நன்றி குங்குமம் தோழி
காரைக்குடியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புதுவயல் பேரூராட்சி சந்தை. அங்கு யாரிடம் சென்று டான்ஸ் கிளாஸ் எடுக்கும் பெண் வீடு எது என்று கேட்டாலே உடனே அந்த இடத்திற்கு அழைத்து சென்றுவிடுவார்கள். அந்த வீட்டை கடந்து செல்பவர்கள், சில நிமிடங்கள் அங்கிருந்து ஒலிக்கும் “தித்தித்தை… தித்தித்தை…” என கால் சலங்கையின் உயிர் சத்தத்தை கேட்ட பிறகுதான் நகர்கிறார்கள். நம் பாரம்பரிய கலையான பரதத்தை மற்றவர்களுக்கு சொல்லித்தந்து வருகிறார் 15 வயதே நிரம்பிய நிகிதா.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்கும் இவரிடம் சிறு வயதினர் முதல் கல்லூரி படிப்பவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தக் கலையினை கற்றுத்தந்து வருகிறார்.
‘‘என்னுடைய சொந்த ஊர் சாக்கோட்டை என்றாலும் வசிப்பது புதுவயலில்தான். அப்பா, அம்மா வழி பாட்டிகள் பரதக் கலைஞர்கள், தாத்தா தவில் வித்துவான் என கலைக்குடும்பத்தில் பிறந்தவள் நான்.
எனக்கு இரண்டு வயது இருக்கும் போதே என்னுடைய தாத்தா எனக்கு பரதம் பயிற்சி அளிக்கச் சொல்லி என் பெற்றோரிடம் சொன்னதாக என் அம்மா சொல்லி இருக்கார். அதனால் அம்மாவும் என்னை முறையாக பரத நாட்டிய பள்ளியில் சேர்த்துள்ளார். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அரங்கேற்றம் செய்துவிட்டேன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது சலங்கை பூஜையும் செய்திருக்கிறேன். என் குருநாதர் எனக்கு தஞ்சாவூர் பாணியில் பரதக்கலை பயிற்றுவித்தார்.
சிறுவயதில் இருந்தே பள்ளி, கல்லூரி மற்றும் பல கோயில்களில் நிகழ்த்தப்படும் நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இங்குள்ள ஸ்ரீ வீரசேகர உமையாம்பிகை கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ஆவுடையார் கோயில்களில் என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறி இருக்கிறது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்த போது நடைபெற்ற நிகழ்வில் பரத குருமார்கள் கலந்து கொண்டார்கள். அதில் நானும் ஒருத்தியாக பங்கேற்றதை பெருமையாக நினைக்கிறேன்.
எந்தவொரு கலையிலும் கடின உழைப்பு, விடாமுயற்சி இருக்க வேண்டும் என்று குரு சொல்லியிருக்கிறார். அவர் மாணவிகளிடம் அன்பும், அக்கறையும் செலுத்தினாலும், பரதம் என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். பரத வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்று கூறுவார். அதை நாங்களும் கடைபிடித்து வந்தோம். அந்தப் பழக்கத்தினை என் மாணவர்களும் பின்தொடர்கிறார்கள். நான் மாணவியாக இருந்த போது குருவிடம் இருந்து கற்றுக்கொண்ட போதனை மற்றும் அணுகுமுறைகளை என் மாணவர்களுக்கு சொல்லித் தருகிறேன். என் வயதை விட பெரியவர்களுக்கு பயிற்சி அளித்தாலும் அனைவரையும் என்னுடைய சகோதரிகளாகவே நான் பாவிக்கிறேன். சொல்லப்போனால் அவர்கள் வீட்டில் என்னை ஒரு குழந்தைப் போல் பாவித்து பாசமாக இருக்கிறார்கள்’’ என்றவர், பரதத்திற்கு மாணவிகள் செலுத்தும் கட்டணங்களை அங்குள்ள முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக அளித்துவிடுகிறார்.
‘‘என்னிடம் 100க்கும் மேற்பட்டவர்கள் பரதம் பயின்றாலும், எல்லோராலும் அதற்கான கட்டணத்தை செலுத்த முடிவதில்லை. அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். மேலும், பயிற்சிக்கு வரும் கட்டணத்தையும் நான் முதியோர் இல்லத்திற்கு அளித்துவிடுகிறேன். என் பாட்டிதான் பரதக் கலைஞர் என்றாலும், என் தாத்தா தான் பரதத்தின் அடித்தளம் பற்றி நிறைய வரலாற்றுக் கதைகளை சொல்லி இருக்கிறார். கலாஷேத்ரா நிறுவனர் ருக்மணி அருண்டேல் அம்மா அவர்களின் புகைப்படத்தை காட்டி இவர் மூலம்தான் பரதம் எல்லா இடங்களுக்கும் பரவியது என்றும்… எங்களின் மூதாதையர்கள் யாரெல்லாம் இக்கலையில் சிறந்தவர் என்றும் கூறியுள்ளார். என் தாத்தா சொன்ன கதைகள் மற்றும் வரலாறுகளை கேட்டுதான் எனக்கு பரதம் மேல் தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட்டது.
பரதக்கலையில் நான் ‘பத்மஸ்ரீ ’ வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்ட கால விருப்பம். மேலும், இந்தக் கலையினை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறேன். இந்தக் கலை நம் பண்பாட்டின் அடையாளம். அதனை ஏதாவது ஒரு தமிழ் காவியத்தை முன்னிலைப்படுத்தி அந்தக் காவியத்தை பரதக்கலை மூலம் படைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக திருக்குறளை தேர்வு செய்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருவினை ஏழு நிமிட பாடலாக இயற்றி விரைவில் நடன நிகழ்ச்சி ஒன்றை அமைக்க இருக்கிறேன். அதற்கான முயற்சியில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறேன். இதுவரை 83 மேடைகளில் என்னுடைய பரத நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. 40க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறேன். இன்னும் நான் ஏற வேண்டிய மேடைகள் பல உள்ளன.
மேலும், பரதக்கலையினை பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னோடியாக கடந்த ஆண்டு ஸ்ரீ வீரசேகர உமையாள் திருக்கோவிலின் ஆடித்தபசு விழாவின் 63 நாயன்மார்கள் திருவீதி உலாவில் எனது 63 மாணவிகள் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள். இது என் தாத்தாவின் நீண்ட நாள் ஆசை, அதை எனது மாணவிகளை கொண்டு நிறைவேற்றிய ேபாது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நடனத்தில் சாதனை படைத்தாலும் எதிர்காலத்தில் ஒரு IAS அதிகாரியாக வேண்டும் என்பது என் லட்சியம்’’ என்று கூறும் நிகிதா நாட்டியக் கலைமகள், நாட்டிய சிற்பம், ஒளிரும் சூரியன், வீரநாட்டிய வித்தகி, நவரச நாயகி, இன்ஸ்பயரிங் யங் வுமன் என பல விருதுகளை பெற்றுள்ளார்.
தொகுப்பு: ஆர்.கணேசன்