நன்றி குங்குமம் டாக்டர்
நோய் நாடி நோய் முதல் நாடி
பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு
‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…‘ நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய இந்தப் பாடல் வரிகளை என்றைக்குமே நம்மால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு, வெயில் காலமும் விடுமுறை காலமும் ஒரே நேரத்தில் வருவதால், வெயிலோடுதான் நாம் உருண்டு, புரண்டு வளர்ந்திருக்கிறோம். இப்படி வெயிலைப் பற்றி பெருமையாகப் பேசிய காலங்கள் போய், இன்றைக்கு வெயில் என்றாலே பயப்படுமளவிற்கு காலநிலை நம்மை மாற்றிவிட்டது.
அதிலும், இந்த டிஜிட்டல் உலகில் ரன்னிங் கமெண்ட்ரி உடன், வாட்சப் பகிர்வுகளில் பெரும்பாலும், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கிறார்கள். சிலருக்கு ஹீட் ஸ்ட்ரோக் வந்து, மரணமடையும் செய்திகளையும் பார்க்கிறோம். இதனால் இன்னும் மக்களிடையே பயம் அதிகமாக ஏற்படுகிறது. உண்மையில், இந்த சூரிய வெப்பநிலையும், மனித உடலில் இருக்கும் வெப்பநிலையும் சேர்ந்து என்ன மாதிரியான செயல்களை மனித உடலுக்குள் செய்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்வோம். அதன் பின், வெயிலைப் பார்த்து பயப்படலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.
ஒரு சில உயிரினங்கள் ஒரே விதமான தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடல் செயல்படுகின்ற விதத்திலும், வாழ்கின்ற தகவமைப்புடனும் இருக்கும். ஒருசில உயிரினங்கள், ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப வெப்பநிலையை உடலில் மாற்றிக் கொண்டு வாழ்கின்ற தகவமைப்புடன் இருக்கும். நாம் மனிதர்களாகிய நம் உடலில் ஒரே விதமான டெம்ப்ரேச்சருடன் மட்டுமே நாம் வாழ முடியும் என்ற தகவமைப்பில் இருக்கிறோம். அதாவது நமது உடலில் 37 டிகிரி செல்ஸியஸ் மட்டும் எப்பொழுதும் இருக்கும். அதனால் தான் ஹீட் உடலில் அதிகமாகும் போது சில பிரச்னைகளும், குளிர் அதிகமாகும் போது சில பிரச்னைகளும் உடலுக்கு ஏற்படுகின்றது.
அதாவது, பேசேல் மெட்டபாலிக் ரேட் மூலம் நமது உடலில் வெப்பநிலை உற்பத்தி ஆகிக்கொண்டேயிருக்கும். அதாவது நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் நியூட்டிரிசியனாக மாறுவதற்கு மெட்டபாலிசம் தேவைப்படும். அந்த மெட்டபாலிசம் நடக்கும் போது, ஹீட் ஜெனெரேட் ஆகும். உதாரணத்திற்கு, உடற்பயிற்சி உடம்புக்கு நல்லது என்று இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செய்கிறோம் என்று பெருமையாகக் கூறுபவர்களைப் பார்க்கிறேன். அதாவது, உடலில் இயல்பாக வெப்பம் புரோடியூஸ் ஆவதை விட, உடலுக்கு உடற்பயிற்சி அதிகமாக செய்யும் போது, இருபது மடங்கு ஹீட் அதிகமாக உடலில் ஜெனெரேட்டாகும். அதனாலும் சிலருக்கு வெப்பம் வெளியேற முடியாமல் அவதிப்படுவார்கள்.
உடல் ஒரு இயற்கையின் பொக்கிஷம். இந்த மாதிரி மனிதர்கள் எதையாவது செய்வார்கள் என்று தான், இயல்பாகவே உடல் வெப்பத்தை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது, ஹீட் நமது உடலில் நான்கு முறைகளில் வெளியேறும். நாம் பள்ளிகளில் படித்த விஷயங்களான, ஆவியாதல், வெப்பக் கடத்தல், வெப்ப கதிர்வீச்சு, வெப்ப பரிமாற்றம் இவற்றின் வழியாக நமது உடலில் ஹீட் வெளியேற்றப்படுகிறது. இவை போக, தோலின் வியர்வை வழியாகவும், மூச்சுக்காற்று வழியாகவும் ஹீட் உடலிலிருந்து வெளியேறுகிறது.
இந்த மாதிரியான வழிகளில் ஹீட் வெளியேறுவதற்கு சுற்றுப்புறச்சூழலின் வெப்பநிலையும் மிகமுக்கியம். ஏனென்றால் மனித உடலின் வெப்பநிலை ஒரே அளவுடன் தான் எப்பொழுதும் இருக்கும். அதாவது, நமது உடலின் வெப்பநிலையை விட, சுற்றுபுறச்சூழலில் இருக்கும் வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, உடலில் 37 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் போதும், சுற்றுச்சூழலின் வெப்பநிலையும் குறைவாக இருக்கும் போது, உடலிலிருந்து வெப்பம், சீக்கிரமாக வெளியேறி விடும். அதாவது, மேலே சொன்ன மாதிரி நான்கு விதங்களில் உடல் தானாக, வெப்பத்தை வெளியேற்றி விடும். அந்த நேரத்தில் நமது உடலின் வெப்பநிலையும் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.
தற்போதைய சூழலில், உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் போது, சுற்றுபுறச்சூழலின் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸாக இருக்கும் போது, உடலிலிருந்து ஹீட் வெளியேறுவதுவதில் பல சிக்கல்கள் ஏற்படும். உடலின் வெப்பநிலையும், சுற்றுப்புறச்சூழலின் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் போது, நமது உடலால் அந்த வெப்பத்தை தாங்க முடியாது. அதனால், உடல் வெப்பத்தை வெளியேற்ற அதிகமாக வியர்க்கும் போது, உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படும். மேலும் உடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்கும் போது, Heat Cramps (தசைப்பிடிப்பு), Heat Exhaustion, Heat Syncope (மயக்கம்), Heat Stroke போன்ற விதமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமிருக்கின்றது.
உடலில் ஹீட் அதிகமாகும் போது, பெரும்பான்மையான பிரச்னைகள் என்ன வெல்லாம் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இந்த வெயில் கால உடல் பிரச்னைகளை எப்படி தவிர்க்கலாம்?
இயற்கையின் பருவநிலை மாற்றங்கள் நம் கண் முன்னே நடைபெறுகிறது. அதனால் முதலில் சொன்ன மாதிரி, நேரடியான சூரிய வெப்பம் அதிகமாக படாத அளவுக்கு நாம் கொட்டகைகள் போட்ட இடங்களில் விளையாடுவதும், ஒரு குடைக்குள் இருப்பது போல், நாம் கட்டிடங்களுக்குள் இருப்பதும் தற்போதைய சூழலில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும், வெயில் நேரங்களில் வெளியே செல்ல வேண்டி வந்தால், குடை எடுத்துச் செல்வது நல்லது. அதிலும் கருப்பு நிற குடையைத் தவிர்ப்பது நல்லது. எங்கு சென்றாலும், தண்ணீர் பாட்டிலுடன் இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லதாகும். நேரடியான சூரிய வெப்பத்தில் இருந்து நாம் ஒதுங்கி இருக்கும் போதும், தண்ணீரும் நன்றாக குடிக்கும் போது, ஹீட் சார்ந்த உடல் உபாதைகள் வருவதை நாம் தடுக்க முடியும்.
பெரும்பாலும் ஹீட் சார்ந்த உடல் பிரச்சனைகள் யாருக்கெல்லாம் வருமென்றால், காவல்துறையைச் சார்ந்தவர்கள், ராணுவத்தைச் சார்ந்த வீரர்கள், வெயிலில் நேரடியாக வேலைப் பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அத்லட்ஸ் இவர்கள் எல்லாம் அதிகமாக ஹீட் சார்ந்த உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவார்கள். அத்லட்ஸ் என்று ஏன் கூறுகிறேன் என்றால், விளையாடுபவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும், தீவிர உடற்பயிற்சி செய்பவர்களாக இருக்கட்டும், அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் போது, அது ஹீட் சார்ந்த பிரச்னைக்கு உள்ளாக நேரிடும்.
அதனால், ஹீட்டைப் பார்த்து பயப்படலாமா என்றால், பயப்பட வேண்டாம். ஆனால், கவனமாக இருக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. எந்தவொரு உயிரினமும் தங்களை கவனமாக பார்த்துக் கொள்ளும் போது, அந்த உயிர் எல்லா பருவ மாற்றங்களுக்கும் ஆரோக்கியமாக வாழ முற்படும். அதே போல் தான், இந்த வெயில் காலத்தில், நாமும் மருத்துவரின் ஆலோசனையோடு, முறையாக நம்மைப் பார்த்துக் கொண்டால், வெயிலைப் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை.
Heat Cramps தசைப்பிடிப்பு
பெரும்பாலும் வெயில் காலங்களில் மக்கள் உடம்பெல்லாம் ரொம்ப வலிக்கிறது என்று தான் கூறுவார்கள். வெயில் நேரத்தில் உடல் ஏன் வலிக்கிறது என்றால், நீர்ச்சத்து குறைபாடு தான் காரணமாக இருக்கின்றது. ஏனென்றால், உடல் வியர்த்து நீர் குறையும் போது, சோடியம் குளோரைடும் சேர்ந்து போகும். அதனால் உப்பும், நீரும் சேர்ந்து குறைவதால் உடலில் வலி ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சை என்னவென்றால், தண்ணீர் அதிகமாக குடிப்பது மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறும் வழிமுறை எதுவென்றால், எலக்ட்ரால் பவுடர் ORS Powder இல் சீரான அளவு சர்க்கரை, உப்பு கலந்திருப்பதால் அதைக் குடிப்பதாலும், உடல் வலி குறையும்.
தண்ணீரும், எலக்ட்ரால் பவுடரும் மட்டுமே வெயில் காலத்தில் ஏற்படும் உடல் வலிக்கு சரியான தீர்வாகும். இந்த நேரத்தில் கண்டிப்பாக வலி மாத்திரைகள், பாராசிட்டமால் போன்றவற்றை போடக் கூடாது. ஏனென்றால், நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், கிட்னிக்கு போகக்கூடிய ரத்த ஊட்டமும் குறைவாக இருக்கும். இந்த மாதிரி மாத்திரைகளை போடும் போது, கிட்னி சார்ந்த பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால், வெயில் நேரத்தில் ஏற்படும் உடல்வலி மற்றும் தலைவலிக்கு நீங்களாக மெடிக்கல் ஷாப் சென்று மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Heat Syncope மயக்கம்
அதிக நேரம் வெயிலில் நின்றிருந்தாலோ அல்லது வெயிலில் அலைந்து வந்திருந்தாலோ மயக்கம் அல்லது தலைசுத்தல் ஏற்படும். அந்த நேரத்தில் தண்ணீர் அதிகமாக குடிப்பது அல்லது எலக்ட்ரால் பவுடர் குடிப்பது அல்லது ஓய்வு எடுப்பது போன்றவற்றை மட்டுமே நாம் உடனடியாகச் செய்ய வேண்டும். மேலும், சிலருக்கு மயக்கம் ஏற்பட்டு, நினைவில்லாமல் ஹீட் அதிகமாகி ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்.
இந்த மாதிரி ஹீட் ஸ்ட்ரோக், ஹீட் சிம்ப்கோ ஏற்படும் போது, ரத்த நாளங்கள் வழியாக நீர் ஏற்ற வேண்டும். அதனால், வெயில் நேரத்தில் ஏற்படும் மயக்கம் மற்றும் நினைவு தவறிப் போவது போன்றவற்றுக்கு உடனே அருகிலுள்ள மருத்துவரை பார்க்கும் போது, சரியான சிகிச்சைகள் எடுக்கும் போது, இந்த பிரச்சனைகளை எளிமையாக நம்மால் சமாளிக்க முடியும்.