பக்தரின் கர்வம் அகற்றுபவர் என்று கண்ணனுக்கு ஒரு திருநாமம் உண்டு. அதை விளக்கும் கதை இது.பகவானான கண்ணன் என் தோழன். தோழமை பக்தியில் எனக்கு இணையானவர் யாருமில்லை என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு அதிகமாகவே உண்டு; வரவர அந்த எண்ணம் கர்வமாக மாறியது. கண்ணனுக்கு இது தெரியாமல் போகுமா? இந்த அர்ஜுனனுக்குப் பாடம் புகட்ட வேண்டும்” என்று தீர்மானித்தார், கண்ணன்.
அதற்கென்று ஏற்பாடானதைப் போல, ஒருநாள், ‘‘கண்ணா! வாயேன்!அப்படியே காட்டிற்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம்” என்று அழைத்தான்.‘இதுதான் சரியான சந்தர்ப்பம்!’ என்று தீர்மானித்த கண்ணன், ‘‘வா! அர்ஜுனா! போகலாம். அரச உடையில் வராதே! சாதாரண உடையிலேயே வா!’’ என்றார்.அர்ஜுனனும் ஒப்புக்கொண்டு அவ்வாறே போனான்.
காட்டிற்குள் போனவர்கள் மெள்…ளமாகச் சுற்றிப் பார்த்தார்கள்.அப்போது அவர்கள் பார்வையில் கருணையே வடிவான முனிவர் ஒருவர் தெரிந்தார். அவர் உலர்ந்த இலைகளை மட்டும் உண்டு, மெதுவாக நடந்து வந்தார். ஆனால் கருணை வடிவாகத் தெரிந்த அவருக்குச் சற்றும் பொருந்தாதவாறு, அவர் கையில் பளபளக்கும் ஒரு கத்தி இருந்தது.அதைப் பார்த்த அர்ஜுனன் குழம்பினான்; ‘‘கண்ணா! இது என்ன? கருணையே உருவெடுத்து வந்ததுபோல் இருக்கும். இந்த முனிவர் கையில் கத்தியா?” எனக் கேட்டான்.
‘‘அவரிடம் போய் நீயே கேள்! ஆனால், மறந்துபோய்க் கூட, உன் பெயரைச் சொல்லாதே!” என்றார், கண்ணன்.முனிவரை நெருங்கினான் அர்ஜுனன்; அவரை வணங்கி, ‘‘மா முனிவரே! தங்கள் கைகளில் போய், கத்தி வைத்திருக்கிறீர்களே! ஏன்?” எனக் கேட்டான்.அதற்கு முனிவர், ‘‘அப்பா! எனக்கு ஐந்து பகைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொன்றுவிட்டு, இந்தக் கத்தியை எறிந்து விடுவேன்” என்றார்.‘‘சுவாமி! அவர்கள் யாரென்று நான் அறியலாமா?” அர்ஜுனன்.‘‘முதல் பகைவன், பாண்டவர்களில் மூன்றாவதாக உள்ள அர்ஜுனன். அவனைக் கொல்ல வேண்டும்!” முனிவர்.
அர்ஜுனன் பயந்தான்; இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ‘‘சுவாமி! அவன் என்ன தீங்கு செய்தான் உங்களுக்கு?”எனக் கேட்டான்.கோபம் தணியாமலே பதில் சொன்னார் முனிவர்; ‘‘எனக்குத் தீங்கு செய்ய வேண்டுமா என்ன? எந்த நேரமும் நான் கும்பிடும் என் தெய்வமான கண்ணனைப்போய், அந்த அர்ஜுனன் தனக்கு தேரோட்டியாக வைத்துக்கொண்டு அவமானப் படுத்தினானே!அதற்காக அவனைக் கொல்ல வேண்டும். அவன்தான் எனக்கு முதல் பகைவன்.
‘‘அடுத்து, அந்த அர்ஜுனன் மனைவி-திரௌபதி! துச்சாதனன் அவனைத் துகில் உரியும்போது, ‘ ஓடி வா கிருஷ்ணா!’ என்று கத்திக் கூப்பிட்டு, என் தெய்வத்திற்கு இடையூறு செய்தாள். அதுமட்டுமா? அவர்கள் வனவாசம் இருக்கும்போது, துர்வாசர் சாபம் கொடுக்க வந்தார். அப்போதும் இதே திரௌபதி, ‘ஓடி வா கண்ணா!’ என்று, என் தெய்வமான கண்ணனைக் கூப்பிட்டு, இடையூறு செய்தாள்; ஓய்வெடுக்க விடவில்லை. ஆகவே, அந்தத் திரௌபதி எனக்கு இரண்டாவது சத்துரு.’’
‘‘அடுத்து, பிரகலாதன்! இரணியகசிபுவால் அவன் துன்புறுத்தப்பட்ட போது, ஒவ்வொரு தடவையும் என் தெய்வமான கண்ணனைக் கூப்பிட்டுத் தொல்லைப் படுத்தினான். முடிவில், என் தெய்வத்தைத் தூணிலிருந்து வரும்படியாகச் செய்து, மிகுந்த தொல்லைக்கு ஆளாக்கினான். ஆகவே, அந்தப் பிரகலாதனைக் கொல்ல வேண்டும்.
அவன் மூன்றாவது பகைவன் எனக்கு.’’‘‘அடுத்தது, நான்காவது – ஐந்தாவது பகைவர்கள், நாரதரும், தும்புருவும்! அவர்கள் செய்த குற்றம், எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்து விட்டு, ஒரு நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளி கொண்ட பகவான் இருந்தபோது, நாரதரும் தும்புருவும் வீணையை மீட்டிப் பாட்டுப்பாடி, பகவானின் தூக்கத்தைக் கெடுத்து விட்டார்கள். அவர்களை விடக் கூடாது. இவர்கள் ஐவரும்தான் என் பகைவர்கள்” என்று முடித்தார், முனிவர்.
அதைக் கேட்ட அர்ஜுனன், முனிவருக்கு நன்றி சொல்லி, அவரை வணங்கித் திரும்பினான்.முனிவரின் பக்தி அர்ஜுனனை வியக்க வைத்தது; ‘‘எந்த விதமான பலனையும் எதிர்பார்க்காமல் பக்தி செலுத்துவதே உயர்ந்தது” என்று நினைத்தபடியே, கண்ணனையும் அழைத்துக்கொண்டு, தன் இருப்பிடம் திரும்பினான்.
தொகுப்பு: V.R.சுந்தரி