சென்னை: அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 61 வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக அக்கட்சி தொண்டர்களால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு மாலை அணிவித்து, கிரீடம் வைத்து கொண்டாடிய தொடர்களுடன் தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடினார். தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு 60 வயது நிறைவை எட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஓராண்டு கால நடவடிக்கையாக சனாதன சக்திகளை தனிமை படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என அரை கூவல் விடுத்தோம். தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் இந்த கருத்து பரப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வரும் 31 மற்றும் செப்டம்பர் மீண்டும் மும்பையில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் கூடி கலந்தாய்வு நடக்க உள்ளது. மேலும், என் மணி விழா நிறைவு மாநாடு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாநாட்டை நடத்த உள்ளோம். தமிழக முதலமைச்சர் தலைமையில், தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் தேசிய தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளோம். இந்த பிறந்தநாளை ஜனநாயக சக்திகளை ஐக்கியப் படுத்தும் உறுதிமொழி ஏற்கும் நாளாக கருதுகிறோம்.