Saturday, June 14, 2025
Home ஆன்மிகம் திருப்பாவை எனும் தேனமுதம்

திருப்பாவை எனும் தேனமுதம்

by Nithya

மூன்றாம் பாசுரத்தின் தொடர்ச்சி…

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்பதன் பொருளை சென்ற இதழில் பார்த்தோம். அதாவது, எந்தவொரு விஷயம் செய்தாலும், எந்தவொரு கர்மாவாக இருந்தாலும் யாக யக்ஞமாக இருந்தாலும் அங்கு ஆரம்பம் என்பது பகவானின் நாமம்தான். நாமசங்கீர்த்தனம்தான் ஆரம்பமாக இருக்கும் என்று பார்த்தோம்.

இப்போது அடுத்த வரியில் ஆண்டாள், ‘‘நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்’’ என்கிறாள்.

இங்கு யார் பொருட்டு இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறோமோ, அந்த காத்யாயினி தேவியை ஆண்டாள் இங்கு நம் பாவை என்று குறிப்பிடுகிறாள்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இந்த நம் என்கிற பதம் இருக்கிறதே அதற்கு தனித்த பெருமை உண்டு. ஸ்ரீ ரங்கத்தின் பெருமாள் நாற்பத்தெட்டு வருஷ காலம் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் எழுந்தருளும் நேரம் வந்தது. அப்போது யார் உற்சவ மூர்த்தி என்றே தெரியவில்லை. அதற்குள் ஒரு தலைமுறையே போய்விட்டது. பெருமாளுக்கு வஸ்திர கைங்கரியம் செய்யக் கூடிய ஈரங்கொல்லி என்கிற துணி துவைப்பவரிடம்தான் இந்த விஷயத்தை கேட்கிறார்கள்.
அப்போது பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து அந்த வஸ்திர தீர்த்தத்தை சாதித்தால், அந்த தீர்த்தத்தின் மூலம் என்னால் சொல்ல முடியும் என்று சொல்கிறார். அவர் வயதானவர். கண் தெரியாது. ஆனாலும், தன்னால் கண்டு பிடிக்க முடியும். வந்திருப்பவரே அழகிய மணவாளப் பெருமாள் என்று பெயர் இருந்தால் கூட, அந்த சந்தோஷத்தினால் வந்திருப்பவர் நம் பெருமாள்… நம் பெருமாள்… என்று சொன்னார். அதனால், அந்தப் பெயரே இன்றைக்கு நிலைத்து விட்டது. அதனாலேயே ஸ்ரீரங்க உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர்.

அதேபோல் ஆழ்வார் திருநகரியில் ஒரு சம்பவம் நடக்கிறது. ஆழ்வார் திருநகரியில் பவிஷ்யதாச்சார்யன் என்று சொல்லக் கூடிய, ஆழ்வாருடைய விக்கிரகம் இருக்கிறது. சாட்சாத் ஆழ்வாரே, மதுரகவியாழ்வாருக்கு பிரசாதித்த விக்கிரகம் அது. அந்த விக்கிரகம் ஆழ்வார் திருநகரியில் இருக்கிறது. ஒருமுறை அந்த விக்கிரகம் வெள்ளத்தினால் அடித்துப் போனதாகவும், மீண்டும் அந்த விக்கிரகத்தை கொண்டுவந்தபோது ஸ்ரீரங்கத்தைப்போன்றே ஒரு சம்பவம் நடந்தது. எது ஆழ்வாருடைய விக்கிரகம் என்று சந்தேகம் வந்ததாகவும், ஆழ்வார் திருநகரியில் பெருமாளே ஆதிப்பிரானே அசரீரியாக குரல் கொடுக்கிறார். இவர்தான் நம்மாழ்வார். அதனால், நம்மாழ்வார் நம்முடைய ஆழ்வார். எப்படி ஸ்ரீரங்கத்தில் நம்முடைய பெருமாள் நம்பெருமாள் என்று பெயரோ, எப்படி ஆதிப்பிரான் சொன்னதால் நம்முடைய ஆழ்வார் நம்மாழ்வார் என்று உரிமையோடு ஆனாரோ, அதுபோல இங்கு உரிமையோடு நம்பாவை என்கிறாள். ஸ்ரீ வைஷ்ணவத்தில் இனிமையோடு நம் பெருமாள். நம்மாழ்வார், நஞ்ஜீயர் என்று உரிமையோடு சொல்லக் கூடிய பெருமை இங்கு மட்டுமே உண்டு.

ஏன் இந்த உரிமை?

காத்யாயனி தேவி.

காத்யாயனி தேவி யார்?

சாட்சாத் பெருமாளினுடைய சகோதரி. அம்பாள். அவளை நோக்கித்தான் இந்த விரதமே இருக்கிறது. அவளின் அருள் மூலமாக கிருஷ்ணனை, எம்பெருமானை கணவனாக அடைய வேண்டுமென்று கோபிகைகள் பிரார்த்திக்கிறார்கள். எம்பெருமானை கணவனாக அடைய வேண்டுமென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தோழிகளோடு ஆண்டாள் பிரார்த்திக்கிறாள்.

அப்படிப்பட்ட காத்யாயனி தேவியை, நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் என்கிறாள்.

இதில் நீராடினால் என்பதை முதல் பாசுரத்திலேயே காண்பித்துக் கொடுத்து விட்டாள். இங்கு இந்த நோன்பை பொறுத்தளவில் ஸ்நானம் என்கிற நீராடுவதே ஒரு கிரியையாகும்.

அதனால்தான் முதல் பாசுரத்தில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! என்கிறாள். அதனால், நீராட்டம் என்பது முக்கியமான விஷயம். இங்கு இது வெறும் நீராட்டமாக இல்லை. இங்கு ரதசப்தமி , மகரசங்கராந்தி, தீபாவளி போன்ற பூஜைகளில் விசேஷ ஸ்நானம் செய்வோம். அதுபோல இது சிறப்பான நீராடுதல் ஆகும்.

சாற்றி நீராடுதல் என்றால் என்ன?

சாற்றுதல் என்றால் ஒரு விரதத்தின் பொருட்டு, ஒரு நோன்பை பொருட்டு, ஒரு திருவிழாவின் பொருட்டு, அந்த தேவதையை ஆவாஹனம் செய்து வைப்பது என்று அர்த்தம். இன்றைக்கும் கிராம கோயில்களில் இந்த வார்த்தை வழக்கத்தில் உள்ளது. ஏனெனில், பெரிய கோயில்களில் கொடியேற்றம் ஆகிவிட்டது என்பதை துவஜாரோஹனம் ஆகிவிட்டது என்று சொல்வோம். அதேசமயம், கிராமங்களில் சின்னச் சின்ன கோயில்களிலெல்லாம் சுவாமி சாத்தியாச்சு… சுவாமி சாட்டியாச்சு… என்று சொல்வார்கள். சில கிராம கோயில்களில் மண்ணால் ஒரு உருவத்தை செய்து விட்டு, பின்னர் திருவிழா முடிந்தபின்னர் அதை கரைத்து விடுவார்கள். ஒரு சில இடங்களில் முளைப்பாரி இடுவார்கள். சில இடங்களில் மண்ணால் அந்த அந்த தேவதையின் உருவம் செய்து பின்னர் விசர்ஜனம் என்று கரைப்பார்கள்.

இம்மாதிரி செய்வதற்கு கிராமங்களில் சுவாமி சாட்டியாச்சு… சுவாமி சாத்தியாச்சு என்று பொருளாகும். அதாவது திருவிழா ஆரம்பித்தாயிற்று என்று பொருள்.

இங்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தன் தோழியரை சேர்த்துக் கொண்டு நம் பாவைக்கு சாற்றி நீராடினால் என்று அழைக்கிறாள். காத்யாயனி தேவியின் உருவத்தை மண்ணால் செய்து வைத்து பூஜிக்கிறாள். இந்த நோன்பு விரதம் ஆரம்பித்து விட்டது என்று ஆண்டாள் காண்பித்துக் கொடுக்கிறாள். அதற்கு முக்கியமே நீராட்டம், நீராடுதல் என்றும் சொல்கிறாள்.

(தொடரும்)

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi