ஆழ்வார்களில் முதன்மையானவர் எனக் கருதப்படுவதால் ‘நம் ஆழ்வார்’ எனப் பெயர் பெற்ற இவர் வேளாள வம்சத்தில் அவதரித்த வைணவ வித்து! இவர் 9ஆம் நூற்றாண்டில், திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில், பிரமாதி வருடத்தில், வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில் தோன்றியவர். நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்றும் கூறுவர்.
இவர் தந்தையார் பெயர் மாறன் காரி, தாய் உடைய நங்கையார் என்பவர். நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன் இவ்வாழ்வார், சடகோபன், பராங்குசன், சடாரி, வகுலாபரணன், குருகையூர் கோன் என்றும் அறியப்படு கிறார். இதில் சடகோபன் என்ற பெயருக்குப் ஒரு சுவாரசியமான செய்தி உண்டு!
‘சடம்’ என்றால் காற்று. பிறக்கும் குழந்தையை ‘முந்தைய ஜென்ம வினைகள்’ சார்ந்த காற்று சூழும்போது அது குழந்தையின் முதல் அழுகைக்குக் காரணமாகிறது. ஆனால், நம்மாழ்வார் பிறந்ததும் அழவே இல்லையாம். அதனால் சடம் என்னும் காற்றை முறித்ததினால், அவருக்கு சடகோபன் என்ற பெயர் சூட்டப்பட்டது. அது போலவே, திருமாலின் திருவடியின் அம்சமாகக் கருதப்படுவதால், பெருமாளின் சன்னதிகளில் பக்தர்களின் தலையில் வைக்கப்படும் ‘சடாரி’யாகவும் இவர் அறியப்படுகிறார். பக்தி என்கிற அங்குசத்தால் அந்த பரந்தாமனை தன் கட்டுக்குள் வைத்திருந்ததால், இவ்வாழ்வாருக்கு ‘பராங்குசன்’ என்ற காரணப்பெயர் உண்டு!
நம்மாழ்வார் ஓர் அசாதாரண குழந்தையாகத் திகழ்ந்தார். பிறந்த கணத்திலிருந்து குழந்தை கண்களைத் திறக்கவுமில்லை, எதுவும் உண்ணவுமில்லை. ஆனால், குழந்தை உடல் தேஜஸுடனே இருந்தது. பல நாட்கள், குழந்தை எதும் பேசாமலும் இருந்தது. மனமொடிந்து போன பெற்றோர், குருகூர் தெய்வமான ஆதிநாதர் கோயிலுக்குச் சென்று, குழந்தையை (வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம் வேண்டி) தரையில் விட்டபோது, அந்த தெய்வக் குழந்தை தவழ்ந்து சென்று கோயிலில் இருந்த புளியமரத்து பொந்தில் நுழைந்தது. அடுத்த 16 ஆண்டுகள், பத்மாசன கோலத்தில், ஆகாரமின்றி, நீரின்றி, அசைவின்றி, கண்மூடி, அந்த சூரியனே மனித உருவில் காட்சியளித்தது போல் பிரகாசத்துடன், அந்த புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வார் யோகநிலையில் வீற்றிருந்தார்!
அந்தக் காலகட்டத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணியத் தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி என்ற பண்டிதர், அயோத்தியின் தெற்கு வானத்தில் ஓர் அதி அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அப்பேரொளி புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்குப் புலப்பட்டது!
தியானத்தில் இருந்த நம்மாழ்வரை பேச வைக்க மதுரகவி அவரை கூப்பிட்டுப் பார்த்தார், சப்தம் ஏற்படுத்திப் பார்த்தார். பலனில்லை! தானே தண்ணொளி மிகு நிலையில் இருந்த மதுரகவியார், நம்மாழ்வாரிடம் ‘‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’’ என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், ‘‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’’ என்றார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்பந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்! அதாவது, முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது! ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம்! இங்கே, உடல் ‘செத்தது’ ஆகவும், ‘சிறியது’ ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிச்செய்த திவ்யப்பாசுரங்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், பலரும் அறிந்ததே. பிரபந்தத்தில் மதுரகவி ஆழ்வாரின் பங்கு, ‘கண்ணி நுண் சிறுதாம்பு’ என்ற தலைப்பில் அமைந்த 11 பாசுரங்கள் மட்டுமே. இவை தனது குருவான நம்மாழ்வாரைப் போற்றி பாடியவை. குருகூர் கோயிலில் உள்ள புளியமரம் ‘உறங்கா புளி’ என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும், ஆனால் காய்க்காது, மற்ற புளியமரத்தைப் போல் இரவில் மூடிக் கொள்வதில்லை.
நம்மாழ்வார் நான்கு வேதங்களின் (ரிக், யஜுர், சாம, அதர்வண) சாரங் களையும் முறையே, திவ்யப் பிரபந்தத்தில் வரும் திருவிருத்தம் (100), திருவாசிரியம் (7), திருவாய்மொழி (1102) மற்றும் பெரிய திருவந்தாதி (87) ஆகியவற்றில் அமைந்த திவ்யப் பாசுரங்கள் வாயிலாக அருளிச் செய்துள்ளார். திருவாய்மொழி பகவத் விஷயம் என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் காரணம் என்றால் அது மிகையில்லை. இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதியுள்ளார்.
நம்மாழ்வாரை வைணவர்கள் ‘தமிழ் வேதம் தந்த ஆழ்வார்’ எனப் போற்றுகின்றனர். வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். ‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திவ்ய தேசங்கள் 37 ஆகும். இவற்றில் ஸ்ரீரங்கம், திருப்பேர்நகர், திருமாலிருஞ்சோலை, வடக்கிலுள்ள துவாரகை, திருப்பதி, திருக்குடந்தை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், தஞ்சை மாமணிக்கோயில், திருமோகூர் குறிப்பிடத்தக்கவை. பாற்கடல் வாழ் அரங்கன்,
108 வைணவத் திருப்பதிகளில் கொண்ட திருக்கோலங்களோடு காட்சியளித்தது நம்மாழ்வார் ஒருவருக்கே! அதனால் தான் என்னவோ, இவ்வாழ்வார் திருக்குருகூர் கோயிலில் வீற்றிருந்தபடியே, அகக்கண்ணால் கண்ட காட்சிகளை வைத்து, 37 வைணவத் தலங்களைப் பற்றி திருப்பாசுரங்களை இயற்ற முடிந்தது போலும்!
ஆழ்வார் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார். நம்மாழ்வார் திருப்பேர் நகரில் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. திருவாய்மொழியின் இறுதியில் இவர் பாடிய பாசுரங்கள், இத்திருத்தலம் மற்றும் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பற்றியதே. நம்மாழ்வார் ‘அர்ச்சராதி கதி’ வாயிலாக பரமபதம் சேரவிருப்பது திருவாய் மொழியில் சொல்லப்பட்டுள்ளது! திருப்பேர் நகர் பெருமானாகிய அப்பக்குடத்தான் மார்க்கண்டேயருக்கு இறவா வரம் தந்ததால், இத்தலத்தில் இருக்கும் தீர்த்தம் (குளம்) மிருத்யு விநாசினி என்றழைக்கப்படுகிறது.