Wednesday, June 18, 2025
Home ஆன்மிகம்அபூர்வ தகவல்கள் வைகாசியில் ஜொலிக்கும் வைபவங்கள்

வைகாசியில் ஜொலிக்கும் வைபவங்கள்

by Lavanya

வசந்தம் தவழும் காலம் வைகாசி மாதம். வைகாசி பிறந்தாலே ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்களுக்குக் கேட்கவா வேண்டும்? எங்கும் குதூகலமும் கொண்டாட்டங்களும்தான். அந்த வகையில் சில ஆலயங்களைக் காண்போம்.

*வைகாசி விசாகம் தமிழ் நாள்காட்டியின்படி முருகப் பெருமானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் மற்றுமுள்ள அனைத்து முருகன் கோயில் களிலும் வைகாசி விசாகப் பெருவிழா 10-நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. சில தலங்களில் இதை வசந்த விழா என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா அனைத்து நாட்களிலும் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் முருகப் பெருமான்.

வைகாசி விசாகத்தன்று தன்னுடைய ஆறு திருமுகங்களிலும் அருள் மழையைப் பொழிவார் என்பதால் இந்த நாளில் அவரை வழிபடுவது மிகவும் சிறப்பானது என சொல்லப்படுகிறது.
மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம், ‘வைகாசிப் பௌர்ணமி அன்று கோமுகி’ என்று பெயர் படைத்த பொய்கையில் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சய பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்’ என்று கூறி மறைந்தது. இதன்படியே புத்தர் பிறந்த வைகாசி பௌர்ணமியில் கோமுகி பொய்கையில் இருந்து வெளியே வந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய் பசிப்பிணி அகற்றி அறப்பணியில்
ஈடுபட்டாள் மணிமேகலை.

*கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் திருவிழாக்களுள் முக்கியமானது வைகாசி உற்சவம். அப்போது தேவியின் விக்ரகம் இரு வேளைகளிலும் திருவீதிஉலா வரும் வைகாசி உற்சவத்தின் போது கொடியேற்றுவதற்கான கயிறை ‘வாவாத்துறை’ என்ற மீனவர்கள் தயாரிக்கின்றனர். இதற்கு ஒரு பின்னணி உண்டு. தற்போது விவேகானந்தர் பாறை அமைந்துள்ள பகுதி முன்பு நிலப் பகுதியாக இருந்தபோது, அந்தப் பாறை மீது நின்றிருந்த இளம் பெண் ஒருத்தி தன்னை ஊர் எல்லையில் கொண்டு போய் விடுமாறு அந்த வழியே சென்ற மீனவர்களிடம் கேட்டுக் கொண்டாளாம்.

அவர்கள், ‘நீ பெண்ணாக இருப்பதால் தொடமாட்டோம்’ என்று கூறி பனைஓலைக் குடுவையில் வைத்து அவளை ஊர் எல்லையில் சேர்த்தார்களாம். ‘இந்த ஊர்த் திருவிழாவுக்கு நீங்கள்தான் இனிமேல் கொடிமரம் கயிறு திரித்துத் தர வேண்டும்’ என்று கூறி மறைந்தாளாம். அதன்படி இந்த மீனவர்களே திருவிழாவுக்கு கொடிமரக் கயிறு தயாரித்து அளிக்கின்றனர். கொடியேற்றத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே விரதம் கடைப்பிடித்து இறுதியில் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து கோயில் நிர்வாகிகளிடம் கயிற்றை அளிக்கிறார்கள்.

*திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைகாசி மாதத்தில் பால்குடம் எடுப்பது சிறப்பு. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இங்கே விசாகம் திருவிழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடபெறும். அப்போது கோயிலின் எதிரிலுள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் அகழிபோல் கட்டி அதில் நீர் நிரப்பி வைத்திருப்பர். விழாவின் முதல் நாள் உச்சிக்காலப் பூஜை முடிந்ததும் முருகப் பெருமானுக்கு மாலை வரை இந்த வசந்த மண்டபத்தில் விசேஷம் நடைபெறும். ஆராதனைகள் முடிந்ததும், சப்பரத்தில் ஏறி 11-தடவை வலம் வந்த பின்னர் முருகப் பெருமான் கோயிலுக்குள் போவார். கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

*வைகாசி என்ற பெயரில் வடஇந்தியப் புண்ணியத்தலமான காசியின் பெயர் வருவதால், அந்த மாதத்தில் காசிக்குச் சென்று வருவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனிதத்தீர்த்தங்களில் பௌர்ணமியன்று நீராடுவது சிறப்பு என்பர்.

*திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயிலாகும். இங்கே வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் ‘ஐந்து கருட சேவை நடைபெறும். அப்போது வேணுகோபாலர், நவநீத கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், சுந்தரராஜப் பெருமாள், புருஷோத்தமர் கோயில்களிலிருந்து ஐந்து சுவாமிகளும் எழுந்தருளி கருடசேவை காண்பர். சுவாமி புன்னைவனத்தின் மத்தியில் எழுந்தவர் என்பதால் வைகாசி விழாவின் ஏழாம் நாள் புன்னை மர வாகனத்தில் எழுந்தருள்வார். வைகாசி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் சுவாமிக்கு ‘மோகினி அலங்காரம்’ செய்யப்படும். அன்று முழுவதும் சுவாமி பெண் அம்சமாக இருப்பதால் பாமா ருக்மணி இருவரும் அருகில் இருக்கமாட்டார்கள்.

*சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயில் 1000-ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஆகும். திருமணி முத்தாற்றங்கரையோரத்தில் அழகுற அமைந்துள்ளது. இறைவன் சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார் என பல நாமங்கள். அம்பிகை சுவர்ணாம்பிகை. தல விருட்சம் பாதிரிமரம். வைகாசி மாதத்தில் ‘வைகாசி விசாகத் தேர்த் திருவிழா’ தான் மிகப் பெருந்திருவிழாவாக பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது பெருமான் பல விதமான வாகனங்களில் எழுந்தருளி காட்சி தருவார். முதல் நாளில் கொடியேற்றி பிடாரி விழா நடைபெறும். 5-ம் நாள் மாலையில் சுவாமிக்குத் திருக்கல்யாணமும், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் புறப்படுதலும் நடைபெறும்.

10-வது நாளில் திருத்தேர் விழா நடைபெறும். திருவிழா நாட்களில் தேவார, திருவாசக பாராயணம் நடைபெறும். இத்திருக்கோயிலில் வைகாசியில் குங்கும லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்பிகையை தரிசனம் செய்தனர். நிறைவு விழா நாளில் அம்மனுக்கு தாரை தப்பட்டை முழங்க சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடைபெறுகிறது. பூஜை முடிவில் பெண்களுக்கு குங்கும பிரசாதம், திருமாங்கல்ய சரடு, பிரசாதமாக வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு அழகான கண்ணாடி வளையல்கள் 21-ஆயிரம் எண்ணிக்கையில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

*திருமுருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் 4-வதாகத் திகழ்வது சுவாமிமலை. முருகப் பெருமானின் குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை மற்றொன்று திருச்செந்தூர் குருதலமாக விளங்கும் சுவாமி மலைக்கும். மகாகுருவாக விளங்கிய காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஜய வருடம் வைகாசி மாதம் 8-ம் தேதியன்று (20.5.1894) விழுப்புரம் நகரில் ஸ்ரீ மான் சுப்பிரமணிய சாஸ்திரிகள், திருமதி மகாலட்சுமி தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக உதித்த காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருக்குத் தங்கள் குலதெய்வமான சுவாமி மலையில் குடிகொண்ட சுவாமிநாதனின் திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். மகா பெரியவருக்கு ஜெயந்தி உற்சவம் வைகாசியில் கொண்டாடப்படுகிறது.

*கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா 21-நாட்கள் நடக்கும். இந்த திருவிழாதான் இத்தலத்தின் மிகப்பெருந் திருவிழாவாகும். வைகாசிப் பெருந்திருவிழாவைப் பொறுத்தவரை சித்திரை மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில் கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் கோலாகலமாக நடக்கும். கரூர் மாரியம்மன் வைகாசி திரு விழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடுவிழா கோலாகலமாக அமராவதி ஆற்றங்கரையில் தொடங்கும். பின்னர் ஆலய நுழைவாயிலில் கம்பம் நடப்படும். 17-நாட்களுக்கு பக்தர்கள் தொடர்ந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபடுகின்றனர். 17-ம் நாள் இரவு பூச்சொரிதல் விழா 49 பூத்தட்டுகளோடு வழிபடுகிறார்கள்.

பின்னர் தினந்தோறும் இரவு கரூர் மாரியம்மன் பல்லக்கில் புரிவாகனம், பூத, சிம்ம, அன்ன, சேடி, பானை, குதிரை, காமேதனு, புஷ்ப, கருட, மயில் மற்றும் கிரி வாகனங்
களில் விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. பின்னர் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என ஏராளமான பக்தர்களின் நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இறுதி விழா நாளில் வைகாசி தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. மறுநாள் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் பல மணி நேரம். விமரிசையாக கொட்டு முழக்கங்களுடன் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுகிறார்கள்.

*ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான்கங்கா நதிக் கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைஷாக பௌர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான்கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுகிறார்கள்.

*ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மா சலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப் பொலிவு அன்று முழுவதும் தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சுவாமிக்கு சந்தனப்பூச்சு செய்வார்கள்.

*திருப்போரூர், ஸ்ரீ முருகப் பெருமான் அசுரர்களை எதிர்த்து போர்புரிந்த மூன்று தலங்களில் ஒன்று. புகழ்பெற்ற மகான் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் வசித்த தலம். அவரது திருப்போரூர் சந்நதி முறை, அவர் அமைத்த மிகப் பெரிய கோயில், வற்றாத திருக்குளம் என பல அற்புதங்கள் செய்தவர். வைகாசி மாதத்தில் சுவாமிகளின் குருபூஜை நாளான விசாக நட்சத்திரத்தன்று பெரிய அபிஷேகமும் 300-படி திருப்பாவாடை நிவேதனமும் ஸ்ரீ சிதம்பர சுவாமிகளுக்குக் காட்சி உற்சவமும் நடைபெறுகின்றன. அன்று பெரிய அன்னதானக் கூடத்தில் அன்னதானமும் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று வேம்படி விநாயகருக்கு 1008-தேங்காய் உடைத்து வழிபாடு நடைபெறுகிறது.

*தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு மாபெரும் சோழப்பேரரசை சிறப்புற ஆட்சிபுரிந்தவன் ராஜராஜ சோழன். அம்மன்னனின் வரலாற்றை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில் வடக்குச்சுவரில் கல்வெட்டாக உள்ளது.

*திருச்சி அருகில் உள்ள ஐயர் மலை என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வர் (ரத்னகிரி) திருக்கோயில் கல்வெட்டில், வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

*பஞ்ச பாண்டவரின் ஒருவனான அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் வைகாசி விசாகம் நாளில்தான். இந்நாள் கேரளாவில் உள்ள திருவேட்களம் எனும் திருத்தலத்தில் வைகாசி பெருந்திருவிழா என்ற பெயரில் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

*சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோயிலில் வைசாகப் பௌர்ணமியன்று இறைவனும் இறைவியும் லிங்கத் திருமேனியில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.

*தமிழகத்தின் தென் மாவட்டங் களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான அம்மன் கோயில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் ‘கொடை விழா’க்கள் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெறுகின்றன.

*தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் வைகாசி விசாக நட்சத்திரம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

ஆர்.சந்திரிகா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi