நன்றி குங்குமம் தோழி
பத்து பொருத்தங்களை பார்த்து, ஒன்பது கோள்களை ஆராய்ந்து, எட்டு திசை உறவினர்களை அழைத்து, ஏழு ஸ்வரங்கள் பாடி, ஆறு சுவை உணவுகளை கொடுத்து, பஞ்ச பூதங்கள் சாட்சியாக, நான்கு வேதங்களை ஓதி, மூன்று முடிச்சிட்டு, இருமணத்தை ஒரு மணமாக ஆக்குவதுதான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வைபோகத்தின் மிகவும் முக்கியமானது, அங்கு பரிமாறப்படும் உணவுகள்தான். திருமணம் சிம்பிளாக இருந்தாலும், பரிமாறப்படும் உணவுகள் சுவையாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நம் தமிழர்களின் பண்பாடு.
விருந்து படைப்பது மனித குலத்திற்குச் செய்யும் சேவை என்றும், அது திருமணத்தின் போது சிறப்பாகக் காட்டப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். தென்னிந்திய இந்து திருமணங்களில் பொதுவாக முற்றிலும் சைவ உணவுகள்தான் பரிமாறப்படுவது இன்றுவரை வழக்கமாக இருந்து வருகிறது. தலைவாழையிட்டு அதில் சாதம், பருப்பு, இனிப்புகள் என்று பரிமாறப்பட்டு வந்தாலும், இன்றைய மாடர்ன் டிரெண்டிற்கு ஏற்ப லைவ் கிச்சனில் சாட், ஊத்தப்பம், பாஸ்தா போன்ற உணவுகளும் தனி கவுண்டரில் இடம் பெற்று வருகிறது.
மேலும் இதனுடன் கேக், ஐஸ்கிரீம், பழங்கள், வெற்றிலைக்கு மாற்றாக பீடா போன்றவையும் உள்ளன. என்னதான் பல வெரைட்டி உணவுகள் கொடுத்தாலும், முகூர்த்தம் முடிந்த பிறகு பரிமாறப்படும் தலைவாழை விருந்தான மதிய உணவுதான் மிகவும் சிறப்பானது. இந்த உணவினை பெரும்பாலும் தலைவாழை இலையில்தான் பரிமாறுவார்கள். ஒரு பக்கம் உணவின் சுவை மற்றும் வெரைட்டி என்றாலும் மறுபக்கம் வாழையில் சாப்பிடும் உணவுக்கு தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
இது உணவிற்கு மேலும் சுவை சேர்த்து நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிற்கும் அதற்கான சுவையினை அள்ளித் தருகிறது. கி.பி 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் வாழை இலையில் உணவு பரிமாறுவது பற்றிய குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழமையான பழக்கம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.இரவு வரவேற்பு நிகழ்ச்சியில் வித்தியாசமான உணவுகள் பஃபே முறையில் பரிமாறப்பட்டாலும், முகூர்த்த சாப்பாட்டினை பரிமாறுவதற்கு என தனிப்பட்ட வழக்கம் உள்ளது. இதில் முதலில் வாழை இலையில் இனிப்புகள் பரிமாறப்படும்.
அதைத் தொடர்ந்து பச்சடி(வெள்ளரி சாலட் அல்லது தயிரில் வெங்காயம் அல்லது இனிப்பு மாங்காய் ஜாம்), வறுவல் (வாழைக்காய் அல்லது உருளை), கூட்டு, தேங்காய் சேர்க்கப்பட்ட பொரியல் மற்றும் காரமான ெபாரியல், அவியல், வடை, அப்பளம், உப்பு, ஊறுகாய், இறுதியாக பாயசம். சாதம் பரிமாறும் போது ஒரு சிலர் தக்காளி சாதம் / புளி சாதம் / வெஜ் பிரியாணியும் பரிமாறுவார்கள். அடுத்து சாதத்தில் பருப்பு நெய் தொடர்ந்து சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர். இறுதியாக வாழைப்பழம் மற்றும் வெற்றிலை தாம்பூலம் தனியாக பரிமாறப்படும். என்னதான் நாம் பல வெரைட்டி ஆடம்பர உணவுகளை பரிமாறினாலும், முகூர்த்தம் அன்று தலைவாழையில் பரிமாறப்படும் இந்த உணவின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தொகுப்பு: பிரியா மோகன்