துவைத மகான்களின் ஒருவரான ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின், முப்பிறவியாக வியாசராஜ தீர்த்தரை மத்வ பெரியோர்கள் கூறுகிறார்கள். வியாசராஜதீர்த்தர், நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆஞ்சநேயரை பிரதிஷ்டானம் செய்துள்ளார். இதில் என்ன சிறப்புகள் என்றால், இவர் பிரதிஷ்டானம் செய்துள்ள ஆஞ்சநேயரின் தலையின் மீது வாலும், அதில் மணியும் இருக்கும். இதனை வைத்து இந்த அனுமான், வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதனை நன்கு அறியலாம். ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான ஆஞ்சநேயரை மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதில், கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 147 கோயில்களும், தமிழ் நாட்டில் 55 கோயில்களும், ஆந்திராவில் 24 கோயில்களும் ஆக மொத்தம் 226 கோயில்கள் அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவத்தில் இருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவத்தில் நமக்கு கொடுத்த அம்பத்தூர் .சுதாகர் ஆச்சாருக்கு நமது நன்றிகள்.
மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த இந்த 226 கோயில்களுக்கும், முடிந்த வரை நாம் பயணித்து, பகவானின் அனுகிரஹத்தாலும், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அத்துணை வாயு பகவானின் அனுகிரஹத்தாலும். அதற்கு முன்பாக, நிச்சயம் நாம் மஹான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா! 1460 – 1539 காலத்தில் வாழ்ந்தவர். வியாசராஜ தீர்த்தர், பன்னூர் என்ற குக்கிராமத்தில் பல்லண்ணா மற்றும் அக்கம்மாவிற்கு தேசஸ்த மத்வ பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் யதிராஜா. இதற்கு முன்னர், குழந்தை இல்லாத பல்லண்ணா – அக்கம்மா தம்பதியினர், மத்வ மகான் ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தரை அணுகினர். “உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும். இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு யதிராஜா என்று பெயர் வையுங்கள். அந்த குழந்தையை எனக்கு தானமாக தரவேண்டும்’’ என்கின்ற நிபந்தனையோடு குழந்தைப் பேறு வரம் கொடுத்தார். அதன்படி, தம்பதிகளுக்கு மூன்று குழந்தை பிறந்தது.
யதிராஜாவின் உபநயனம் முடிந்த பின்னர், பிரம்மண்ய தீர்த்தரிடம் ஒப்படைத்துவிட்டனர். யதிராஜாவின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்த பிரம்மண்ய தீர்த்தர், 16 வயதே ஆன யதிராஜாவிற்கு “ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர்’’ (தீர்த்தர் என்பதன் பொருள் மரியாதைக்குரிய) என்று பெயர் சூட்டி சந்நியாசப்பட்டமளித்தார். பிரம்மண்ய தீர்த்தர் பிருந்தாவனம் அடைந்த பின், வியாசராஜர் மடாதிபதியானார். கர்நாடகாவில் இருக்கும், முல்பாகல் என்னும் இடத்தில் ஸ்ரீ பாதராஜ தீர்த்தரின் கீழ் துவைத தத்துவங்களை மேலும் பலவற்றை கற்றார். வியாசராஜ தீர்த்தரை, `சந்திரிகாச்சார்யா’ என்றும் அழைக்கப்படுவர். தத்துவவாதி, அறிஞர், விவாதவாதி, வர்ணனையாளர் மற்றும் வேதாந்தத்தின் மத்வாச்சாரியாரின் துவைத பரம்பரையில் ஆகச் சிறந்த மகான் ஆவார். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு, புரவலர் துறவியாக வியாசராஜ தீர்த்தர் இருந்தார்.
கிருஷ்ணதேவ ராயருடனான அவரது நெருங்கிய உறவு, ஹம்பியில் உள்ள விட்டல் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் உறுதிப்படுத்தப்படுகிறது. கிருஷ்ணதேவ ராயரின் மரணத்திற்குப் பிறகு, வியாசராஜ தீர்த்தர் அச்சுத தேவருக்கு (கிருஷ்ணதேவ ராயரின் மகன்) தொடர்ந்து ஆலோசனை வழங்கினார். அதுமட்டுமல்லாது, சாளுவ நரசிம்ம தேவராயருக்கு ஆன்மிக ஆலோச கராக பணியாற்றினார். “கிருஷ்ணா… நீ பேகனே… பாரோ…’’ (Krishna Nee Begane Baro) என்ற கிளாசிக்கல் பாடல் உட்பட கிருஷ்ணரின் மீது எண்ணற்ற பல கீர்த்தனைகளை வியாசராஜர் எழுதியுள்ளார். ஒரு காலத்தில், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நித்ய பூஜைகளை செய்யும் பொறுப்புகள் வியாசராஜ தீர்த்தருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்கிறதுவரலாறு.மகான்கள், `ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர்’ மற்றும் `ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர்’ ஆகியோர் வியாசராஜரின் சீடர்கள் ஆவர்.
குருவிற்கு ஏற்ற சிஷ்யர்கள். மத்வ சித்தாந்தத்தை மக்களுக்கு பரப்பியதில் இவ் விருவருக்கும் மிகப் பெரிய பங்கிருக்கிறது. விஜயேந்திர தீர்த்தரின் மூல பிருந்தாவனம் கும்பகோணத்திலும், வாதிராஜ தீர்த்தரின் மூல பிருந்தாவனம் கர்நாடக மாநிலம் சோதை என்னும் இடத்திலும் உள்ளது. மகான் ஸ்ரீ வியாசராஜர், 1539ல் பிருந்தாவனமானார். அவரின் மூல பிருந்தாவனம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி என்கிற ஊரில் உள்ளது. இந்த இடத்திற்கு “நவ பிருந்தாவனம்’’ என்றொரு பெயரும் உண்டு.ஆம்! “ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்’’ (இவர் மத்வரின் நேரடி சிஷ்யர்), “ஸ்ரீ கவீந்திர தீர்த்தர்’’, “ஸ்ரீ வாகீஷ தீர்த்தர்’’, “ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர்’’ (இவர் திருக்கோவிலூர் ஸ்ரீ ரகூத்தம தீர்த்தரின் குரு ஆவார்), “ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர்’’ (இவர் மகான் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் குரு ஆவார்), “ ஸ்ரீ னிவாச தீர்த்தர்’’ (இவர் வியாசராஜ தீர்த்தரின் சிஷ்யர் ஆவார்), “ஸ்ரீ ராமா தீர்த்தர்’’, “ஸ்ரீ கோவிந்த வோடய தீர்த்தர்’’, என ஸ்ரீ வியாசராஜ தீர்த்தருடன் ஒன்பது பிருந்தாவனங்கள் இருப்பதால், இப்பெயர் பெற்றது.ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அதில் முக முக்கியமான அற்புதம், விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட கிருஷ்ணதேவ ராயரை காப்பாற்றியதுதான்.
ஒரு நாக கன்னியால் கிருஷ்ணதேவ ராயர் மாண்டு போக நேரிட்டது. அதனை தடுக்க ஒரு நாள் முதல்வர் கதையை போல், அன்றே மகான் ஸ்ரீ வியாசராஜர், ஒரே ஒரு நாள் கிருஷ்ணதேவராயர் சிம்மாசனத்தில் அமர்ந்து, ராஜாவை காப்பாற்றி உள்ளார். பேரரசரான கிருஷ்ணதேவராயனை தீண்டஅன்று கன்னி நாகம் அரண்மனைக்குள் வந்தது. அமர்ந்திருப்பது வியாசராஜர் என்று தெரிந்தும்கூட அவரை தீண்ட முற்பட்டது. காரணம், சிம்மாசனத்தில் யார் அமர்ந்திருக்கின்றார்களோ அவர்களை தீண்ட வேண்டும் என்பது தெய்வ சங்கல்பம். வியாசராஜரை தீண்ட ஓடோடியது. தன் தலையின் மீது போடப்பட்டுள்ள தலைப்பாகையினை கழற்றி அந்த நாக கன்னியின் முன்பு வீசினார். அது அங்கேயே நின்றது. அரண்மனையில் இருந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி, கண்கலங்கினர்.
சிறிது நேரத்திற்கு பின், அந்த நாகம் பின்னோக்கி சென்று திரும்பி விருட்டென்று சென்றுவிட்டது.இப்படி, மகான் ஸ்ரீ வியாசராஜரின் மகிமைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவரைப் பற்றி, தனிக் கட்டுரை தொகுப்பாக நாம் தியானிப்போம். தற்போது, அவர் பிரதிஷ்டை செய்த அந்த வாயு பகவானை, வாயு புத்திரனை, வாயு ஜீவோத்தமனை பற்றி படித்து; “அஞ்சிகினியாதகய்யா.. சஜ்ஜனரிகே… சஞ்சீவிராயர ஸ்மரனே மாதிட மேல…’’ என்று கன்னடத்துலே ஒரு பிரபலமான பாடல் உண்டு அதாவது, “இனி மக்களுக்கு பயம் எதற்கு? அந்த சஞ்சீவிராயரான அனுமனை நினைத்ததற்கு பின்னால் பயம் எதற்கு’’ என்னும் பொருள் தரும் அருமையான பாடலை தியானித்து உற்சாகமாக நாம் நம் வாழ்வை நோக்கி முன்னேறிச் சொல்வோம்!
(அடுத்த இதழில்
பார்த்தசாரதி கோயில் அனுமன்)
ரா.ரெங்கராஜன்