம் பாக்கியஸ்தானமாக (9ம்) வருவதால் மிகுந்த நன்மைகளை தரும் இடமாக
திருவண்ணாமலை உள்ளது.