மூன்றாம் பாசுரத்தின் தொடர்ச்சி…
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
இந்த பாசுரத்தில் ஓங்கி உலகளந்த என்று தொடங்குகிறது. இதில் உலகளந்த எனும் வார்த்தை வருகின்றது. இதில் ‘அளந்த’ என்கிற வார்த்தையை பாருங்கள். திருவிக்ரமன்… விக்ரமன் என்றாலே அளப்பவன் என்று பொருள். திருவிக்ரமன் என்கிற வார்த்தையைத்தான் தமிழில் ஓங்கி உலகளந்த என்று கொடுக்கிறோம். ஓங்கி உலகளந்த உத்தமன் என்று சொல்லும்போது, பகவான் மூன்று உலகங்களையும் அளந்தார் என்று பார்க்கிறோம். ஏனெனில், ‘‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்’’ என்று சொல்லும்போது ஏதோ அளவீடுகளை சொல்லிப்போவது போன்றே தெரிகின்றது.
பகவான் எல்லாவற்றையும் அளந்தவர் என்கிற திருவிக்ரமப் பெருமாளாக இருப்பதால், அதற்குப் பின்னால் வரக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளிலுமே ஒவ்வொரு அளவீடு காண்பிக்கப்படுகிறது. வெளிப்படையாக பார்க்கும்போது பாவை நோன்புக்குரிய பலன்களை சொல்வதுபோல்தான் இருக்கிறது. ஆனால், அங்கு ஒரு அளவீடு ஒரு விஷயம் காண்பிக்கப்படுகின்றது. அதைத்தான் இந்த பாசுரத்தில் பார்க்கிறோம்.
உலகளந்த பெருமாள் என்று தமிழில் சொல்கிறோம். திருவிக்ரமப் பெருமாள் என்று சமஸ்கிருதத்தில் சொல்கிறோம். அவர் அப்போது என்ன அளந்தார் எனில், பொதுவாகச் சொல்வதாக இருந்தால் மூன்று உலகங்களை அளந்தார். பாதாள லோகம், பூலோகம், வானுலகம் என்று மூன்று உலகங்களை அளந்தார் என்று சொல்கிறோம். இந்த மூன்று உலகங்களை அளந்ததை மட்டும்தான் இது குறிப்பிடுகிறதா? என்று பார்க்க வேண்டாம்.
எதெல்லாம் மூன்றாக இருக்கிறதோ அதையெல்லாம் அளந்திருக்கிறார். காலமும் இடமும் மும்மூன்றாக இருக்கிறது. காலமானது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்றாக இருக்கிறது. இடத்திற்குரிய மூன்று பரிமாணம் எதுவெனில், நீளம் அகலம், உயரம். இந்த மூன்று பரிமாணங்களில் இருக்கக் கூடிய இடத்தில்தான் இந்தப் பிரபஞ்சம் இங்கு வாழக் கூடிய உயிர்களெல்லாம் கட்டுப்பட்டு இருக்கிறது. ஆனால், இதைக் கட்டுப்படுத்துபவர் இதைக் கடந்தவராக இருக்கணும். கடந்தவராகவும் இருக்கிறார். அதனால், அவர் திருவிக்ரமனாக இருக்கிறார்.
காலத்தினுடைய மூன்று நிலைகளையும், இடத்தினுடைய மூன்று பரிமாணங்களையும் கடந்து இருப்பதால் நான்காவது பரிமாணமானத்தில் இருக்கக் கூடியவராக இருக்கிறார். அதனால்தான், அவரால் இந்த முப்பரிமாணங்களையும் அளக்க முடிந்தது. அளப்பது என்பது ஏதோ அளவீடுகளை மட்டுமே சொல்வது கிடையாது. அதையெல்லாம் அவர் கடந்திருக்கிறார் என்பதையும் காண்பிக்கிறது. அதனால்தான் உபநிஷதம் பிரம்மத்தை சதுர்த்தம் என்று
நான்காவதான நிலையில் இருக்கக் கூடியது என்று சொல்கிறது.
அவர் இன்னும் எதையெல்லாம் கடந்திருக்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்.
(தொடரும்)